Thursday, August 25, 2011

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந்ததிகளை சென்று சேர்கின்ற கொடுமை காலம் காலமாக நிகழ்ந்த வண்ணமேயே இருக்கிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட,  தன் தாய் தேசத்திற்காக  உயிர் நீத்த பல வீர மறவர்களின் கதைகள் மறைக்கப்பட்டு கொடிய  ஆக்கிரமிப்பாளர்களே கதாநாயகர்களாக கதைகள் பின்னப்படுகின்றன. சில வேளைகளில் அந்த தியாகிகள்  துரோகிகளாக சித்தரிக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.
இப்படியான தோற்று போன ஒரு தேசத்தின் உண்மையான சரித்திரத்தை கதைகள் காவியங்கள் வாயிலாக எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய  அந்த தார்மீக கடமையை  உறுமி என்ற திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறார் சந்தோஷ்சிவன்.
முதன் முதலாக பாரத தேசத்தை  கடல் மார்க்கமாக வந்தடைந்து மேலைத்தேய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவராக புகழப்படுவர் போர்த்துக்கேய வர்த்தக கடலோடி வாஸ்கொடகாமா. ஆனால் வாஸ்கொடகாமா புகழப்படும் அளவுக்கு, போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்கு எதிராக முதன் முதலில் கிளர்ந்தெழுந்து வாஸ்கொடகாமாவை கொன்று பழிதீர்க்க போரிட்ட கேலுநாயக்கர் வைவாலி என்கிற இரு இளைஞர்களின் கதை வரலாறுகளில் இல்லை.
இந்த கதைதான், சந்தோஸ்சிவனின் உறுமி-பதினாறாம் நூற்றாண்டு போர்வாள்.
உறுமி-சுருளிவாள் [உறுமி என்பது தமிழில் சுருளிவாள் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் பிரபலமாக விளங்கிய ஒரு போராயுதம். இந்த ஆயுதம் ஒரு வீரனுக்கு இறுதி கலையாகவே பயிற்றுவிக்கபட்டதாக சொல்லப்படுகிறது. சாம்ராட் அசோகா படத்தில் சக்கரவர்த்தி அசோகனை  மாபெரும் வீரனாக சித்தரிப்பதற்காக சந்தோஷ்சிவன் இந்த உறுமியை பயன் படுத்தி இருந்தார்.]
 
போர்த்துக்கல்லில் இருந்து ஆபிரிக்கா வழியாக கேரளாவின் கலிக்கட்டை அடையும் வாஸ்கொடகமாவின் முதலாவது இந்தியபயணத்தின் விவரணையுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். பெண்களுக்கு பதில் கேரள மிளகிடம் மனதை பறி கொடுத்த காமா அதற்கு மூன்று மடங்கு விலை கொடுக்க முன் வந்த போதும் மன்னர் சாமுத்ரி வியாபாரத்தில் எந்த வித ஈடுபாடும் காட்டவில்லை.வெறும் கையுடன் போர்த்துக்கல் காமாவை மிளகு ஆசை விடவில்லை.
மீண்டும் 15 ம் நூற்றாண்டுகளில் காமா வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இந்திய பயணங்களுக்கு இடையில் விரிகிறது கதை. கி.பி 1502, இந்த முறை காமா வெறுமனே மிளகு வாங்க வரவில்லை. 15 பெரிய போர்கப்பல்களுடன் இந்தியாவில் ஒரு வணிக மையத்தை உருவாக்கும் திட்டத்துடனேயே வந்திருந்தான். துரதிஸ்ட வசமாக காமாவின் வழியில் மெக்காவுக்கு சென்று விட்டு வந்திருந்த முஸ்லிம் யாத்திரிகர்களின் கப்பல் ஒன்று அகப்பட அதை சிறைப்படிக்கிறான் காமா. கப்பல் பயணிகள் மற்றும் கப்பல் உரிமையாளர் எவரினது பேரத்திற்கும் காமா இணங்கவில்லை. கப்பல் பயணிகளை மீடக கேரளாவில் இருந்து  பேச்சுவார்தைக்கு ஒரு முதிய பிராமணனும் 8 வயதே நிரம்பிய சிரக்கல் கொத்துவாள் மகன் கேலு நாயக்கரும் காமாவின் கப்பலுக்கு அனுப்பபடுகின்றனர்.[நிராயுதபாணியாக குழந்தையுடன் செல்லும் பிராமணரை போர்த்துக்கேயர் எதுவும் செய்யமாட்டார்கள் என்பது நம்பிக்கை.]
எந்த விதமான சுமுக பேச்சுவார்த்தைக்கும் உடன்படாத காமா, அவனது சொல்வழி கேக்காத நாயின் காதை அறுத்து பிராமணனின் முகத்தில் வீசுவதுடன் பிராமணன் காதையும் அறுத்து துன்புறுத்தி, கேரளா மீது பீரங்கி தாக்குதல் நடத்த உத்தரவிடுகிறான்!! முஸ்லிம் யாத்திரிகர்கள் கப்பலுடன் உயிருடன் கொளுத்தப்படுகிறார்கள் . ஆத்திரமடைந்த சிரக்கல் கொத்துவால் தன்னந்தனியாக காமாவின் கப்பலுக்கு சென்று சண்டையிட்டு உயிரை விட இடையில் அதிஸ்டவசமாக கடலில் குதித்து உயிர் தப்புகிறான் சிறுவன் கேலு. கரையெங்கும் கப்பலுடன் எரியுண்டு இறந்து போன பயணிகளின் பிணங்களிலிருந்த நகைகளை பொறுக்குயபடி தனியே திரும்பும் கேலுவுக்கு அடைக்கலம் கொடுத்து தன்னோடு கூடவே வைத்திருக்கிறான் வைவாலி. இருவரும் சேர்ந்தே வளர்கின்றனர். சிறுவன் கேலு தான் பிணங்களிலிருந்து  பொறுக்கிய அந்த நகைகளை கொண்டே  உறுமி வாள் செய்கிறான் அவனுடைய நோக்கம் ஒன்றேதான்!!! வாஸுகொட காமாவை கொல்ல வேண்டும்.  பலவிதமான போர்க்கலைகளும் பயின்று சொந்த ஊரான சிரக்கல் திரும்பும் கேலுவின் பழிவாங்கும் பயணத்தில் முஸ்லிம் வீராங்கனை அரக்கல் ஆயிஷாவும் சேர்ந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் வாஷ்கொடகாமா வின் மகன் இஸ்ராடியோ காமாவை சிறைப்பிடித்து சிரக்கல் கொண்டுவரும் வீரதீரம் மிக்க  கேலுவின் பழிவாங்கும் பயணம் என்ன ஆனது…? எனபதுதான் உறுமி.
உண்மையான வராலாற்று சம்பவங்களை மையப்படுத்தி இரண்டு காலகட்டங்களில்  நகரும் திரைக்கதையை அருமையாக இணைத்திருக்கிறார் சந்தோஷ்சிவன். இன்றைய காலத்து இளைஞர்கள் கிருஷணதாஸ்(பிருத்விராஜ்) தார்சன்(பிரபுதேவா) கிருஸ்ணதாஸ் அவனுக்கு சொந்தமான பாரம்பரிய நிலம் ஒன்றை வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்க முயலும் போது அங்கு வசிக்கும் மக்கள் கூட்ட தலைவன் கிருஸ்ணதாசிற்கு அவனது  பூர்வீகமான கேலுநாயக்கரின் கதையை சொல்வதாக படம் செல்கிறது.
கேலுவாக பிருத்விராஜ் வைவாலியாக பிரபுதேவா அரக்கல் ஆயிசாவாக ஜெனிலியா சிரக்கல் கொத்துவாலாக ஆர்யா என பல தெரிந்த முகங்கள் என்பதால் படத்தில் ஒரு அன்னிய தன்மை இல்லை.
அரக்கல் ஆயிஷா1 அரக்கல் ஆயிஷா2
படத்தில் அரக்கல் ஆயிஷா வாக வரும் ஜெனிலியா வின் அறிமுகக்காட்சியே அதிர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும் இவ்வளவு காலமும் வெகுளித்தனமான பாத்திரங்களில் எப்போதும் சிரித்தபடி  பார்த்த ஒரு பெண்ணை கம்பீரமாக அரேபிய குதிரைமேல் குதிரைவீரர்கள் சூழ எதிர்பார்க்கவில்லை. அநாயசமாக வாளை சுழற்றுவதும் கழுத்தை அறுப்பதும் என அதகளம் பண்ணி இருக்கிறார். அவர் தோன்றும் முதலாவது சண்டை காட்சியில் அதிசயிக்க வைக்கிறார் மொத்தத்தில் யாரும் கனவுகண்டிராத ஜெனிலியா!! இந்த படம் பார்ப்பவர்களுக்கு இனி நிச்சயமாக கனவில் வரமாட்டார்.
அரக்கல் ஆயிஷா3 அரக்கல் ஆயிஷா4
கேலுவுக்கும் ஆயிஷாவுக்கும் இடையேயான மெல்லிய காதலை மிகவும் சாமர்த்தியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சந்தோஷ்சிவன் கேலுவின் பார்வையில் மட்டும் இருக்கும் அந்த மெல்லிய காதல் அவனது பழிவாங்கும் வெறியை மிஞ்சி விடவில்லை.  ஆனால் வைவாலியின் காதல் மனதுடனும் படத்துடனும் ஒட்டவில்லை படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீண்டு போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
பிருத்விராஜும் பிரபு தேவாவும் ஏனையவர்களும் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள் குறிப்பாக சண்டைகாட்சிகளில் மிரட்டுகிறார்கள். இசையமைப்பாளர் தீபக் தேவ் பின்னண இசையிலும் இரண்டு பாடல்களிலும் ரசிக்கவைத்திருக்கிறார். குறிப்பாக நீ ஆரோ.. பாடல் ஜேசுதாசின் குரலில் மனதை வருடும் ரகம்.
ஆனாலும் படம் முழுக்க ஒரே ஒருவர்தான் தெரிகிறார் சந்தோஷ்சிவன்.
சந்தோஷ்சிவனுக்கு பிடித்த நீர்குமிழி
வழமையாகவே அவர்படங்களில் ஈரம் செறிந்த பச்சை வண்ணம் இருக்கும் தண்ணீரை மிக அழகாக காட்டி இருப்பார் ஒவ்வொரு படத்திலும் குளோசப்பில் ஒரு நீர்க்குமிழி இருக்கும். படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் கதிரையுடன் கட்டி போடும் ரகம். குறிப்பாக அருவி ஒன்றின் ஒருபக்கம் கேலு மறுபக்கம் ஆயிஷா இடையில் தண்ணீர் வார்த்தைகள் இல்லை உணர்வுகளால் வடிக்கபட்டிருக்கும் அந்த காட்சி மிக அருமை. ஆனால் பாடல் காட்சிகளுக்கு அவசியமில்லாத படத்தில் 5 பாடல்கள் இடைச்செருகல்களாக வைத்திருப்பதும் படம் நீண்டு போனதற்கு இன்னுமொரு காரணம். இருந்தும் சலனம் சலனம் மற்றும் நீ ஆரோ இரண்டு பாடல்களும் அற்புதமாக வித்தியாசமான நடன அமைப்போடு காடசிபடுத்தப்பட்டிருக்கின்றன.
u1 u2
சண்டை காட்சிகள் அவற்றுக்கே உரிய பாணியில் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார் கேலுவின் பழிவாங்கும் வெறி படம் முழுவதும் இடைவெளியில்லாமல் வந்திருக்கிறது. மொத்தத்தில் சந்தோஷ்சிவன் படம் ஒன்று பார்த்த திருப்தி சாம்ராட் அசோகா விற்கு பிறகு கிடைத்திருக்கிறது இடையில் வந்த படங்கள் பார்க்க கிடைக்கவில்லை.

ஒரு வரியில் சொல்லப்போனால்
மண்ணா..? பணமா..? என்கிற மனித மனப்போராட்டத்திற்கு   விடையாக ஒரு படம் - உறுமி
இறுதியாக எனக்கு படத்திலிருந்து மிகவும் பிடித்த காட்சி…
u9

Thursday, August 18, 2011

வன்னேரி - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒரு உதாரண கிராமம்!!!

கடந்து போன கால் வாசி வாழ்க்கையில் இரண்டு தடவைகள் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறேன். கிராமம் என்றவுடன் இள நீல நிற வானத்தின் பின்னணியில் மென்பச்சை நிற வயல்களையும் இடையிடையே வளைந்து ஓடும் வாய்க்கால்களையும் நீங்கள் கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல, அந்தளவுக்கு நீர் வளம் இங்கு இல்லை. இலங்கையின் அதிகபட்ச வெப்பநிலை    நிலவும்  உலர்  வலய  காடுகளின்  இடையில்,   கிளிநொச்சியிலிருந்து 19கி.மீ  தூரதிலிருக்கும் அம்பலப்பெருமாள் சந்தியிருந்து, ஜெயபுரம் செல்லும் வீதியில் ஏறத்தாள 10கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய பண்டைய கிராமம் தான் வன்னேரி.
போகும் வழி நீண்டு செல்லும் நல்ல அகலமான கிரவல் தெரு இடையிடையே தெரியும் சல்லிகற்கள் முன்னொருகாலத்தில்அது தார் வீதி என்பதை சொல்லுகின்றன. அந்த வீதியால் ஒருமுறை சென்று வருபவர்களுக்கு உடம்பில் ஏதோ ஒரு பாகத்திலாவது வலி எடுக்காவிடில் அவர்களை வெறும் சடம் என்றுதான் சொல்ல வேண்டும்.“உலகத்தில் சில இடங்களில் அத்தியாவசியமானது..” என விளம்பரப்படுத்த படுகின்ற Toyato, Land cruiser ஓடுவதற்கே பொருத்தமான வீதி என்று சொல்லலாம்.  அந்த வெள்ளை நிற prado கள் கடந்து போன தேர்தலின் போது ஓடி திரிந்ததில் வீதி மேலும் பழுதானதுதான் மிச்சம்!!!
கிரவல் தெரு, புழதி படிந்த கோரைப்புற்தரை, இருள் பச்சை நிற மரங்கள், பனேயோலை வேலிகள்,  பெரும்பான்மையாக குடிசை வீடுகள், இடையிடையே அகொன்றும் உங்கொன்றுமாக இப்போதுதான் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கல் வீடுகள், பெயருக்கு ஒரு பள்ளிகூடம், ஊருக்கு ஒரே ஒரு கந்தன் கோவில், சற்றே தள்ளி ஒரு தேவாலயம், சந்தியில் ஒரு சென்ரிபொயின்ற்… ……
அத்தனை சடப்பொருட்களையும்  ஆட்கொண்டிருக்கும் புழுதி அனைத்தும்  ஒரே நிறம் மண்ணிறம்!!!!!! இந்த வண்ணம் எங்கள் மனங்களில் பெரிதாக படிவதாக இல்லை!!!
தொலை பேசி அலை வரிசைகள் கூட தொட்டுவிட்ட ஊரில்  செல்லிடப்பேசிகள் பாவிக்க அடிப்படை வசதி மினசாரம் இல்லை.. பெப்சி கோலா கூட கிடைக்கும்,ஆனால்  கொதிக்கும்!!! தேனீர் பாரவாயில்லை…. இருக்கவே இருக்கிறது  ஒரு குட்டி பெட்டி கடை கொஞ்சம் வடை வாய்ப்பனுடன்…!
இருந்தும் இந்த ஊரில், குழந்தைகள் அழும்போது மட்டும்தான்  குலைகிற அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கிறது.இசைக்கு இங்கு தேவை இல்லைஇரைச்சல்கள் குறைவு அத்தனையும் இயற்கையின் ஒலிகள். மக்கள் மனங்களில் இல்லாத அமைதி ஊரில் இருக்கிறது.
இத்தனைக்கும், வீதியின் இருமருங்கிலும் காடுகளில் பெரும்பான்மையாக நிமிர்ந்து நிற்கும் பாலை மரங்களே அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் மனஉறுதிக்கு அடையாளம். இந்த மண்ணோடு ஒன்றிப்போன  மனங்களின்  உறுதியில்தான்  அவர்களின்   வாழ்க்கை   நடக்கிறது. கவனிப்பாரற்ற இவர்களை கடந்து எல்லாமே போகும் தேர்தல் ஒன்றை தவிர, இந்த பிய்ந்து போன வேலிகளும் அப்போதுதான் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேடப்படும். அந்த வெள்ளை பிராடோகளில் வருபவர்களுக்கும் நாரி நோகும் என்று அப்போது இந்த கிரவல் தெருவுக்கும் ஒரு பட்டை தார் ஊற்றப்படும்.  தெருக்களில் எல்லாம் வசந்தங்கள் பல வீசும்…அறிவித்தல் பலகைகளில் மட்டும்!!! இப்படியே எல்லாமே கடந்து போகும் ஆட்சிகள் மாறும் ஆனால் அரசியல் மாறாது.
வன்னேரி  – இலங்கை ஜனநாயக சோசலிச  குடியரசின் ஒரு உதாரண கிராமம்!!! இப்படி எங்கள் நாட்டில் எத்தனை கிராமங்களோ?

Monday, August 15, 2011

Smoking-இலக்கு வைக்கப்படும் பெண்கள்

Girl-smoking
உலக வரை படத்தில் அமெரிக்காவுக்கு அடியில் இருக்கின்ற தீவுக்கூட்டங்களில் புரட்சியின் அடையாளமாக கொண்டாடப்படுகின்ற நாடு கியூபா. அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் தன்னுடைய குழுவினரை 15ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் இன்று கியூபா என்று அழைக்கப்படுகின்ற தீவுக்கு அனுப்பினார்.
இந்தப் பயணம் கியூபா என்கிற நாட்டை கண்டுபிடிப்பதுடன் நின்றுவிடவில்லை. உலகில் வருடாந்தம் 60 இலட்சம் பேரை பலிவாங்கும் புகைத்தல் என்கிற தீய பழக்கத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தது. அந்த பயணம் அவர்களுக்கு மிகவும் உல்லாசமாக இருந்திருக்க வேண்டும்.
அவர்கள் ஓரு காய்ந்த இலையினுள் சில மூலிகைகளை போட்டு சுற்றி அதன் ஒரு முனையில் நெருப்பு பற்றவைத்து மறுமுனையினூடு அந்த புகையை ஆழமாக தமது சுவாசத்தினூடு உறிஞ்சினார்கள். ..
அவர்களுக்கு அது போதையை அளித்தது..
அவ்வாறு செய்யும்போது அவர்கள் களைப்பை உணரவில்லை…
அவர்கள் அதை தொடர்ந்து பழக்கபடுத்திகொண்டார்கள் அவர்களால் அந்த பழக்கத்தை நிறுத்தவும் முடியவில்லை…
அதற்கு அவர்கள் அடிமையாகியிருந்தார்கள்…. அந்த மூலிகையை tabacos என்று அழைத்தார்கள்.
பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான அந்த மூலிகை அங்கிருந்து வணிக மார்க்கங்களினூடு ஏனைய நாடுகளுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டது. புகையிலை என்று நாம் அழைக்கின்ற அந்த மூலிகை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவுப்பகுதியில் பிரதான பணப்பயிராக பயிர் செய்கை செய்யப்பட்டு வருகிறது.
[ஒருகாலத்தில் புகையிலை என்றால் யாழ்ப்பாணம் என்ற ஒரு நிலை இருந்தது இன்று கூட தீவுப்பகுதி புகையிலைக்கு ஒரு மவுசு இருக்கிறது.]
அன்று ஆரம்பித்த இந்த பழக்கம் இன்று பலவேறு மாற்றங்களுக்குடபட்டு உலகம் முழுவதும் 200மில்லியன் பேரை ஆட்கொண்டிருக்கிறது இதில் 1பில்லியன் பெணகளும் அடக்கம்.
உலகம் முழுவதும் பரவலாக பலராலும்  புகைப்புடிக்கப்பட்டு வந்த இந்த புகையிலைக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக 1920 ஆம் ஆண்டளவில் ஜேர்மனிய விஞ்ஞானிகளால் கூறப்படும் வரைக்கும் எந்த வித பிரச்சனையும் வரவில்லை. அன்று  ஆரம்பித்த புகையிலைக்கும் மனிதனுக்குமான பிரச்சனை. இன்று, நுரையீரல் புற்றுநோய் சுவாசநோய்கள் மாரடைப்பு இருதயநோய்கள் உயர்குருதி அமுக்கம் பாரிசவாதம் போன்ற வியாதிகள் காரணமாக    மனிதனால் தவிர்க்க கூடிய  வீணான பெருமளவான இறப்புகளுக்கு ஒரேயொரு  பிரதான காரணி  புகைப்பிடித்தல் என   உலக சுகாதார நிறுவனம் அலறிக்கொண்டிருக்கிறது.
காரணம் புகையிலை புகைப்பிடித்தல் காரணமாக உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு 60லட்சம் பேர் இறந்து போகிறார்கள்.
இதில் 15லட்சம் பேர் பெண்கள்.
இந்த எண்ணிக்கையில் பொது இடங்களில் மற்றவர்கள் ஊதித்தள்ளுவதை சுவாசிப்பதன் காரணமாக இறந்து போகும்  6லட்சம் அப்பாவிகளும் அடக்கம்.
இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களில் அரைவாசிப்பேருக்கு மேல் அதன் காரணமாகவே உயிரை விடுகிறார்கள்.
Poor lungs
ஆனால் புகையிலை நிறுவனங்களின் கவலை வேறு விதமாக இருக்கிறது இவ்வாறு இறந்து போயும் பல்வேறு நோய்கள் காரணமாகவும் தங்கள் சந்தையை விட்டு விலகும் வாடிக்கையாளர்களை மீள் நிரப்பி தங்கள் அடிமைளை அதிகரிப்பதற்காக புகையிலை கம்பனிகள்  பெண்களை குறிவைத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. 

எமது நாட்டு பெண்களிடம் ஒப்பீட்டளவில் புகைப்பிடிக்கும் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது அதற்கு சொல்லப்படுகின்ற காரணம் பெண்களுக்கான உரிமைகள்  அதிகமாக இருக்கும் நாடுகளில்தான் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகமான பெண்கள்  புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இதனை உலக சுகாதார மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மேலும் உறுதிபடுத்தி இருக்கின்றன. புரட்சி கவிஞன் பாரதி கனவுகண்ட பெண்ணுரிமை என்பது வெறும் ஆண்களை போல உடைகள் அணிவதும் புகைப்பிடிப்பதும் மதுவருந்துவதும் தான் என இக்கால  பெண்கள் சிலரால் தவறான வடிவம் கொடுக்கப்படுவதுதான் வேதனையான விடயம்.

இது தவிர பெண்களிடம் பொதுவாக காணப்படும் தன்னம்பிக்கை குறைபாடு மற்றும்  புகைப்பிடித்தல் உடல் நிறையை குறைத்து கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது என்ற தவறான நம்பிக்கை போன்றனவும் பெண்கள் புகைப்பிடித்தலை நாடுவதற்கான காரணங்கள் என சொல்லப்படுகிறது.
image
இந்த மென்மையான உளவியலை மோப்பம் பிடித்துகொண்ட புகையிலை நிறுவனங்கள் பெண்களை குறிவைத்து பெருமெடுப்பில் விளம்பர வலைகளை வீசிவருகின்றன. அழகு கௌரவம் தனித்துவம் போன்ற கருத்துகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்கனவே குறிப்பிட்டளவான வாடிக்கையாளர்களை பெற்று கொடுத்துள்ள நிலையில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் என்ற விடயத்தில்  இரண்டும் கெட்டான் நிலையிலிருக்கும்  இலங்கை இந்தியா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டு பெண்கள் எதிர்காலத்தில் இந்த மாயவலைக்குள் சிக்குவதற்கான ஆபத்தான நிலையிருக்கிறார்கள், ஏனெனில் இவர்கள்தான் இலக்குவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
புகையிலை நிறுவன்ங்கள் பெண்களை ஈர்ப்பதற்காக கையாண்டு வரும் இன்னுமொரு சந்தைபடுத்தல் யுக்திதான் அவர்கள் சந்தைப்படுத்தியிருக்கும் வீரியம் குறைந்தசிகரெட் [light cigerette] அல்லது குறைவான *தார் [low tar] கொண்டுள்ள சிகரெட். இது சாதாரண சிகரெட்டை விட பாதுகாப்பனதென்ற தவறான நம்பிக்கையில் பல பெண்கள் ஆண்களை விட அதிகமாக இந்த light cigerette களை புகைப்பிடிக்கிறார்கள். உண்மையில் இந்த வகை light cigerette களை புகைப்பிடிக்கும்போது தேவையான அளவு நிக்கொட்டினை உள்ளெடுப்பதற்காக அதிக ஆளமாகவும் அதிக தடவையும் புகைப்பிடிக்க விளைவதன்  காரணமாக உடலில் உள்ளெடுக்கப்படும் புகையில் எந்த வித வேறுபாடும் இருப்பதில்லை.
உலக உகாதார நிறுவனத்துடன் இணைந்து புகையிலை கம்பனிகளை கட்டுபடுத்துவதற்கான சட்டதிட்டங்களை வகுப்பதன் மூலமும் மக்கள் மத்தியில்  புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் மக்கள் இந்த தீய பழக்கத்தை அண்டாது  பாதுகாக்கும் பாரிய பொறுப்பு ஆட்சியாளர்களின் கையிலேயே உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் செய்ற்திட்டத்திற்கு அமைவாக  உலகம் முழுவதும் இதுவரை 3.8பில்லியன் மக்கள்  புகையிலைக்கெதிரான முழுமையான கொள்கைகள் மூலம் பாதுகாக்க பட்டிருக்கிறார்கள். இதுவரை உலகின் 19 நாடுகளில் மட்டுமே சிகரெட் பெட்டிகள் WHO விதிகளுக்கமைவான படங்களுடன் கூடிய சுகாதார எச்சரிக்கைகளுடன் மக்களை சென்றடைகின்றன. இந்த வரிசையில் எங்கள் நாடு நிச்சயமாக கடைசியில்தான் இணையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

தார்[tar] - புகையிலையை பகுதியாக எரிக்கும்போது உருவாகும் விளைபொருளே தார் tar என அழைக்கப்படுகிறது. இதுதான்  புகையிலை புகை கொண்டிருக்கும்  நுரையீரலை பழுதடைய செய்கின்ற நுரையீரல் புற்று நோயை ஏற்படுத்துகின்ற பிரதான காரணி. இதில் 19 வகையான புற்றுநோய் காரணிகள் (carcinogens) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
[தெருவுக்கு போடுவதும் இவ்வாறுதான் அழைக்கபடுகிறது ஆனால் இரண்டும் ஒன்றல்ல]
நிக்கொட்டின் [Nicotin] - புகையிலையில் காணப்படும், மீண்டும் மீண்டும் புகைப்பிடிக்க தூண்டும் ஒருபதார்த்தம் (psychological dependence).
தொகுப்பு :-
wikipedia - History_of_smoking
WHO Health topics - Tobacco

Tuesday, June 14, 2011

தேடி வந்த நிம்மதி.

காலை 7 மணி தனது கடமையில் கண்ணும் கருத்துமாக நான்காவது தடவையாக அடித்த அலாரத்தை நிறுத்திவைத்து விட்டு அருகில் காதில்லாத பிறவி போல இன்னும் இழுத்து போர்த்தி கொண்டு உறங்கி கொண்டிருந்த நிர்மலாவின் கண்களை உற்றுபார்த்து கொண்டிருந்தான் விமலன். மெல்ல மெல்ல அந்த கரிய இமைகள் பிரிந்து அவள் பார்வை அவன் மேல் படர்ந்தது.

கொஞ்ச நேரம் அவனை புரியாமல் விழித்தவள், மறுகணமே சோம்பல் முறித்தவாறு அவளது இயற்கையான குறும்புத்தனம்   முகத்தில் படர.  

விமல் பேசாமப்படும் இன்னும் கொஞ்ச நேரம் !! ப்ளீஸ்..  அவள் கண்களில்  எஞ்சியிருந்த தூக்கம் கெஞ்சியது அவன் பார்வையை தவிர்க்க மறுபடியும் மறுபக்கம் புரண்டு படுத்தாள்.

விமலனும் அதை புரிந்து கொண்டவனாக எழுந்து சென்று அந்த அறையின் ஜன்னல்களை திறந்தான் அவர்களை பார்க்கவென்றே காத்திருந்தது போல நுவரெலியாவின் மலைமுகடுகளுகிடையே இருந்து மேகங்களை விலக்கியவாறு வந்து விழுந்தன  சில சூரிய கீற்றுகள்.

விமல் ஜன்னலை சாத்தும்..!

திரும்பிபாரத்தான் விமலன் ஒளிக்கீற்றுகள் நிர்மலாவின் முகத்தில் சின்ன சின்ன

பொட்டுக்கள் போட்டிருந்தன..

விமல் !

என்ன..!

இப்ப ஜன்னலை சாத்த போறீரா இல்லையா !

‘………………………..’

விமலன் ஜன்னலினூடாக பார்த்தான் அந்த காலைப்பொழுதில் நுவரெலியாவின் மலைக்குன்றுகள் மேககூட்டங்களை அணிந்து ரம்மியமாக காட்சிஅளித்தன. அவன் முகத்திலும் வெயில் விழுந்தது காலை வெயில் தான் ஆனாலும் யாழ்ப்பாணத்து வெயிலின் சூடு இல்லை.

நிர்மலா இந்த வெயில் சுடவே இல்லை !

சொல்லியவாறே அவளை சீண்டுவதற்காக கொஞ்சமே விலக்கி இருந்த ஜன்னலின் திரைச்சீலையை அகலத்திறந்தான்  இப்போது காலைவெயில் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது.. கூடவே நிர்மலாவின் முகத்தில் கோபம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. வெயில் சுட்டதோ இல்லையோ விமலனின் இந்த செயல் அவளை ரொம்பவும் சுட்டிருக்கவேண்டும்.

இதுதான் கடைசி..!உம்மோட இனி கதை இல்லை..!

சொல்லியவாறே விடுக்கென்று கோபத்துடன் படுக்கையை விட்டு எழுந்து வெளியேறினாள் நிர்மலா.

விமலன் எதுவும் பேசவில்லை அவனது  முகபாவம் இந்த வார்த்தையை கேட்பது இது ஒன்றும் முதல் தரம் இல்லை என்பது போல இருந்தது.

ஒரு மணி நேரம் மிக அமைதியாக கழிந்திருந்தது இருவரும் அவர்களது விடுதி இருந்த அந்த மலைச்சரிவிலிருந்து இறங்கியவண்ணம் இருந்தார்கள்.

விமலன் அவளை சமாதானப்படுத்த கையாண்ட வழமையான உத்திகள் அனைத்தும் தோற்று போயிருந்தன இனி அவன் புதிதாகதான் ஒன்றை கண்டு பிடிக்கவேண்டும்.

அவர்கள் நுவரெலிய நகரை அண்மித்து இருந்தார்கள்,   அவர்கள் நடந்து கொண்டிருந்த நடைபாதையின்  ஓரமாக அழகிய புற்கள் வைப்பதற்காக ஒரு சில்ர் அதற்கு மண் போட்டு செப்பனிட்டு கொண்டிருந்தார்கள்.  எங்கு பார்த்தாலும் இரண்டே நிறம் ஒன்று பச்சை அடுத்தது வெள்ளை வெள்ளையாய் சுற்றுலாப்பிரயாணிகள் நகரமே காசை உடுத்திருந்தது. அதற்குள் உலாவி திரிந்தவர்களில் தோட்ட தொழிலாளிகளளை தெளிவாக வேறுபடுத்தி காட்டியது அவர்கள் உடுத்திருந்த வறுமை!   

சிந்தித்தவாறே மெதுவாக நடந்து கொண்டிருந்தான் விமலன்.

விமல் இங்கே பாருமன் !

அதிசயமாக கலைந்த அந்த அமைதியில் விளைந்த ஆச்சரியத்தை முகத்தில் காட்டாத விமலன் என்ன நிம்மி..! என்று கொஞ்சம் குழைந்தான் ! அது அந்த நேரத்தில் தேவையாகவும் இருந்தது.

அவள் காட்டிய திசையில் ஒரு பெரிய பலகையில் நுவரெலிய நகரை அழகுபடுத்தும் திட்டம் என ஏதோ ஏதோ எழுதி பலரது பெயர்கள் போடப்பட்டிருந்தன. அதைத்தான் சுட்டி காட்டியிருந்தாள் நிர்மலா.

யாழ்ப்பாணத்திலயும் இப்பிடி ஒரு திட்டம் கொண்டுவரலாம் தானே ..! 

இது ஒரு சுற்றுலா நகரம் நிர்மலா..! அழகா இருந்ததாதான் அதிகம் பேர் வருவார்கள் அப்பதான் பெரிய பெரிய புள்ளிகளின் சுற்றுலா விடுதிகளில் எல்லாம் காசு புரளும் உன்ர ஊரை அழகு படுத்தி அவங்களுக்கு ஒண்டும் கிடைக்காது நிர்மலா ! கீழ பாத்தனி தானை தோட்ட தோழிலாளிகளின் லயங்களின் கேவலத்தை அதை சீர்படுத்த இவ்வளவு நாளும் ஒரு திட்டமும் இல்ல..!

விமலனிடம் இருந்து ஒரு நெடியபெருமூச்சு வந்தது..நுவரெலியா அருகில் அழகிய மனைவி அந்த சந்தர்பத்தில் உண்மையில் தேவையில்லாத ஒன்று.

உங்களுக்கு எங்க போனாலும் அரசியல் தான் .. ! விமல் இங்க பாரும் இங்க இருக்குது அம்பாள் சைவ உணவகம் என்ரபிரண்டு கூட நல்ல சாப்பாடு நல்ல உபசரிப்பு எண்டு சொன்னவள் ! இங்க போவம் என்ன சொல்லுறீர்...?

நிம்மி என்ன இருந்தாலும் உன்ர சமையல் போல வருமோ !

திரும்பி பார்த்து முறைத்தாள் நிர்மலா !

உண்மையா தான்டி .. வழமை போல இன்னுமொரு பொய் சொன்னான் விமலன்!சும்மா நடிக்காதீங்க விமல்!

izs013101

இருவரும் உள்ளே சென்று இரு காலியான இருக்கைகளின் கால்களுக்கு வேலைவைத்தார்கள். இன்னும் ஒரு மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்ட   விமலனுக்கு கொடுத்து வைக்கவில்லை போலும் அவளை மேலும் சீண்டி விட  ஒரு குறும்பு கோபத்துடன் நிமிர்ந்த விமலனை அதிர்ச்சியுடன் வரவேற்றது அவளது முகம்.

அவளது கண்கள் அவனுக்கு பின்னால் நிலைத்திருந்தது அந்த திசையில் அவர்களுக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்திருந்த வெயிட்டர் நின்றிருந்தான் அவன் கையிலிருந்த  தட்டில்  அசாதாரண நடுக்கம் தெரிந்தது விரைவில் இரண்டு கோப்பி டம்ளர்ளும் சரிந்து ஒரு குட்டி சுனாமியை தட்டில் கொண்டுவர துடித்துகொண்டிருந்தன.

 

நிர்மலாவோ வியர்க்க ஆரம்பித்திருந்தாள் அவள் கையிலிருந்த கைக்குட்டை வியர்வையில் விரல்களிடையே சலவை செய்யபட்டு கொண்டிருந்தது. விமலனுக்கு ஒன்றும் புரியவில்லை நிம்மி நிம்மி என்னாச்சு அருகில் சென்றவனின் கைகளில் அவள் தலை துவண்டு விழுந்தது.  ஒன்றுமே புரியவில்லை நிம்மி நிம்மி என்று அவளை உலுப்பியவாறே அந்த வெயிட்டரை பார்த்தான் அவர்களுக்கு கொண்டு வந்திருந்த தட்டை முன் மேசையில் வைத்துவிட்டு  வழியில் கடைக்கு வந்த ஒருவரை கவனிக்காமல் இடித்தபடி வீதியின் போக்குவரத்தை ஒரு நிமிடம் குழப்பிவிட்டு வேகமாக வெளியேறி கொண்டிருந்தான்.

அவன் கண்களிலிருந்து சிந்திக்கொண்டிருந்த கண்ணீர் விமலனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

ஒரு அரைமணி நேரத்தில் மீண்டும் இருவரும்  அந்த அறையிலிருந்தார்கள்.

விமலன் அவனுக்கு மிகவும்பிடித்த அந்த ஜன்னலினூடு வெளியை பார்த்தபடி இருந்தான் ! அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்ற தெரியவில்லை..

நிர்மலா இந்த சிணுங்கலை முதல் நிறுத்து ! காதல் கதை ஏதுமெண்டா அத முதல் சொல்லு  ஒரு குறும் படம் எடுக்க கதை தேடிக்கோண்டு இருக்கிறன் !

சிணுங்கல் களுக்கிடையில் சீறியது நிரமலாவின் குரல்

பகிடி விடாதீங்க விமல்..!

சரி சீரியசா கேட்கிறன் சொல்லு யார் அந்த தேவதாஸ்..! குரல்லில் கொஞ்சம் கடுப்பு இருந்ததோ தெரியவில்லை !

விமல் உண்மை என்னண்டு தெரிஞ்சா இப்பிடியெல்லாம் கதைக்கமாட்டீர்..!

அதுதான் தெரியாதே..!

உங்களுக்கு தெரியாம இருக்கிறதுதான் நல்லது விமல் !

சரி அப்ப நீ வடிவா ரெஸ்ட எடு நான் வெளியில ஒருக்கா போய்ற்று வாறன் !

எங்க..எங்க.. போறீங்க விமல்..

இல்லை அந்த கடையில போய் நான் உண்மைய அறியலாமா எண்டு பாத்திட்டு வாறன்…

விமல்.. சிணுங்கல்களுக்கிடையில் உடைந்தது அவள் குரல்…

அவன் என்ர  தம்பி விமல் !

என்னடி உளறுறாய் !!

பாலாஜி சகதிவேல் கதை ஒன்று எதிர் பார்த்த விமலனுக்கு அவள் கூறிய பாசமலர் கதை பெரும் அதிர்ச்சியை அளித்தது.

நிர்மலாவின் தம்பி ரமேஸ் சிறுவயதில் இருந்தே மனநிலை பாதிக்கப்பட்டவன் இருந்தாலும் அவளுக்கு தம்பி என்றால் கொள்ளை பிரியம்.குணமாக்குவதற்கு அவளது தந்தை எடுத்த முயற்சிகள் அத்தனையும் அவனது ஒத்துழைப்பினமை காரணமாக விழலுக்கு இறைத்த நீராக போயிற்று.

நிர்மலா வுக்கு வேறு வரன்கள் பார்க்க வேண்டும் பைத்திய குடும்பம் என்று தன் மகளுக்கு கல்யாணமே ஆகாதோ என்ற பயந்து ஆரம்பத்திலேயே ரமேஸை ஒரு மன நோய் வைத்திய சாலையில் சேர்த்தவர் அவள் கல்யாணம் முடியும் மட்டும் அவனை மீண்டும் திருப்பி அழைக்கவேயில்லை தந்தையின் இந்த செய்கையில் ஆத்திரமடைந்த ரமேஸ் ஒரு வழியாக நோய் குணமான பின்னும் வீடு திரும்பவில்லை. தன் வாழ்க்கைக்காக தம்பியை தொலைத்து விட்டேன் என இந்த சம்பவம் நிர்மலாவின் நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சி முள்ளாக இருந்து வந்தது.பல வருடங்களாக அவர்கள் கைவிட்டிருந்தவனை அப்போதுதான் முதன் முதலில் சந்தித்திருக்கிறாள்.

இது தான் அவள் அழுது அழுது அரைமணி நேரமாக சொன்ன கதையின் சாராம்சம்.

அவளின் கதையிலிருந்த நியாய அநியாயங்களை அசைபோடபடி விமலன் அந்த மலைச்சரிவில் இருந்த  வீதியில் நடந்து கொண்டிருந்தான் தூரத்தில் தெரிந்த மலைக்குன்றுகள் எல்லாம் அவன் மனதில் இருப்பது போல ஒரு இறுக்கம் மனதை அக்கிரமித்திருந்தது. ஒரு அரைமமணி நடையில் திரும்பியவனின் முகத்தில் ஒரு தீர்வு தெரிந்தது.

நிர்மலா கெதியா வெளிக்கிடு ..

இந்த முறை நிர்மலா எங்க விமல்..? என்று கேட்கவில்லை !

அவர்களது அந்த முதலாவது பயணமே தன் வாழ்க்கையில் ஒரு நிம்மதியை சேர்த்து விடுமென நிர்மலா சிறிதும் எதிர்பார்கவில்லை புற்றுநோய் போல அவள் நெஞ்சை அரித்து கொண்டிருந்த அந்த வேதனைக்கு தன் கணவன் மூலம் தீர்வு கிடைத்து அவளுக்கு பெரும் ஆறுதலளித்தது நேற்று வீடு திரும்பிய பயண களைப்பிலும் அவளுக்கு தூக்கமே வரவில்லை மீண்டும் அந்த காட்சிகள் மனதில் திரையிடப்பட்டு கொண்டிருந்தன ரமேஸை தேடிப்பிடித்தது முதல் அவனை சமாதானபடுத்தியது மட்டுமல்லாமல் இனிமேல் தங்களோடு இருக்கும் படி கூட்டி வேறு வந்து விட்டான் வரும் வழியில் அவனுக்கு நல்ல ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறிக்கொண்டிருந்தான்.

இந்த முறை விமலனின் செல்லிடப்பேசி அலாரத்திறகு முதலே நிர்மலா விழித்திருந்தாள் கழைப்பில் அசந்து தூங்கிகொண்டிருந்த விமலனின் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தாள் முகத்தில் கவவையான உணர்ச்சிகள் எது தூக்கலாக இருந்தது என்று தெரியவில்லை ஆனால் ஒரு நிறைவு இருந்தது.

Saturday, November 27, 2010

முகம் பத்திரம்..

இந்த உலகம் நாளொரு வண்ணமும் பொழுதொரு புதினமுமாக இருக்கிறது ! உதட்டோரம் சிரிப்பை ஏற்படுத்திய பல விடயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஏதோ ஒரு வகையில் நிஜமாகி எங்கள் வாயை அடைத்து புருவத்தை உயர்த்திவிடுகின்றன !

Face Off படம் பார்த்திருப்பீர்கள்  முதல் பாதியில் வில்லனாக வரும் நிக்கொலஸ் கேஜ் ஹீரோவின் மூஞ்சியை மாற்றிகொண்டு பின்பாதியில் ஹீரோ ஆகிவிடுவார் பார்க்கும் போது வெள்ளைக்காரன் விடுகிற ரீலுக்கு ஒரு அளவே இல்லை என்று  ஒரு எண்ணம் வந்தாலும் அருமையான திரைக்கதையும் அழகான காட்சிஅமைப்புகளும் ஸ்டைலிசாக எடுக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சிகளும் face off எனக்கு பிடித்த படங்களின் பட்டியலில் இருக்க காரண்ம.

படத்தில் இரண்டு முறை ஏதோ முகமூடி மாற்றி கொள்வதுபோல நிகொலஸ் கேஜ் மூஞ்சி மாற்றப்படும்..! அப்போது வந்த சிரிப்பை இப்போது வியப்பாக மாறியிருக்கிறார்கள் Dr Joan Pere Barret ம்   30 வைத்தியர்களும் !

face_offஉலகத்திலேயே முதன்முதலாக முழுமையான முகமாற்று சிகிச்சையை  ஸபெயினில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

சிறுநீரகம் ஈரல் இதயம் மாற்று சத்திரசகிச்சை எல்லாம் நாங்கள் கேள்விபட்டிருப்போம் இதிலும் சிறுநீரக கொள்ளை  ரொம்பவும் பிரபலம்! கண்ட படி சாராயம் குடித்து ஈரலை கருக்குவர்களுக்கு  ஈரல் மாற்று சத்திரசிகிச்சை இப்போது இலங்கையிலும் செய்ய முடியும் என்பதாக கேள்வி..  இதைவிட இதயமாற்று சத்திரசிகிச்சை கூட சாத்தியம்.  ஆனால் முகம் மாற்று சத்திர சிகிச்சையில் மேலதிகமாக பல பிரச்சனைகள்

 

முதலாவது  சிரிப்பு அழுகை நெழிப்பு சுழிப்பு என அத்தனையை மாயஜாலங்கள் செய்வதற்காக முகத்தில் இருக்கும் தசைகளுக்கு வரும் இரத்தநாடி நாளங்கள் மற்றும் நரம்பு வலைப்பின்னல்களை மீள இணைப்பது இது தொழில்நுட்ப சிக்கல்.

இரண்டாவது  உளவியல் பிரச்சனை   ஓரு ஆளின் அடையாளமே முகம் தான்! நீங்கள் இன்று ஹாயாக படுத்துறங்கி  நாளை கண்விழிக்கும் போது உங்கள் முகம் மாற்றப்பட்டிருந்தால் எப்படி இருக்கும். மூஞ்சி புத்தகத்தில ஸ்டேட்டஸ் போடவேண்டிவரும் இதுவரைகாலமும் இப்படியாக உலா வந்த நான் இன்றுமுதல் இந்த புது முகத்துக்கு சொந்தகாரன்.. என்று …  நண்பர்கள்  உறவினர்கள் எல்லாருக்கும் குழப்பம்… மெகா குழப்பம்.. உங்களுக்கு ஒரு காதலி இருந்தால் அதோ கதிதான்..! இது பெரிய உளவியல் பிரச்சனையாகிவிடும்.. முதன் முதலாக பகுதியாக முகமாற்று சத்திரசிகிச்சை செயத பெண்மணி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டாராம்.

மிஸ்டர் ஓஸ்கார்..

 APTOPIX Spain Face Transplant

இத்தனை பிரச்சனையையும் எதிர்கொள்வதற்காக முதன் முதலாக முழுமையான முகமாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர் எனபதை விட நிர்பந்திக்கப்படவர்..

மிஸடர் ஓஸ்கார்..

இப்படித்தான் அழைக்கிறார்கள் உண்மைப்பெயர் வெளியிடப்படவில்லை..!

30 வயதான அப்பவி விவசாயி வேட்டையாடுவது இவரது விருப்பத்துக்குரிய பொழுது போக்கு. 2005 ஆம் ஆண்டு.. ஏதோ ஒரு மாதம் ஒரு கரிநாளில்  அவருக்கு நேரம் சரியில்லை  வேட்டையில் ஈடுபட்டுகொண்டிருந்த போது தவறுதலாக அவரது துப்பாக்கி அவரது முகத்தையே வேட்டையாடி விட, முகத்தின் முற்பகுதி முழுமையாக சிதைந்து போனது  ஐந்து வருடங்களாக அவரது முகத்தை சீரமைப்பதற்காக 9தடவைகள் பிளாஸ்ரிக் சத்திரை சிகிச்சை செய்யப்பட்டும் அவரது முகத்தை சீரமைக்க முடியவில்லை. அவரது மூக்கும் வாயும்  இருந்த இடத்தில் ஒரே ஒரு துளை மட்டுமே மிச்சம்.. மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் அவர் மிகுந்த சிரம்பபட வேண்டி இருந்தது.

ஒரே ஒரு வழி  முழுமையான முகமாற்று சத்திரைசிகிச்சை… இதன் மூலம அவருக்கு அத்தனையும் புதிதாக புது மூக்கு புது பற்கள் உதடுகள் தாடை என்பு தசைகள் அத்தனையும் புதிதாக கிடைக்கும்.

ஆனால்

ஒரு புதிய முகம் வேண்டும் ..!

அதனை அவரது உடற் திசுக்கள் ஏற்று கொள்ள வேண்டும் …

அது ஏறத்தாள அவரைப்போலவே இருக்க வேண்டும் !

அதிர்ஸ்டம் அவர்பக்கமும் மருத்துவத்த்துறையின் பக்கமும் இருந்திருக்கிறது

 

இரண்டு வருடங்கள் கடுமையான திட்டமிடலுக்கு பிறகு மார்ச் 30ம் திகதி பார்சிலோனாவில் Vall d'Hebron Hospital இல் Dr Joan Pere Barret ம்   30 வைத்தியர்களும் கொண்ட குழு சத்திரசிகிச்சையை ஆரம்பித்தது. அண்ணளவாக அவரைப்போவே இருந்த யாரோ ஒரு புண்ணியவான்  ஒரு வீதி விபத்தில் உயிரை விட இறந்தவரது உறவினர்களின்அனுமதியுடன்  அவரதுமுகத்தை ஒஸ்காருக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது மீண்டும் சிக்கல் மறுமுனையிலிருந்து வந்தது இத்தனை காலமும் அழகாக பார்த்து பழகிய ஒருவரை முகம் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு யார்தான் சம்மதிப்பாரகள் !!

இறந்தவரின் முகத்தை பிரித்தெடுப்பதற்கு முன்னதாக ரோபோ படத்திற்கு  ரஜினி முகத்தை அச்சடித்து புது மூஞ்சி செய்ததை போல இறந்தவரது முகத்தை பிரதி எடுத்து சிலிக்கானில் ஒரு  புது செயற்கை முகம் ஒன்று தயார் செய்து அவரை அழகாகவே அடக்கம் செய்வதற்கு வழிசெய்தார்கள்.

face-transplant-4

முதலில் முக வழங்குனரிடமிருந்து மேலே நெற்றி முடியோர்ம தொடங்கி கீழே கழுத்து வரையும் பக்கவாட்டாக காதுவரையும் முழுமையாக  மூக்கு தாடை என்புகள் உதடுகள் பற்கள் உள்ளடங்கலாக முகம் ஒரு முகமூடி போல முற்றுமுழுதாக பெயர்த்தெடுக்கப்பட்ட அதே நேரம் ஒஸ்காரினது முகமும் சிதைந்த பாகங்கள் நீக்கப்பட்டு புதிய முகத்தை பொருத்துவதற்காக தயார்செய்யப்பட்டது. இந்த முதலாவது படிமுறை மட்டும் ஐந்து மணிநேரங்கள் நீடித்திருக்கிறது.

இறுதியாக ஒட்டு வேலைதான் அதுதான் கஸ்டமான வேலையும் கூட… the point of no return என குறிப்பிடருக்கிறார்கள்.  புதிய முகத்தின் இரத்த குழாய்கள் ஒஸ்காரின் முகத்துக்கான பிரதான  இரத்தகுழாய்களுடன் இணைக்கபட்ட பின்னர் என்புகளும் தசைகளும்  ஒஸ்காரின் என்புகள் மற்றும் தசைகளுடன்  பொருத்தப்பட்டதுடன் டைட்டேனியம் தகடுகளை பயன்படுத்தி அவருடைய பதிய கன்ன என்புகள் அமைக்கப்பட்டது. இறுதியாக முகத்தின் ஐந்து பிரதான நரம்புகளையும் ஏராளமான சிறிய நரம்புகளையும் ஒஸ்காரின் நரம்புகளுடன் இணைத்திருக்கிறார்கள் இது சாத்தியமாகாவிடில் புதிய முகம் வெறும் உணர்ச்சியற்ற முகமூடியாகத்தான் போயிருக்கும்.

 SPAIN-HEALTH-FACE-TRANSPLANT

ஆனால் மினித குலம் மருத்துவத்துறையில் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியது

சத்திர சிக்கிசை வெற்றிகரமாக முடிந்து சில நாட்கள் கழித்து ஒஸ்கார் தனது புதிய முகத்தை கண்ணாடியில் பார்த்த பொழுது அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டதுடன்  சிலமாதங்கள் கழித்து அவர் நீர் அருந்த கூடியதாக உள்ளதாகவும்  நன்றாக சாப்பிடுவதாகவும்  பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஒஸ்காருடன் தோன்றிய Dr Joan Pere Barret கூறியிருக்கிறார். அவரது புதிய முகத்திற்கு உண்ரவுகள் திரும்பிவிட்டது  தசைகளும் சிறிது சிறிதாக தொழிற்பட ஆரம்பித்திருக்கின்றன அவரால் தனத்து தாடைகளை புருவங்களை கன்னத்தசைகளை இப்பொழுது அசைக்கமுடிகிறது இன்னும் ஒன்றரை இரண்டு வருட காலப்பகுதியில் அவரது முகம் 90%மான தொழிற்பாட்டை பெற்று விடுமென மேலும் கூறியிருக்கிறார் டாக்டர்.

இப்போது இவருக்கு முப்பது வயது இன்னும் இரண்டு வருடங்கள் கடினமாக கழிந்தால் வாழ்க்கை.. கொஞ்சம் மருந்துகள் அடிக்கடி ஆஸ்பத்திரி என்றாலும்..  அவர் சந்தோசமாக வேட்டையாடலாம் மீன்பிடிக்கலாம் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழலாம்    விதி இன்னும் இவர் வசம் இருந்தால்.?

Face-Transplant

இது ஆரம்பம் தான் முடிவு எப்படி இருக்குமோ ஒரு வேளை நீங்கள் சாகும் தறுவாயில் மகனுக்கோ மகளுக்கோ  ஒரு விடயம் சொல்லி விட்டு போகவேண்டி இருக்கும் பிள்ளை குஞ்சுகளின்ட முகம் பத்திரம்!!

Tuesday, July 27, 2010

கண்டறியாத காதல் II

தண்ணீர்  குடித்து…

என் தாகம்தனை தீர்த்து…

தலை நிமிர்ந்தபோது…

உன் வண்ண முகம் பார்த்து 

மனசுக்குள் இன்னுமொரு தாகம்…

அருந்த தருவாயா???

உன் அழகிய இதழ்களை!

 

பக்கத்து பிள்ளையார் கோவில்…

படிக்கல் போல உன் இதயமடி!

என் சித்தம் சிதறுதேங்காயானது…

உன் திருமுகத்திறகு முன்னால்!

 

பட்டாம் பூச்சி செட்டைகள் கணக்காய்… 

படபட என உன் இமைகளின் துடிப்பில்!

என் இதயம் துடிக்க மறந்து போக…

நான் உயிருடன் இறந்து போனேன்!

 

ஆணாய் பிறந்து   என்ன பயனென்று

ஆதங்கம் எனக்கு,

உனை அணைத்திருந்த ஆபரணங்கள்…

எள்ளி நகைப்பது போல் தோன்றியது!

 

என் அணுக்கள் அத்தனைக்கும்,

உன்னை பிடித்து போய்…

அந்த முதல் ஸ்பரிசத்துக்காய்…

இப்போதே சாகும் வரை உண்ணாவிரதம்!!!

சத்தியமாய் எனக்கு,

சில நாளைக்கு சாப்பாடு பிடிக்காது!!!

 

ஒரு கணம் கூட..

உனை பார்க்கவில்லை என்றால்,

இமைகளை திறக்கமாட்டேன்…

என்கிறது கண்கள்!

உனை ரசிக்கவில்லை என்றால்,

இனி கவிதை எதுவும் படிக்காதே…

அடம்பிடிக்கிறது  அன்பு மனசு!

 

உன் அபரிதமான அழகின்

ஆதாரம் என்ன…?

உன் தோள்களில்,

கலைந்து கிடந்த கேசங்களா ?

அலங்கோலமாக  உடலில்,

நீ அள்ளி வீசியிருந்த ஆடைகளா ?

அந்த அலட்சியமான பார்வையா ?

பாப்பையா லியோனி

பட்டிமன்றம் நடத்தி…

முடிவு சொல்லியது மூளை…

அலங்காரத்தில் இல்லாத அழகு

எதுவென்று தெரியாத

சில மூடப்பெண்களுக்கு

நீ முன்மாதிரியாம்…

 

பத்து நொடிக்குள்,

ஒரு பாரதமே எழுதவைக்கும் அழகு!

கோலத்தை அளவெடுத்து..

மனதில் புள்ளி போட்டுகொண்டு…

தண்ணீர் குவளையை கொடுத்தேன்.

அவள் கரங்களில்..

“டலீர்..”

பூமியும் இதயமும் சேர்ந்து அதிர

திடுக்கிட்டு நிமிர்ந்தேன்

காணவில்லை அவளை

……………………

முன்னால்…

காற்றில் மெதுவாக கலைந்துகொண்டிருந்த

கடதாசிப்பக்கங்களில்…

கிறுக்கியிருந்தது

causes of cardiac failure

01. @#$%^&*//

02. )(*&^%$#@!

03.)!(@*#&%^& …….

10. &$*&$##

பத்தோடு பதினொன்றாக எழுதினேன்

11.கண்டறியாத காதல்…என்று

பக்கத்தில் இருந்த நண்பன் கேட்டான்

என்னடா பகல்கனவா என்று…?

Saturday, July 17, 2010

ஹொலிவூட் சினிமா பேசும் அமெரிக்க அரசியல்…

“டேய் இன்னொரு விசயம்டா ..”

“என்னடா சொல்லு..!”

“நான் இன்னிக்குதான்டா அவதார் பாத்தன்..”

“பாத்திட்டியா.!! நான் சொல்லல நல்ல படம்டா..”

“நல்ல படந்தான்.. நான் கன நாளைக்கு பிறகு புளொக்ல எழுதலாம்னு இருக்கேன்”

“அதுக்கு…”

“  எப்பவோ வந்த படத்தபத்தி இப்ப எழுதினா என் இமேஜு டமேஜ் ஆகிடுமோன்னு பயமாருக்கடா.. :( ”

“அப்பிடியா!!  உன்ட கொம்பியூட்டர்லதானேடா ஏராளம் இமேஜ் வைச்சிருக்காய் அதச்சொல்றியா அதென்னண்டறா டமேஜ் ஆகும்…”

டக் .. டொக்..

 

காதில் கொழுவி இருந்த ஹெட் செட் கழண்டு கீழ விழுந்தது கூடவே என் மூக்குந்தான்..   

அப்ப….எல்லாரும் அவதார் எப்பவோ பாத்திட்டீங்க நான் நேற்றுத்தான்பாத்தேன் சிரிக்காதீங்க.. எனக்கு கோவம் வரும்.. இதுக்கு மேலயும் சிரிக்கிறவங்க இங்க வந்து இங்கிலீசு படம் போடுறதுக்கு ஒரு தியேட்டர் கட்டுங்க பாஸ் புண்ணியமா இருக்கும்.  இவளோ நாளா  நான் அவதார் பாக்குறதுன்னா ஒரிசினல் டிவிடிலதான் பாக்குறதுன்னு ஒரு முடிவோடதான் இருந்தேன். யார் செஞ்ச புண்ணியமோ என் நண்பன் ஒருத்தன் Avtar HD ன்னு சொல்லி pendrive இல கொண்டுவந்து தந்தான் பரவால்லன்னு என் 17’திரையில் தான் பாத்தேன். எனக்கு படத்தின் பிரமாண்டங்கள் வண்ணமயமான பண்டோரா உலகம் என பலரும் சொல்லி மண்டை புளித்துவிட்டிருந்ததால் சிறிய ஒரு வியப்பு குறி தான் முகத்தில் விழுந்திருந்தது.

 

ஆனால் என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் ஹாலிவூட்டின் பிரம்மா என சொல்லபடக்கூடிய புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ்கமருனே தனது தாய் நாட்டின் டவுசரை கழற்றிய விதம்தான். நிறைந்து கிடக்கும் அத்தனை பிரமாண்டங்களும்  அழகும் மசாலாத்தனமும் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக மாற்றி இருந்தாலும் அவதார் அமெரிக்காவுக்கு ஒரு பாடம் என்றே சொல்லவேண்டும். அமெரிக்கா என்பதன் அர்த்தமே படத்தின் கதாநாயகனின் வாயினூடாக ஒரே ஒரு வசனத்தில் வந்திருக்கிறது..

 

This is how it’s done..

When people are sitting on the shit that you want, you make

them your enemy and you are justified in taking it..

 

இதற்கு ஈராக் ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அடுத்தது ஆப்கானிஸ்தான் பங்குசந்தை அச்சுதன் தன் பதிவு ஒன்றில் எழுதி இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஏராளமான கனியவளங்கள் பூமிக்கடியில் புதைந்து இருப்பதை அமெரிக்கா மோப்பம் பிடித்திருக்கிறதாம் விசயம் சீனாவுக்கும் கசிந்து இப்போ இரண்டுக்கும் பெரிய இழுபறி எவன் அதிகம் கொள்ளை அடிக்கிறதெண்டு துலைஞ்சுது ஆப்கானிஸ்தான்.!!

அமெரிக்காவின் இந்த போக்கிரித்தனத்தை உலகே அறியும் என்றாலும் அது ஜேம்ஸ்கமரூனால் சொல்லப்பட்டதுதான்   பெரியவிடயமாக படுகிறது.

இன்னொரு வகையில் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு விடயத்தை அந்த பிரமாண்டமான மரம் என்கிற குறியீட்டின் மூலம்  ஜேம்ஸ் கமரூன் சொல்லி இருக்கிறார் மனிதர்கள் எல்லோரும் பூமியில் மரங்களின் நிழல்களில் தான் வாழ்கிறீர்கள் அவைதான் பூமி வெப்பமயமாதலை தடுத்து உயிர்வாழ ஏற்ற சூழலை பூமியில் பேணுகின்றன உங்கள் தாயை நீங்களே கொல்லதீர்கள்..!

 

See the world we came from..

There is no green there..

They killed their mother..

 

இப்படி எல்லாம் சொல்வதற்கு பூமி அழிந்த பிறகு அமெரிக்காகாரன் வேணுமானால் எங்காவது கிரகத்தில் இருப்பான்.. நீங்களல்ல!! அப்பாவி ஆசிய மக்களே..!!

 

என்னைப்பொறுத்தவரை அவதார் ஒரு பிரமாண்டமான மசாலப்படம் என்பதையும் தாண்டி சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பேசுகிற ஒரு படமாக தெரிந்தது. ஜேம்ஸ் கமரூன் தனது நாவிகளின் மூலமாக ஒவ்வொரு இனமக்களும் தங்கள் எள்ளளவு பூமி என்றாலும் அந்த மண்ணையும் காலாச்சாரத்தையும் எவ்வளவு நேசிக்கிறார்கள்.. வல்லரசுகள் என்று சொல்லப்படுகின்ற பிணந்தின்னி கழுகுகள் போட்டி போட்டுகொண்டு பணத்திற்காக இந்த அழகிய பூமியை எப்படி சுடுகாடாக மாற்றி இருக்கிறார்கள்.. கொண்டிருக்கிறார்கள்.. என அமெரிக்காவுக்குள் இருந்தே சொல்லியிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தலைகுனிவு என்றே நான் கருதுகிறேன்.

அரசியல்:தொடரும்

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...