Saturday, November 27, 2010

முகம் பத்திரம்..

இந்த உலகம் நாளொரு வண்ணமும் பொழுதொரு புதினமுமாக இருக்கிறது ! உதட்டோரம் சிரிப்பை ஏற்படுத்திய பல விடயங்கள் அடுத்த சில ஆண்டுகளிலேயே ஏதோ ஒரு வகையில் நிஜமாகி எங்கள் வாயை அடைத்து புருவத்தை உயர்த்திவிடுகின்றன !

Face Off படம் பார்த்திருப்பீர்கள்  முதல் பாதியில் வில்லனாக வரும் நிக்கொலஸ் கேஜ் ஹீரோவின் மூஞ்சியை மாற்றிகொண்டு பின்பாதியில் ஹீரோ ஆகிவிடுவார் பார்க்கும் போது வெள்ளைக்காரன் விடுகிற ரீலுக்கு ஒரு அளவே இல்லை என்று  ஒரு எண்ணம் வந்தாலும் அருமையான திரைக்கதையும் அழகான காட்சிஅமைப்புகளும் ஸ்டைலிசாக எடுக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சிகளும் face off எனக்கு பிடித்த படங்களின் பட்டியலில் இருக்க காரண்ம.

படத்தில் இரண்டு முறை ஏதோ முகமூடி மாற்றி கொள்வதுபோல நிகொலஸ் கேஜ் மூஞ்சி மாற்றப்படும்..! அப்போது வந்த சிரிப்பை இப்போது வியப்பாக மாறியிருக்கிறார்கள் Dr Joan Pere Barret ம்   30 வைத்தியர்களும் !

face_offஉலகத்திலேயே முதன்முதலாக முழுமையான முகமாற்று சிகிச்சையை  ஸபெயினில் வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள்.

சிறுநீரகம் ஈரல் இதயம் மாற்று சத்திரசகிச்சை எல்லாம் நாங்கள் கேள்விபட்டிருப்போம் இதிலும் சிறுநீரக கொள்ளை  ரொம்பவும் பிரபலம்! கண்ட படி சாராயம் குடித்து ஈரலை கருக்குவர்களுக்கு  ஈரல் மாற்று சத்திரசிகிச்சை இப்போது இலங்கையிலும் செய்ய முடியும் என்பதாக கேள்வி..  இதைவிட இதயமாற்று சத்திரசிகிச்சை கூட சாத்தியம்.  ஆனால் முகம் மாற்று சத்திர சிகிச்சையில் மேலதிகமாக பல பிரச்சனைகள்

 

முதலாவது  சிரிப்பு அழுகை நெழிப்பு சுழிப்பு என அத்தனையை மாயஜாலங்கள் செய்வதற்காக முகத்தில் இருக்கும் தசைகளுக்கு வரும் இரத்தநாடி நாளங்கள் மற்றும் நரம்பு வலைப்பின்னல்களை மீள இணைப்பது இது தொழில்நுட்ப சிக்கல்.

இரண்டாவது  உளவியல் பிரச்சனை   ஓரு ஆளின் அடையாளமே முகம் தான்! நீங்கள் இன்று ஹாயாக படுத்துறங்கி  நாளை கண்விழிக்கும் போது உங்கள் முகம் மாற்றப்பட்டிருந்தால் எப்படி இருக்கும். மூஞ்சி புத்தகத்தில ஸ்டேட்டஸ் போடவேண்டிவரும் இதுவரைகாலமும் இப்படியாக உலா வந்த நான் இன்றுமுதல் இந்த புது முகத்துக்கு சொந்தகாரன்.. என்று …  நண்பர்கள்  உறவினர்கள் எல்லாருக்கும் குழப்பம்… மெகா குழப்பம்.. உங்களுக்கு ஒரு காதலி இருந்தால் அதோ கதிதான்..! இது பெரிய உளவியல் பிரச்சனையாகிவிடும்.. முதன் முதலாக பகுதியாக முகமாற்று சத்திரசிகிச்சை செயத பெண்மணி இதனால் மிகவும் பாதிக்கப்பட்டாராம்.

மிஸ்டர் ஓஸ்கார்..

 APTOPIX Spain Face Transplant

இத்தனை பிரச்சனையையும் எதிர்கொள்வதற்காக முதன் முதலாக முழுமையான முகமாற்று சத்திரசிகிச்சைக்கு உட்பட்டவர் எனபதை விட நிர்பந்திக்கப்படவர்..

மிஸடர் ஓஸ்கார்..

இப்படித்தான் அழைக்கிறார்கள் உண்மைப்பெயர் வெளியிடப்படவில்லை..!

30 வயதான அப்பவி விவசாயி வேட்டையாடுவது இவரது விருப்பத்துக்குரிய பொழுது போக்கு. 2005 ஆம் ஆண்டு.. ஏதோ ஒரு மாதம் ஒரு கரிநாளில்  அவருக்கு நேரம் சரியில்லை  வேட்டையில் ஈடுபட்டுகொண்டிருந்த போது தவறுதலாக அவரது துப்பாக்கி அவரது முகத்தையே வேட்டையாடி விட, முகத்தின் முற்பகுதி முழுமையாக சிதைந்து போனது  ஐந்து வருடங்களாக அவரது முகத்தை சீரமைப்பதற்காக 9தடவைகள் பிளாஸ்ரிக் சத்திரை சிகிச்சை செய்யப்பட்டும் அவரது முகத்தை சீரமைக்க முடியவில்லை. அவரது மூக்கும் வாயும்  இருந்த இடத்தில் ஒரே ஒரு துளை மட்டுமே மிச்சம்.. மூச்சு விடுவதற்கும் சாப்பிடுவதற்கும் அவர் மிகுந்த சிரம்பபட வேண்டி இருந்தது.

ஒரே ஒரு வழி  முழுமையான முகமாற்று சத்திரைசிகிச்சை… இதன் மூலம அவருக்கு அத்தனையும் புதிதாக புது மூக்கு புது பற்கள் உதடுகள் தாடை என்பு தசைகள் அத்தனையும் புதிதாக கிடைக்கும்.

ஆனால்

ஒரு புதிய முகம் வேண்டும் ..!

அதனை அவரது உடற் திசுக்கள் ஏற்று கொள்ள வேண்டும் …

அது ஏறத்தாள அவரைப்போலவே இருக்க வேண்டும் !

அதிர்ஸ்டம் அவர்பக்கமும் மருத்துவத்த்துறையின் பக்கமும் இருந்திருக்கிறது

 

இரண்டு வருடங்கள் கடுமையான திட்டமிடலுக்கு பிறகு மார்ச் 30ம் திகதி பார்சிலோனாவில் Vall d'Hebron Hospital இல் Dr Joan Pere Barret ம்   30 வைத்தியர்களும் கொண்ட குழு சத்திரசிகிச்சையை ஆரம்பித்தது. அண்ணளவாக அவரைப்போவே இருந்த யாரோ ஒரு புண்ணியவான்  ஒரு வீதி விபத்தில் உயிரை விட இறந்தவரது உறவினர்களின்அனுமதியுடன்  அவரதுமுகத்தை ஒஸ்காருக்கு மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டது மீண்டும் சிக்கல் மறுமுனையிலிருந்து வந்தது இத்தனை காலமும் அழகாக பார்த்து பழகிய ஒருவரை முகம் இல்லாமல் அடக்கம் செய்வதற்கு யார்தான் சம்மதிப்பாரகள் !!

இறந்தவரின் முகத்தை பிரித்தெடுப்பதற்கு முன்னதாக ரோபோ படத்திற்கு  ரஜினி முகத்தை அச்சடித்து புது மூஞ்சி செய்ததை போல இறந்தவரது முகத்தை பிரதி எடுத்து சிலிக்கானில் ஒரு  புது செயற்கை முகம் ஒன்று தயார் செய்து அவரை அழகாகவே அடக்கம் செய்வதற்கு வழிசெய்தார்கள்.

face-transplant-4

முதலில் முக வழங்குனரிடமிருந்து மேலே நெற்றி முடியோர்ம தொடங்கி கீழே கழுத்து வரையும் பக்கவாட்டாக காதுவரையும் முழுமையாக  மூக்கு தாடை என்புகள் உதடுகள் பற்கள் உள்ளடங்கலாக முகம் ஒரு முகமூடி போல முற்றுமுழுதாக பெயர்த்தெடுக்கப்பட்ட அதே நேரம் ஒஸ்காரினது முகமும் சிதைந்த பாகங்கள் நீக்கப்பட்டு புதிய முகத்தை பொருத்துவதற்காக தயார்செய்யப்பட்டது. இந்த முதலாவது படிமுறை மட்டும் ஐந்து மணிநேரங்கள் நீடித்திருக்கிறது.

இறுதியாக ஒட்டு வேலைதான் அதுதான் கஸ்டமான வேலையும் கூட… the point of no return என குறிப்பிடருக்கிறார்கள்.  புதிய முகத்தின் இரத்த குழாய்கள் ஒஸ்காரின் முகத்துக்கான பிரதான  இரத்தகுழாய்களுடன் இணைக்கபட்ட பின்னர் என்புகளும் தசைகளும்  ஒஸ்காரின் என்புகள் மற்றும் தசைகளுடன்  பொருத்தப்பட்டதுடன் டைட்டேனியம் தகடுகளை பயன்படுத்தி அவருடைய பதிய கன்ன என்புகள் அமைக்கப்பட்டது. இறுதியாக முகத்தின் ஐந்து பிரதான நரம்புகளையும் ஏராளமான சிறிய நரம்புகளையும் ஒஸ்காரின் நரம்புகளுடன் இணைத்திருக்கிறார்கள் இது சாத்தியமாகாவிடில் புதிய முகம் வெறும் உணர்ச்சியற்ற முகமூடியாகத்தான் போயிருக்கும்.

 SPAIN-HEALTH-FACE-TRANSPLANT

ஆனால் மினித குலம் மருத்துவத்துறையில் மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியது

சத்திர சிக்கிசை வெற்றிகரமாக முடிந்து சில நாட்கள் கழித்து ஒஸ்கார் தனது புதிய முகத்தை கண்ணாடியில் பார்த்த பொழுது அவர் தன்னை அடையாளம் கண்டு கொண்டதுடன்  சிலமாதங்கள் கழித்து அவர் நீர் அருந்த கூடியதாக உள்ளதாகவும்  நன்றாக சாப்பிடுவதாகவும்  பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் ஒஸ்காருடன் தோன்றிய Dr Joan Pere Barret கூறியிருக்கிறார். அவரது புதிய முகத்திற்கு உண்ரவுகள் திரும்பிவிட்டது  தசைகளும் சிறிது சிறிதாக தொழிற்பட ஆரம்பித்திருக்கின்றன அவரால் தனத்து தாடைகளை புருவங்களை கன்னத்தசைகளை இப்பொழுது அசைக்கமுடிகிறது இன்னும் ஒன்றரை இரண்டு வருட காலப்பகுதியில் அவரது முகம் 90%மான தொழிற்பாட்டை பெற்று விடுமென மேலும் கூறியிருக்கிறார் டாக்டர்.

இப்போது இவருக்கு முப்பது வயது இன்னும் இரண்டு வருடங்கள் கடினமாக கழிந்தால் வாழ்க்கை.. கொஞ்சம் மருந்துகள் அடிக்கடி ஆஸ்பத்திரி என்றாலும்..  அவர் சந்தோசமாக வேட்டையாடலாம் மீன்பிடிக்கலாம் ஓரளவுக்காவது நிம்மதியாக வாழலாம்    விதி இன்னும் இவர் வசம் இருந்தால்.?

Face-Transplant

இது ஆரம்பம் தான் முடிவு எப்படி இருக்குமோ ஒரு வேளை நீங்கள் சாகும் தறுவாயில் மகனுக்கோ மகளுக்கோ  ஒரு விடயம் சொல்லி விட்டு போகவேண்டி இருக்கும் பிள்ளை குஞ்சுகளின்ட முகம் பத்திரம்!!

Tuesday, July 27, 2010

கண்டறியாத காதல் II

தண்ணீர்  குடித்து…

என் தாகம்தனை தீர்த்து…

தலை நிமிர்ந்தபோது…

உன் வண்ண முகம் பார்த்து 

மனசுக்குள் இன்னுமொரு தாகம்…

அருந்த தருவாயா???

உன் அழகிய இதழ்களை!

 

பக்கத்து பிள்ளையார் கோவில்…

படிக்கல் போல உன் இதயமடி!

என் சித்தம் சிதறுதேங்காயானது…

உன் திருமுகத்திறகு முன்னால்!

 

பட்டாம் பூச்சி செட்டைகள் கணக்காய்… 

படபட என உன் இமைகளின் துடிப்பில்!

என் இதயம் துடிக்க மறந்து போக…

நான் உயிருடன் இறந்து போனேன்!

 

ஆணாய் பிறந்து   என்ன பயனென்று

ஆதங்கம் எனக்கு,

உனை அணைத்திருந்த ஆபரணங்கள்…

எள்ளி நகைப்பது போல் தோன்றியது!

 

என் அணுக்கள் அத்தனைக்கும்,

உன்னை பிடித்து போய்…

அந்த முதல் ஸ்பரிசத்துக்காய்…

இப்போதே சாகும் வரை உண்ணாவிரதம்!!!

சத்தியமாய் எனக்கு,

சில நாளைக்கு சாப்பாடு பிடிக்காது!!!

 

ஒரு கணம் கூட..

உனை பார்க்கவில்லை என்றால்,

இமைகளை திறக்கமாட்டேன்…

என்கிறது கண்கள்!

உனை ரசிக்கவில்லை என்றால்,

இனி கவிதை எதுவும் படிக்காதே…

அடம்பிடிக்கிறது  அன்பு மனசு!

 

உன் அபரிதமான அழகின்

ஆதாரம் என்ன…?

உன் தோள்களில்,

கலைந்து கிடந்த கேசங்களா ?

அலங்கோலமாக  உடலில்,

நீ அள்ளி வீசியிருந்த ஆடைகளா ?

அந்த அலட்சியமான பார்வையா ?

பாப்பையா லியோனி

பட்டிமன்றம் நடத்தி…

முடிவு சொல்லியது மூளை…

அலங்காரத்தில் இல்லாத அழகு

எதுவென்று தெரியாத

சில மூடப்பெண்களுக்கு

நீ முன்மாதிரியாம்…

 

பத்து நொடிக்குள்,

ஒரு பாரதமே எழுதவைக்கும் அழகு!

கோலத்தை அளவெடுத்து..

மனதில் புள்ளி போட்டுகொண்டு…

தண்ணீர் குவளையை கொடுத்தேன்.

அவள் கரங்களில்..

“டலீர்..”

பூமியும் இதயமும் சேர்ந்து அதிர

திடுக்கிட்டு நிமிர்ந்தேன்

காணவில்லை அவளை

……………………

முன்னால்…

காற்றில் மெதுவாக கலைந்துகொண்டிருந்த

கடதாசிப்பக்கங்களில்…

கிறுக்கியிருந்தது

causes of cardiac failure

01. @#$%^&*//

02. )(*&^%$#@!

03.)!(@*#&%^& …….

10. &$*&$##

பத்தோடு பதினொன்றாக எழுதினேன்

11.கண்டறியாத காதல்…என்று

பக்கத்தில் இருந்த நண்பன் கேட்டான்

என்னடா பகல்கனவா என்று…?

Saturday, July 17, 2010

ஹொலிவூட் சினிமா பேசும் அமெரிக்க அரசியல்…

“டேய் இன்னொரு விசயம்டா ..”

“என்னடா சொல்லு..!”

“நான் இன்னிக்குதான்டா அவதார் பாத்தன்..”

“பாத்திட்டியா.!! நான் சொல்லல நல்ல படம்டா..”

“நல்ல படந்தான்.. நான் கன நாளைக்கு பிறகு புளொக்ல எழுதலாம்னு இருக்கேன்”

“அதுக்கு…”

“  எப்பவோ வந்த படத்தபத்தி இப்ப எழுதினா என் இமேஜு டமேஜ் ஆகிடுமோன்னு பயமாருக்கடா.. :( ”

“அப்பிடியா!!  உன்ட கொம்பியூட்டர்லதானேடா ஏராளம் இமேஜ் வைச்சிருக்காய் அதச்சொல்றியா அதென்னண்டறா டமேஜ் ஆகும்…”

டக் .. டொக்..

 

காதில் கொழுவி இருந்த ஹெட் செட் கழண்டு கீழ விழுந்தது கூடவே என் மூக்குந்தான்..   

அப்ப….எல்லாரும் அவதார் எப்பவோ பாத்திட்டீங்க நான் நேற்றுத்தான்பாத்தேன் சிரிக்காதீங்க.. எனக்கு கோவம் வரும்.. இதுக்கு மேலயும் சிரிக்கிறவங்க இங்க வந்து இங்கிலீசு படம் போடுறதுக்கு ஒரு தியேட்டர் கட்டுங்க பாஸ் புண்ணியமா இருக்கும்.  இவளோ நாளா  நான் அவதார் பாக்குறதுன்னா ஒரிசினல் டிவிடிலதான் பாக்குறதுன்னு ஒரு முடிவோடதான் இருந்தேன். யார் செஞ்ச புண்ணியமோ என் நண்பன் ஒருத்தன் Avtar HD ன்னு சொல்லி pendrive இல கொண்டுவந்து தந்தான் பரவால்லன்னு என் 17’திரையில் தான் பாத்தேன். எனக்கு படத்தின் பிரமாண்டங்கள் வண்ணமயமான பண்டோரா உலகம் என பலரும் சொல்லி மண்டை புளித்துவிட்டிருந்ததால் சிறிய ஒரு வியப்பு குறி தான் முகத்தில் விழுந்திருந்தது.

 

ஆனால் என்னை ஆச்சரியப்பட வைத்த விடயம் ஹாலிவூட்டின் பிரம்மா என சொல்லபடக்கூடிய புகழ்பெற்ற இயக்குனர் ஜேம்ஸ்கமருனே தனது தாய் நாட்டின் டவுசரை கழற்றிய விதம்தான். நிறைந்து கிடக்கும் அத்தனை பிரமாண்டங்களும்  அழகும் மசாலாத்தனமும் படத்தை ஒரு பொழுதுபோக்கு படமாக மாற்றி இருந்தாலும் அவதார் அமெரிக்காவுக்கு ஒரு பாடம் என்றே சொல்லவேண்டும். அமெரிக்கா என்பதன் அர்த்தமே படத்தின் கதாநாயகனின் வாயினூடாக ஒரே ஒரு வசனத்தில் வந்திருக்கிறது..

 

This is how it’s done..

When people are sitting on the shit that you want, you make

them your enemy and you are justified in taking it..

 

இதற்கு ஈராக் ஒரு மிகச்சிறந்த உதாரணம் என்பது நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. அடுத்தது ஆப்கானிஸ்தான் பங்குசந்தை அச்சுதன் தன் பதிவு ஒன்றில் எழுதி இருக்கிறார். ஆப்கானிஸ்தானில் ஏராளமான கனியவளங்கள் பூமிக்கடியில் புதைந்து இருப்பதை அமெரிக்கா மோப்பம் பிடித்திருக்கிறதாம் விசயம் சீனாவுக்கும் கசிந்து இப்போ இரண்டுக்கும் பெரிய இழுபறி எவன் அதிகம் கொள்ளை அடிக்கிறதெண்டு துலைஞ்சுது ஆப்கானிஸ்தான்.!!

அமெரிக்காவின் இந்த போக்கிரித்தனத்தை உலகே அறியும் என்றாலும் அது ஜேம்ஸ்கமரூனால் சொல்லப்பட்டதுதான்   பெரியவிடயமாக படுகிறது.

இன்னொரு வகையில் அமெரிக்காவுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஒரு விடயத்தை அந்த பிரமாண்டமான மரம் என்கிற குறியீட்டின் மூலம்  ஜேம்ஸ் கமரூன் சொல்லி இருக்கிறார் மனிதர்கள் எல்லோரும் பூமியில் மரங்களின் நிழல்களில் தான் வாழ்கிறீர்கள் அவைதான் பூமி வெப்பமயமாதலை தடுத்து உயிர்வாழ ஏற்ற சூழலை பூமியில் பேணுகின்றன உங்கள் தாயை நீங்களே கொல்லதீர்கள்..!

 

See the world we came from..

There is no green there..

They killed their mother..

 

இப்படி எல்லாம் சொல்வதற்கு பூமி அழிந்த பிறகு அமெரிக்காகாரன் வேணுமானால் எங்காவது கிரகத்தில் இருப்பான்.. நீங்களல்ல!! அப்பாவி ஆசிய மக்களே..!!

 

என்னைப்பொறுத்தவரை அவதார் ஒரு பிரமாண்டமான மசாலப்படம் என்பதையும் தாண்டி சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பேசுகிற ஒரு படமாக தெரிந்தது. ஜேம்ஸ் கமரூன் தனது நாவிகளின் மூலமாக ஒவ்வொரு இனமக்களும் தங்கள் எள்ளளவு பூமி என்றாலும் அந்த மண்ணையும் காலாச்சாரத்தையும் எவ்வளவு நேசிக்கிறார்கள்.. வல்லரசுகள் என்று சொல்லப்படுகின்ற பிணந்தின்னி கழுகுகள் போட்டி போட்டுகொண்டு பணத்திற்காக இந்த அழகிய பூமியை எப்படி சுடுகாடாக மாற்றி இருக்கிறார்கள்.. கொண்டிருக்கிறார்கள்.. என அமெரிக்காவுக்குள் இருந்தே சொல்லியிருப்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தலைகுனிவு என்றே நான் கருதுகிறேன்.

அரசியல்:தொடரும்

Wednesday, May 26, 2010

ராவணன் – ஒரு உயிர் கொல்லும் பாடல்..

நல்ல பாடல்களை கேட்கும்போது எனக்கு எப்போதும் ஒரு கிறுக்கத்தனமான சந்தேகம் வரும் அது பாட்டா..? மெட்டா…? சிறந்தது.. என்பதுதான் பல சமயங்களில் எத்தனை தடவை திரும்ப திரும்ப யோசித்தாலும் ம்ஹூம்…விடையே கிடைக்காது. இந்த கேள்வி எனக்கு மட்டுமல்ல வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் வந்து தொலைந்ததுதான் அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிய காரணமானது. அப்படி ஒரு வில்லங்கமான வினா இது. அண்மையில் ராவணன் பாடல்கள் வெளியான போது ‘உசிரே போகுதே’ பாடலை கேட்கும் போது மீண்டும் இந்த கேள்வி மூக்கை நுளைத்தது என் மண்டைக்குள் நடந்த சண்டையில் பாடல் பாடமாகிப்போனதுடன் ஒரு நல்ல பதிலும் கிடைத்தது.

ஒரு நல்ல பாடல் ஒரு நல்ல குடும்பம் போல தனியே பிரித்து பார்க்க முடியாது பிரிந்து போனால் சேர்ந்து இருக்கும் போது இருந்த சிறப்பு இல்லாமல் போய்விடும் மெட்டும் பாட்டும் அற்புதமாக பொருந்தி  மெட்டு பாட்டை அழகுபடுத்த.. மெட்டுக்கு பாட்டு அர்த்தத்தை கொடுக்க.. மொத்தத்தில் பாடல் முழுமையடைகிறது.

இதுதான் அந்த பதில் !!

ஒலித்தட்டில் இடம்பெறாத பாடல்

இந்த பதில் கூட  நீண்ட காலம் நிலைக்க முடியவில்லை மீண்டும் குழப்பம் !!அண்மையில் கலைஞ்ஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ராவணன் முதல் பார்வை நிகழ்ச்சியில் மெட்டும் பாட்டும் மேடை ஏறி இருந்தன ஒலித்தட்டில் இடம்பெறாத பாடல் ஒன்று முதலில் வைரமுத்து கவிதை வாசிக்கிறார்….

நான் வருவேன்

மீண்டும் வருவேன்..

உன்னை தொடர்வேன்..

உயிரால் தொடுவேன் !

ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?

அதில் அர்த்தம் தேடி அலைவதே வேடகையோ?

அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது

வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது

அழுது கொண்டு பூமி வந்தோம்

சிரித்து கொண்டே வானம் போவோம்..

அர்த்தமுள்ள அழகிய வரிகள் வைரமுத்துவின் குரலில் கணீரென்று காதுகளில் ஒலித்து இனம்புரியாத ஒரு கிளர்ச்சி மனதில். வைரமுத்து எப்பொழுதும் மணிரத்தினத்திற்கு கொஞ்சமும் குறையாத முத்துக்களைதான் கொடுத்து வருகிறார்..

ரஹ்மான் ஒலிவாங்கியை கையில் எடுக்கிறார் நான்கு வரிதான் பாடுகிறார் அவரின் குரலில் வரிகளுக்குள் மெட்டு கலந்து   பாடல் உயிர் பெறுகிறது. கவிதைக்குள் அடைபட்டு கிடந்த உணர்வுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. மீண்டும் குழப்பம் இந்த முறை பதில் இப்படி வருகிறது !

கவிதை என்பது ஒரு அழகிய சிலை போல அதன் உணர்வுகளை வெளிக்கொணரும் உன்னதமான ஜீவன்தான் மெட்டு.

இசைக்கே பெருமை சேர்க்கிறார் ரஹ்மான் !!

-----------------------------------------------------------------------------------------------------------------------

ராவணன் படத்தில் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் உசிரே போகுதே. இப்பொழுது  இந்த புதிய பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாக மாறி விட்டது.முதலில் ஹிந்தியில் இந்த பாடலை கேட்கும் போதே அடிமையாகி விட்டிருந்தேன் இப்போது தமிழ் வரிகளுடன் பாடல் மனதை பிழிந்தெடுக்கிறது. என் தனிமையின் வெற்றிடத்தை இந்த பாடல் தான் இனி நிரப்பியபடி இருக்கும்.

ஆனால் ஒரு கவலை குல்சாரின் ஹிந்தி வரிகள் இசையுடன் பொருந்துவதை போல வைரமுத்துவின் தமிழ் வரிகள் ரஹ்மானின் இசையுடன் நெருக்கமாக பொருந்த வில்லை எட்டியே நிற்கின்றன இந்த பாடல் மட்டுமல்ல பல உதாரணங்கள் இருக்கின்றன. என்ன கோபம் எங்கள் தமிழன்னைக்கு..?    

குல்சார் + ரஹ்மான் பின்னணி இசையுடன் பாடல் ஹிந்தியில்

நாளுக்கு நாள் ராவணன் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டிருக்கின்றது சந்தோன் சிவனின் கைவண்ணத்தில் இதுவரை தொலைக்காட்சியில் நான் பார்த்த அத்தனை காட்சிகளும் பயங்கரமாக இருக்கின்றன .  இப்போது கூடுதலாக இந்த பாடல் அதுவும் படத்தின் முக்கியமான தருணத்தில் “படத்தின் உச்ச கட்ட பாட்டு இது.. இந்த மண்ணிடம் இருந்தும் ஒரு பெண்ணிடம் இருந்தும் ஒரு வீரன் விடைபெறும் போது வரும் பாடல்” என வைரமுத்து குறிப்பிடுகிறார்  திரையில் தான்பார்க்க முடியும். காத்திருப்போம் வரட்டும் ஜீன் 18 .

Sunday, May 23, 2010

யாழ் செம்மண் பூமியும் தென்னந்தோப்புகளும்..

யாழ் மண் ஒரு வளம் நிறைந்த பூமி இந்த வளத்திற்கு பிரதானம் இதன் செம்மண் தறையும் நிலத்தடி நீரும்தான். யாழ்ப்பாணத்தின் நகரப்புறத்தை தாண்டி வெளியில் உலாவினால் இந்த செம்மண் நிறைந்த தோட்ட வெளிகள் கண்களை நிறைக்கும். நான் நண்பர்களுடன் ஊர்  சுற்றும் போது அந்த காட்சிகளை  என் கையிலிருந்த புகைப்படக்கருவியினால் [N73 – வாழ்க நொக்கியா] சுட்டு தள்ளியிருந்தேன் இதோ !! நீங்களும் ரசிக்கலாம்.

தாவரங்கள் செழித்து வளர்வதற்கு தேவையான அத்தனை தகுதிகளையும் கொண்டது இந்த மண்.  எல்லா இடங்களிலும் இது இருப்பதில்லை, குறிப்பாக யாழ் நகரை அண்டிய பகுதிகளில் தோட்டப்புறங்களில் இருந்து இந்த செம்மண்ணை கொண்டுவந்து நிரப்பித்தான் வீடுகளில் பூக்கன்றுகளோ வீட்டுத்தோட்டங்களோ வைக்கமுடியும் இல்லாவிடில் மரம் ஒரு முளம் கூட உயராது.

அழகான தோட்டம் நடுவிலே கிணறு அந்த கிணறு வெட்டிய இடம் கூட வீணாகாமல் கிணற்றை சுற்றி தென்னை மரங்கள்..  இளைப்பாற நிழல் தாகத்திற்கு இளநீர் பசிக்கு சுரண்டி தின்ன வழுக்கல்… படுக்க தென்னோலை. இதைவிட என்ன வேண்டும் ..?

உன்னை பெத்த நேரம் ஒரு தென்னம்பிள்ளைய வைச்சிருக்கலாம் எண்டு ஆத்தா திட்டுவதன் அர்த்தம் புரிகிறதா????

இந்த சிவப்பு எவ்வளவு அழகு… இந்த படத்தை பாரக்கும் போது… 

நல்ல மழையில் ஓர் நாள் நானும் இந்த மண்ணும் ஒன்றாக நனைந்து ஊறவேண்டும் …சதக்கு புதக்கு என்று அந்த சகதியில் குதித்தாடவேண்டும் ….  அந்த சிவப்பாக நானும் மாறவேண்டும் .. என்று தோன்றுகிறது…

வெங்காயம் !!! வெங்காயம் !!! வெங்காயம் !!! வெங்காயம் !!! வெங்காயம் !!!

தப்பா நினைச்சிடாதீங்க !!! உங்களை சொல்லல !! வெங்காயம் பயிரிட்டிருகிறார்கள் என்று சொன்னேன்….கீழே பாருங்கள்…ஒரே தென்னம்புள்ளையபற்றி எத்தனை பந்தி எழுதுவது முடிந்தால் வெங்காயத்தை பற்றி ஒரு ஐந்து வசனம் பின்னூட்டத்தில் போடுங்கள் பார்க்கலாம்…!!!

அத்தனை படங்களிலும் அமைதியாக பின்னே இருந்து அழகுபடுத்தும் நீல வானம், திட்டு திட்டான வெண்பஞ்சு மேகங்கள், இடையில் நான் குறிப்பிடாமல் போனதால் கோபமாயிருக்கும் மரவெள்ளி தோட்டம், இந்த செம்மண் தறை, தென்னை மரங்கள், நான் படம் பிடிக்கும் போது பைத்தியமோ என்றெண்ணி என்னை..தம் கையிலிருந்த மண்வெட்டியால் அடிக்க வராமல் இருந்த உழவப்பெருமக்கள், முக்கியமாக முன்னால் இருந்து வண்டியை மெதுவாகவும் பலசமயங்களில் நிறுத்தியும் ஓட்டிய என் நண்பன் …. இறுதியாக இவற்றை பார்த்து ரசிக்கும் நீங்கள் எல்லாருக்கும நன்றிங்கோ…...

இது உங்களுக்கு பிடிச்சிருந்தால் உங்கள் ஆதரவைப்பொறுத்து இன்னும் பல படங்கள் கைவசம் இருக்கு தருகிறேன்…

Thursday, May 13, 2010

சின்னவன்(கள்)

காலை 7.30 மணி அவசர அவசரமாக எனது மோட்டார் வண்டியை ஸ்ரார்ட் செய்து புறப்பட தயாரானபோதுதான் அது நடந்தது கர்ர்ர்ர்ர்…. என்று ஒரு சத்தம் வண்டியிலிருந்து எனக்கு ஒன்றுமே புரியவில்லை அடப்பாவி மூணு மாசமா கவனிக்காம விட்டதுக்கு இப்பிடியா பழிவாங்கணும் என எண்ணியபடியே எனக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் பிரயோகித்து பார்த்தேன் அடங்கவில்லை வண்டி. சரி .. நம்மால முடியாது எங்காவது வண்டி வைத்தியசாலையில்தான்  அனுமதி பண்ணவேண்டும் இந்த காலை வேளையில் எவன் திறந்திருப்பான் …? என்று எண்ணிய போதுதான் எனது வீட்டிலிருந்து சிறிய தூரத்திலேயே ஒரு புண்ணியவான் தனது வீட்டோடு சேர்த்து ஒரு மோட்டார் வண்டி திருத்தும் நிலையம் நடத்துவது நினைவுக்கு வந்தது.  அப்பாடா என்று ஆசாமியை அவசர அவசரமாக அங்கு அனுமதி செய்தேன் வாசலிலேயே வரவேற்ற திருத்துனர்  நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து..

சின்னவன் … சின்னவன்…. ………… அந்த சாவிகளை எடுத்து வாடா ………… கழற்றடா கெதியா கெதியா……. உத்தரவுகளை பிறப்பித்தார் …

அப்போதுதான் அந்த சின்னவனை நான் கவனித்தேன்..!!

child_labour

ஏற்கனவே இங்கு சிறுவர்களை வைத்துத்தான் வேலைவாங்கப்படுவதாக கேள்விப்படிருக்கிறேன் ஒருபோதும் வந்தது கிடையாது எனது வண்டிக்கு பிடித்த வைத்தியர் தூரத்தில் இருக்கிறார் அவரிடந்தான் பெரும்பாலும் வண்டியை கூட்டி செல்வது வழக்கம் இப்போது அவசர சிகிச்சை வண்டிக்கு….. பெறவேண்டி இருந்த காரணத்தினால் தான் இங்கு வரவேண்டி இருந்தது.

சிறுவர்களுக்கு கட்டாய கல்வி என்று… எத்தனை பேர்முழங்கினாலும் இங்கெல்லாம் அவை வெறும் வாயளவில்தான் எத்தனையோ சிறுவர்கள் இப்படியாக வண்டி திருத்தும் நிலையங்களிலும். உண்வு விடுதிகளிலும் இன்னும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் அது தெரிந்ததுதான் …

ஆனாலும் இப்போது நான் கண்ட சின்னவனை பார்த்த போது எனக்கு மனதை பிழிந்தது … அவனுக்கு ஒரு பத்து தொடக்கம் பன்னிரண்டு வயதுதான் இருக்கும் தோற்றம் வயதை விட சிறியதாக இருந்தது ஒல்லியான தேகம் வெள்ளை பிஞ்சுகைகள் … எப்படி இந்த கைகளால்  இப்படி கடின வேலை எல்லாம் செய்கிறான் …. என்றவாறு அவனை கவனித்தேன் ஆம் !! தனியே கைக்களால் அவனால் முடியவில்லை ஒவ்வொரு நட்டையும் கழற்றும் போது அவன் உடல் பலம் முழவதையும் பிரயோகித்து தான் கழற்றிக்கொண்டிருந்தான் …நட்டுடன் சேர்த்து உடலும் சுழன்றது.. எனக்கு அந்த தடியன் உரிமையாளன் மீது கொடிய கோபம் வந்தது இவனுடைய பிள்ளை என்றால் இப்படி …. என்று எண்ணிக்கொண்டு இருக்கும் போதே உள்ளிருந்து …

அப்பா அப்பா ஒரு சிறுமியின் குரல்… என்ன பிள்ளை… நான் வெளிக்கிட்டிட்டன் … சரி கவனமாய் போய்ற்று வாங்கோ ….  நான் சின்னவனை பார்த்தேன் எங்கோ வெறித்தபடி இருந்தான். எனக்கு அவன் முகத்தில் ஒன்றையும் காணமுடியவில்லை வெறுமையாக இருந்தது…

அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது உள்ளிருந்து  பாடசாலை சீருடையுடன் ஓடி வந்த ஒரு பத்து வயது சிறுமி…அப்பா.. என்ர ஆசை அப்பா…என்று தந்தையை ஆசையுடன் கட்டியணைத்து மூன்று தடவை முத்தமிட்டு போய்ற்றுவாறன்பா… என்ற சொல்லியபடி முதுகில் புத்தகபை குலுங்க துள்ளி குதித்தபடி பள்ளிக்கு சென்றது … 

விபரிக்க முடியாத கலவையான உணர்ச்சி என்னிடம் …… கோபமும் அனுதாபமும்… மீண்டும் சின்னவனை பார்த்தேன் அவன் அதை கண்டு கொண்டதாக தெரியவில்லை அவனுக்கு இது புதிதாக இருக்காது பின்னணியில் மீண்டும் அதே குரல் சின்னவன்… என்று அதட்டியபடி இருக்க அவன் எழுந்து உத்தரவுகளை கவனிக்க சென்றான்… சரி தம்பி இனி பிரச்சனை இல்லை.. என்ற படி என்னருகே வந்த அந்த உரிமையாளரை ஒரு மாதிரி பார்த்து விட்டு புறப்பட்டேன்…

போகும் வழியில் சிந்தனை முழுவதும் அந்த சின்னவனிடமேயே இருந்தது .. இவனுக்கு பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று ஆசை இருக்காதா …?

இப்படி இவனை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு ஏன் பெற்றோர்கள் அனுப்புகிறார்கள் ..?

பெற்றோரை இழந்தவனாக இருப்பானா..? குடிகார அப்பனுக்கு பிறந்திருப்பானா..?

ஒரு வேளை இவனுக்கு இன்னும் பல தம்பி தங்கைகள் இருக்க அவர்கள் படிக்கவேண்டும் என்று இவன் தன் படிப்பை தியாகம் செய்திருப்பானா..?

எனக்கு இப்படி சிறுவனை வேலைவாங்கும் அந்த திருத்துனரின் மேல் வந்த கோபம் நியாயமானதா..?

ஒரு வேளை நீ வேலைக்கு வரவேண்டாம் பள்ளிக்கு போ என்று சொல்லி நிறுத்திவிட்டால் அந்த சிறுவனின் குடும்பத்தின் நிலை என்ன..?

இவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ சின்னவன்கள் எங்கள் சமூகத்தில் எவரும் எதுவுமே செய்ய முடியாது. இவன் வருத்தமெல்லாம் வளரும் வரை  மட்டுந்தான்  வளர்ந்து இவனும் ஒரு மோட்டார் வண்டி திருத்து நிலையம் வைத்து வாழ்க்கையில் நன்றாக வருவான். இவன் இன்று கஸ்டப்படுவது … ஒரு வித்ததில் ஒரு தொழிற்பயிற்சி .. அந்த உரிமையாளர் இவனை கொடுமைப்படுத்தாதவரை… இந்த ஒரு பதிலை தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை என்னிடம் …

child

Saturday, May 1, 2010

உழைப்பாளிகள் - என்று விடியல் வரும்…?

உழைக்கும் கரங்களினால்தான் இந்த உன்னதமான உலகம் உருவாக்கப்பட்டது இன்று அதுவியாபாரிகளின் கைகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது.வியாபாரிகளும் விளம்பரதாரர்களும் சேர்ந்து கோடி கோடியாக குவித்துகொண்டிருக்க உழைப்பாளிகள் வியர்வைசிந்த  உழைத்து கொண்டே இருக்கிறார்கள். மேலைத்தேய நாடுகளில் எப்படியோ தெரியவில்லை ஆனால் இலங்கை இந்தியா போன்ற ஏழைநடுகளில் இதுதான் நிலைமை உதாரணத்திற்கு எங்கள் நாட்டில் விவசாயிகள்  மீனவர்கள் மலையக தொழிலாளர்கள் நிலைமை மிகவும் பரிதாபம்.


கொழுத்தும் வெயிலில்
இவர்கள் தேகம் எரிக்கிறார்கள்…
வாழ்க்கை வறுமையில்
பற்றி எரியாமலிருக்க

எங்கள் தெருக்களில்
எத்தனை கார்கள் ஓடினாலும்…
இந்த கட்டுத்தோணிகள்
இயந்திரபடகுகளாகும் வரை
நாங்கள்
அதே பட்டியல்தான்.

யாழ்ப்பாணத்தில் விவசாயிகளினால் அதிகம் பயிரிடப்படுபவற்றில் பணப்பயிரான புகையிலையும் ஒன்று புகையிலை வெட்டும் காலங்களில் அனேகமாக மழை கொட்டி தள்ளிவிடும் மழையில் மாட்டிய புகையிலை செய்கையாளர்களின் கதி பரிதாபம் தான். சந்தர்ப்பத்தில் சரியாக மூக்கை நுளைக்கும் வியாபாரிகள்  தரம் குறைந்த புகையிலை என அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்து அதை அப்படியே பதுக்கிவிடுவார்கள். பின்னர் சந்தையில் புகையிலை தட்டுப்பாடான சமயம்  பார்த்து அதே தரம் குறைந்த  புகையிலை கொள்ளை லாபத்திறகு விற்கப்படும். இதே கதைதான் நெற்பயிர் செய்கையிலும்.தோட்டம் செய்து வீடு கட்டினான் என்று எந்த விவசாயியும் இல்லை ஆனால் வியாபாரிகளின் கடைகள் மட்டும் மாடி மாடியாக உயரும்.இலங்கையில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கை அன்று தொடக்கம் இன்று வரை அப்படியே இருக்கிறது இவர்களை வியாபரிகள் மட்டுமல்லாது அரசியல்வாதிகளும் ஏமாற்றி பிழைப்பதுதான் கொடுமை.
 அங்காடித்தெரு
உண்மை கசப்பானது
என்பதற்கு ஓர் உதாரணம்..??


இவர்களை விட தொழிற்சாலைகள் வியாபார நிலையங்கள் எங்கிலும் நிறைந்துள்ள உழைக்கும் வர்க்கத்தினரின் நிலையை அங்காடித்தெரு படம் வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது. படம் பார்க்கும் போது என்னால் நம்ப முடியவில்லை வந்து பலரையும் கேட்ட கேள்வி சென்னையிலா இப்படி..?ஒருக்காலும் இருக்காது..என்பதுதான் பின்னே!!தொலைக்காட்சியிலும் படங்களிலும் சொர்க்கபுரியாக காட்டப்படும் சென்னை மாநகரத்திறகு இப்படி ஒரு மறுபக்கம் இருக்கும் என எப்படி நம்புவது..?  ஆனால் உண்மை கசப்பானது என்பதற்கு உதாரணமாகிப்போனது அங்காடித்தெருபடம். இலங்கையில் தான் யுத்தம் ஒரு காரணம் ஆனால் இந்தியாவில் இவர்கள் நிலைமை இப்படி இருக்க யார் காரணம்..? ஆனால் இந்தியா இன்னும் வறிய நாடாக இருப்பதற்கு காரணம் இப்படியாக விவசாயிகளின் தொழிலாளர்களின் உழைப்புகள் சுரண்டப்படுவதுதான்.  

இப்படியாக தொன்று தொட்டு ஏமாற்றப்படும் உழைப்பாளிகள் இவர்களின் உழைப்பை குடித்து குடித்து கொழுத்துகொண்டிருக்கும் வியாபாரிகள் என இந்த நிலை என்று மாறும் …?  ஒரு நாட்டில் ஒரு விவசாயியின் ஒரு மீனவனின் ஒரு தொழிலாளியின் வாழ்க்கைத்தரம் உயரும் வரை அபிவிருத்தி என்பது வெறும் வாயளவிலேயே இருக்கும் இதை அரசியல் வாதிகளும் கவனத்தில் கொள்வதில்லை ஏனென்றால் அவர்களும் வியாபாரிகள்தான்.
எத்தனையோ உழைப்பாளர் தினங்களை போல இன்றைய தினமும் வருடத்தில் ஒரு நாளாவது இவர்களை நினைவு கூர உதவியது என்றாவது ஒரு தினத்தில் எங்கள் நாட்டில் இவர்களுக்கு விடிவு வரும் என வாழ்த்துவோம்.

Wednesday, April 28, 2010

யாழ் கோட்டை இடிந்த சுவர்களும்… உடைந்த கல்லறையும் …

 

யாழ் கோட்டை

கண்டது எத்தனை களங்கள்..?

கொண்டது எத்தனை உயிர்கள்…?

சாரி சாரியாக வந்து செல்லும்

சனத்துக்கெல்லாம் …

இடிந்து போன இதன் கற்கள்

ஒவ்வொன்றும்,

பல கதைகள் சொல்லும்..!

…………………………………?

 16042010114 2304201014116042010107

நாங்கள் விளக்கு வைத்து,

கும்பிட்ட கோயில்கள் எல்லாம்

குப்பைமேடு..!

யாழ் கோட்டைக்கு மட்டும் புனரமைப்பு..!

தியாகத்திற்கு கூட அர்த்தம் தெரியாது

இங்கே,

சிதைக்கப்படுகின்றன சின்னங்கள்…

புராதன சின்னமாம்…

யாழ் கோட்டை..!!!

ஆக்கிரமிப்பு சின்னமாக யார் மாற்றியது  ..??

அருமை புரியாமல்

அன்று நாங்கள் அழித்தோமாம்….??

இதை சொன்னவர்கள்…

இன்று…

பண்டாரவன்னியனுக்கு

அன்று பறங்கி கட்டிய கல்லறையை

இடித்தார்கள்.!

 

இது

வீரத்தின் சின்னமாம்…????

ஆக்கிரமிப்பின் அடையாளங்களுக்கு மட்டுமே இங்கு அனுமதி…!

 

கல்லறைகளுக்கு கூட

காலம் சரியில்லை நாட்டில்

வீரத்தின் மதிப்பு புரிந்து

அன்று 1803 இல்

வீழ்த்தியவனே கல்லறை கட்டினான் - அவன் வீரன்

அதை பேய்களிடம் எதிர்பார்க்க முடியாதுதானே..

நியாந்தான் …

போர் முடிந்து ஊருக்குள் கொஞ்சி குலாவினாலும்

நான் எதிரி என்று சொல்கிறாயா…?

உடைந்து போன இந்த கல்லறையைப்போலவே

உறவு ஒட்டாது என்கிறாயா…?

 

உண்மையில் எனக்கு…

உடைந்த கோட்டை தான் அழகாய் தெரிகிறது !

எங்கள் கைகளில் வீழ்ந்ததை விளக்கும்..

எங்கள் வீரத்தின் அழகு..!

நாங்கள் ஆடசி செய்ததன் அடையாளம்..!

 

எத்தனை அடையாளங்கள் அழிக்கப்பட்டாலும்…

நீ தூசு தட்டும் 

இடிந்த கோட்டையின் சுவர்கள் சொல்லும்

தமிழ் வீரத்தின் கதை..!

முடிந்தால்….

பெயர்த்து எடுத்து கடலுக்குள் போடு…!

 

ஒன்று மட்டும் நிச்சயம் நடக்கும்…!

இன்றல்ல… நாளையல்ல… என்றோ…?

இன்னுமொரு நூற்றாண்டில் ….

நீ முற்றுப்புள்ளி வைத்த கதைக்கே

மீண்டும்….

பிள்ளையார் சுழி போடுவாய்…!

Saturday, April 24, 2010

வேல்-சாரங்கனின் “ மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் ” கவிதை நூல் ஒரு பார்வை..

நான் கவிதை நூல்கள் படித்து பலநாட்கள்..! வலைப்பூக்களில் வாசிப்பது தவிர வேறு எதையும் படித்தது இல்லை. வைரமுத்துவுடன்  கட்டுண்டு கிடந்த  ஒருகாலத்தில் அவரது கவிதைப்புத்தகங்களை தேடி தேடி படித்தேன் அதோடு சரி.. அதற்கு பிறகு கவிதை நூல்கள் கிடைக்கவும் இல்லை படிக்க நேரமும் கிடைக்கவில்லை.

 

காதலை பாடுதல் 

மண் பட்ட பாட்டை;

மக்கள் உறும் துயரத்தை;

புண் பட்டு போகும் எம்

பூவின் மென் இதயத்தை;

கண் கண்ட காடை காட்டேரி

கடைக்குணத்தை

காகிதத்தில் ஏற்றாத கவிப்பாவி ஆவேனோ..?

 

மண் பட்ட பெரும்பாடு

மா கொடிது; அதனிடையே

கண் பட்டு நான் பட்ட

கதை பெரிது – காற்று வழி

மென் பட்டு இதழில்

மிதந்து வரும் புன்னகையில்

மின் சொட்டு பாய்ந்த

உயிர்க்காதலை பாடுவேன் பின்

 

நீண்ட நாட்களுக்கு பிறகு என் கையில் ஒரு கவிதை நூல் கிடத்த சிறு இடை வெளியில் படித்து பார்த்தேன். இது கவிதை நூல் மட்டுமல்ல எங்கள் கதைகள் பலவற்றை  சொல்லும் ஒரு காலத்தின் பதிவு.ஈழத்து சராசரி குடிமகன் ஒவ்வொருவரும் உணர்ந்த கணப்பொழுதுகள் தான் வேல் சாரங்கனின் “மொழி பெயர்க்கப்பட்ட மௌனங்கள்”. அழகாகவே மொழி பெயர்த்திருக்கிறார். காலத்திற்கு மிகவும் அவசியமானதும் கூட நாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் எதை எல்லாம் இழந்தோம் ..?எங்கள் கதை என்ன..?என்பதை எதிர் கால சந்ததிக்குஎடுத்து சொல்ல ஒரு நல்ல ஊடகம்.பெரும்பலான கவிதைகளில் இப்படி ஈழமக்களின் வாழ்வியலே வடிக்கப்பட்டிருந்தாலும் சமூகம் சார்ந்த இயற்கை சார்ந்த பொதுவான கவிதைகளும் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.

 

வேல் சாரங்கன் யாழ் மருத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவன் அவர் கவிதை புனையும் புலமையை எங்கள் கல்லூரியே அறியும். அவர் கல்லூரி நிகழ்வுகளில் வழங்கிய கவிதைகள் அவரை எங்கள் கல்லூரி கவிஞ்ஞனாக இனம் காட்டி இருந்தது.இதனால் சாரங்கன் கவிதைநூல் ஒன்று வெளியீடு செய்யப்போகிறாராம் என்ற போது எனக்கு எந்தவித   ஆச்சரியமும் ஏற்படவில்லை ஆனால் நிகழ்வுக்கு போகவும் நூலை படிக்கவும்  பல வேலைகள் தடங்கலாக இருந்தது.

இறுதியாக இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கவிதை நூலில் உள்ள அத்தனை கவிதைகளும் படிக்கும் போது மனதை மிகவும் பாதிக்கிறது திரும்பவும் ஒருமுறை படித்து இந்த சுகத்தை மீண்டும் மீண்டும் அனுபவிக்க தூண்டுகிறது.


நூலில் எனக்கு மிக மிக பிடித்துப்போன ஒரு கவிதை.. இந்த வரிகளை படித்து பாருங்கள் இந்த நான்கு வரிகளில் அந்த நாட்களின் எத்தனை வலிகள் சிதறியிருக்கிறது.

 

எது வரை இது நீளும்

மனிதங்கள்

மரணித்து விட்ட

மண்ணில்

கவிதைகளுக்கு என்ன

கடமை..?

 

கவிஞ்ஞர்களே ..!

கடதாசிகளை கொடுங்கள்

முடிந்தால் இவர்களின்

வயிற்றை நிரப்பட்டும்

இல்லயேல்

கண்ணீரையாவது துடைக்கட்டும்..!


“ஒவ்வொரு தாய்க்கும் பாதுகாப்பான பிரசவம்” இதுதான் மருத்துவ உலகின் மந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் எங்கு பிறந்தன..?தமிழ் மக்களின் முற்றுமுழுதான வேதனையின் விம்பமான இன்னொரு கவிதையில்  தமிழ் குழந்தைகளின்  பிறந்த கதை சொல்லப்படுகிறது

 

நதி மூலம்

“போரும் கருக்கொண்டு,

தேசம் நெருப்பண்டு

குருதி கலந்த அருவிகளும்

கரும் சாம்பல் சிதறிய தெருக்களும்

உருக்கொண்ட பொழுதுகளில்…

 

பச்சை தண்ணீருக்காய்

பகல் முழுதும் வரிசை செய்து

பொழுது முடியும் வேளை

தாகமடக்கிய பொழுதுகளில்…

 

என்று தமிழ் குழந்தைகளின்  பிறந்த கதையை விபரிக்கும் சாரங்கன் இறுதியில் கேடகிறார்…… கேள்வி ஆழமாய் இதயத்தில் இறங்குகிறது…..

 

எப்படி சொல்வது இத்தனை நீளமாய் ..?

தலைநகரில்,

அடையாள அட்டையை புரட்டியபடி

ஒற்றை வார்த்தையில் கேட்கிறாய் சோதரா…

பிறந்த இடம்…?


மரங்கள் தான் இயறகையின் ஆதாரம்..! மண்ணின் உண்மையான குழந்தைகள். தன் வீட்டு வளவின் ஓரத்தில் அத்தனை காலமும் தன்னோடு கூடவே சேர்ந்து வளர்ந்த,  நெஞ்சை நிமிர்த்தி நின்ற மரம் ஒன்று பாதுகாப்பு.. மின்சாரம்.. என்று வெட்டி வீழ்த்தியதை பார்த்து வெடித்திருக்கிறார் சாரங்கன்..

பேசப்படாத படுகொலை

எங்கே உளது

மர உரிமை ஆணைக்குழு…?

 

மரம் மிகப்பெரியது;

மனிதனை விடவும்.!

 

இதை விட

நண்பா நானும் நீயும்

இறந்தே இருக்கலாம்

ஒரு கணப்பொழுதில்.!

 

நம் போல் மனிதர்

பிறப்பது சுலபம்…!


சாரங்கனின் அத்தனை கவிதைகளும் '”பாட்டினை போல் ஆச்சரியம் பார் முழுதும் இல்லையடா” என்று பாரதி சொன்னது போல் வாசகரகளின் மனதில் ஒரு வியப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகிறது. அதை நீங்களும் உணர்ந்து கொள்ள புத்தகத்தை வாங்கி படியங்கள்.. வாழ்க்கைச்சுமை கல்விச்சுமை என்பவற்றை எல்லாம் மீறி நிமிர்ந்து எழுந்துள்ள இந்த ஈழத்து இளம் கலைஞ்ஞனை உங்கள் கருத்துக்களால் உரமாக்குங்கள்.

இளம் கவிஞ்ஞனிடம் வாசகனுக்கு சொல்ல செய்தி உண்டு.சொல்ல வருவதை குறிப்பாக சொல்லும் நுட்பம் தெரிகிறது. சொற்பஞ்சம் இல்லை. தமிழ் கவிதைக்குரிய ஓசை பற்றிய பிரக்ஞை உண்டு.

- கவிஞ்ஞர் சோ. பத்மநாதன்

 


வேல் சாரங்கனின் மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் கவிதை நூலை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.

கொழும்பு-  0777537930.

யாழ்ப்பாணம் - 0779779769

கண்டி - 0779697270.

 

புத்தகம் கிடைக்கும் இடங்கள்

கொழும்பு -

1.Poobalasingam bk depot, 309A 2/3 Gale rd,welawta.

2. Kokilam bk shp, 4c-5 fussels lane,welawata.

3. Cordova bk shp. 226, gale rd.welawta.

 

யாழ்ப்பாணம்-

1.poobalasingam.

2.book lab(ramanathan rd)

Saturday, March 27, 2010

நீதானே வான் நிலா..!

மனமும் உடலும் களைத்துப்போக கொளுத்திக்கொண்டிருக்கும் உச்சி வெயிலில் நனைந்தவாறு வீடு வந்து சேர்ந்த எனக்கு கையில் அகப்பட்டது தொலைக்காட்சிப்பெட்டியின் றிமோட் கொண்ட்ரோல். வழமையாக வீடு வந்த உடன் தொலைக்காடசிப்பெட்டி உயிரோடு இருந்தால் அதை ஒரு கை பார்த்த பின் தான் மற்ற வேலைகள் பாரப்பது வழக்கம் அனேகமாக டிஸ்கவரி அலைவரிசைதான் (தமிழில் வருகிறது).இந்த முறை ஏதோ தவறுதலாக விஜய் டிவி  பட்டனை அழுத்திவிட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் ஒரு சிறுமியின் குரல் நிலாவை அழைத்துக்கொண்டிருந்தது.

romantic_moon 

 

நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா…

 

 

சட்டென்று எனக்கு எங்கள் வீட்டில் ஏசி போட்டது போல ஒரு உணர்வு..உறைந்து போனது மனம்..!அப்படியே காது வழியாக சென்று இதயத்தை தாலாட்டிக்கொண்டிருந்தது இளையராஜாவின் மெட்டு.வெயிலில் உருகி வந்த எனக்கு பாடல் எல்லாவற்றையும் மறந்து அந்த சிறுமியின் குரலோடு ஒன்றிப்போக வைத்திருந்தது. ஆனால் நான் இறுதி பாகத்தில் தான் கேட்க தொடங்கி இருந்தேன் சட்டென பாடல் முடிந்து போக சிறிது நேரத்திலேயே சின்ன குயில் சித்ரா மீண்டும் அந்த பாடலை பாட என்ன ஒரு உணர்வு..!இனிமை என்ற ஒரு வார்த்தையில் அந்த சுகம் அவ்வளவும் அடங்கி விடாது..! இதயத்தை இலேசாக்கும் மெட்டு  மெட்டுக்கு பொருத்தமாக பின்னப்பட்ட வரிகள் அனைத்தும் நிலா ..லா..லா.. என்று  லகரத்தில் இத்தனை இன்பமா..! அப்போதுதான் நான் பலநாடகளுக்கு பிறகு மீண்டும் உணர்ந்தேன் தமிழ் எவ்வளவு இனிமை என்று.

2211417905_3a6203d84b

 

சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா

என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா

தேன் ஊறும் தேன்பலா

உன் சொல்லிலா

 

எப்போதும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைமாளிகையிலேயே ஓய்வெடுக்கும் நான் எப்போதாவதுதான் இப்படி ராஜாவின் ராஜாங்கத்திற்கு அடிமையாகி போய்விடுவேன். ஆனாலும் ராஜாவின் இந்த உள்ளத்தை உருக்கும் மெட்டுக்கு அற்புதமாக பாடல் புனைந்த அந்த கவிஞ்ஞர் யார் வைரமுத்துவா..? எனக்கு தேடிப்பார்க்க நேரம் இல்லை யாராவது தெரிந்தால் சொல்லுங்கள். எந்த ஒரு நல்ல பாடலும் நல்ல வரிகள் சேரும் போது எவ்வளவு சிறப்பாகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம். ஒரு முற்று முழுதான தமிழ்ப்பாடல்     நேற்று முழுவதும் மனம் அந்த பாடலையே பாடிக்கொண்டிருந்தது இன்று காலை தரவிறக்கம் செய்தேன் எத்தனை முறை கேட்டிருப்பேனோ இன்னும் கேட்டு கொண்டிருக்கிறேன்.

இத்தனை நாடகளாக நான் இந்த பாடலை ரசிக்காமல் இருந்திருக்கிறேனே ..? என்று எனக்கு என்மேலே சரியான கோபம் இனி ஒரு பத்து நாளைக்கு இந்த பாடல்தான் கேட்கப்போகிறேன் உங்களுக்கும் கேட்க ஆவலா.. இதோ.. புடித்து கொள்ளுங்கள்….

 Moon%20and%20Jupiter%20with%20love%20pair

கல்யாணத்  தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா..

 

கல்யாணத்  தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

 

தென்பாண்டி கூடலா தேவாரப்பாடலா

தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக்காதலா என் நாளும் ஊடலா

பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா

பாரப்போமே ஆவலா

வா வான் நிலா

 

கல்யாணத்  தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா

என்னோடு வா நிலா

 

உன் தேகம் தேக்கிலா தேன் உந்தன் வாக்கிலா

உன்பார்வை தூண்டிலா நான் கைதி கூண்டிலா

சங்கீதம் பாட்டிலா நீ பேசும் பேச்சிலா

என் ஜீவன் என்னிலா உன் பார்வை தன்னிலா

தேன் ஊறும் தேன்பலா

உன் சொல்லிலா

 

கல்யாணத்  தேன் நிலா காய்ச்சாத பால் நிலா

நீதானே வான் நிலா என்னோடு வா நிலா

தேயாத வெண்ணிலா உன் காதல் கண்ணிலா

ஆகாயம் மண்ணிலா..

 

கல்யாணத்  தேன் நிலா

காய்ச்சாத பால் நிலா

.

Wednesday, March 10, 2010

வாண்டு ஒண்ணு வம்புகள்…?

பதிவு ஒன்று போட்டு பலநாள் ஆகுது..! இப்படியே போனால் தமிழ் 99 இல் தட்டுறதையும் மறந்திடுவனோ என்று பயம்  ஏதாவது எழுதுவம் என்றால் ம்ஹூம்.. எத்தனையோ சங்கதிகள் நாட்டில நடந்தாலும் எனக்கு நேரம் இல்ல யாராவது மிச்ச சொச்சம் நேரம் இருந்தா வட்டிக்கு கொடுங்கப்பா நான் வெட்டியா இருக்கும் போது திருப்பித்தரேன்..

ஒரு மொக்கை பதிவு எழுதணும் இன்னு பலநாள் ஆசை ஆனா அதை எழுதுறது அவ்வளவு சுலபமில்ல… இன்னிக்குத்தான் ஒரு சட்டென ஒரு யோசனை வந்தது  ஏனடா வீட்டில எத்தனை மொக்கைகள் அரங்கேறுது இதுக்கா பஞ்சம்… அதான் கொஞ்சம் ஆறுதலாகி கிளம்பிட்டன்..!

பார்க்கிறீங்களா… ! என்ன வாண்டு ஏதோ கடுமையா கணக்குப்போடுதுன்னு மட்டும் நினைக்காதீங்க தப்பு..! படத்துக்கு காடசியளிக்குது. வயசு ஏழு வாலுனா இதுதான் வால்..!

அப்பாடா..!  வீடுதாங்காது வாண்டு வீட்டில இருந்தால் சும்மா இல்ல உண்மையிலையே அதிரும்..! அப்பிடி ஓடும் துள்ளும் மெதுவா நடந்து பழக்கம் எல்லாம் கிடையாது.

அப்பன் வியாபாரி கடையில கிடந்த சாக்லெட்டுகள் இனிப்புகள் எல்லாம் கண்ட நேரமும்  தின்டு விட வாயில இருந்த கிருமிகள் மிச்ச சாக்லெட் இனிப்போட சேர்த்து முன்னால இருந்த ரெண்டு மண்வெட்டி பல்லையும் திண்டுவிட விளைவு தான் இது.ஓட்டைப்பல்லு..!

யாருக்கும் பயம் கிடையாது. நல்ல பழக்கம் ஒண்ணு பொய் சொல்லவே சொல்லாது.. பாடசாலையில் இருந்து வந்தவுடன் சொல்வதெழுதுதலுக்கு எத்தனை என்றுகேட்டால் பயம் இல்லாமல் சிரித்துக்கொண்டே சொல்லும் பத்துக்கு ஐஞ்சு.

இதனாலேயே ஒருவரும் அடிப்பது இல்லை.! பொய் சொல்ல கூடது பாப்பா ன்னு பாரதி ஏதும் கனவில பாடம் எடுத்திருப்பார் போல..!

ஒரு முறை பாப்பாவின் சுற்றாடல் வினாத்தளை பார்த்து வீட்டில பெரும் குழப்பம் ஆளுக்கு தடியை தூக்கி கொண்டிருக்க இது முழிய பிரட்டுது. என்னடா வில்லங்கம் என்று பார்த்தால் …

பொருத்தமான சொல்லை தெரிவு செய்க..பகுதியில்..

கேள்வி:பாடசாலையை நிர்வகிப்பவர் யார்..?

பதில் :சிரமதானம்

எப்புடி இருக்கும் அதிபர் பார்த்தால் ஆடிப்போயிருப்பார்..! நான்தான் ஒருமாதிரி சமாளித்து விட்டேன் வாண்டுக்கு சிரமாதானம் எண்டால் என்னவென்று தெரியாது என்று இரண்டு அடியோட தப்பியது.

 

10032008061

இது மட்டும் இல்லை வாண்டுக்கு "ழ ல ள ன ண ர ற ஒற்றைக்கொம்பு ரெட்டைக்கொம்பு” ஆகாது  அடிக்கடி பிழைவிடும் அடிவாங்கும்  அதை ஒருமாதிரி எங்கள் வீட்டின் ஆசிரியப்பெருந்தகைக்கள் சரிப்பண்ணி போட்டார்கள் கணக்கு கொஞ்சம் நல்லாவே போடும் இருந்தாலும் கிறுக்கு கூட இப்பகூட..

அத்தையார்:பத்தையும் ஆறையும் கூட்டினா எத்தனை சொல்லு..?

வாண்டு:நாலு அத்தை

அத்தையின் நிலைமை…???

பக்கத்தில படத்தை பாக்கிறீங்களா..?

வாண்டுவின் வாலுத்தனத்துக்கு இது நல்ல ஒரு உதாரணம்..!

ஆசிரியர் ஏதோ சொல்ல உது ஏதோ எழுதி இருக்கு பச்சைக்கிளியை பச்சைபுலி என்று எழுதி இருக்கு .

இதப்போல எத்தனையோ. இதை நான் படம் எடுத்து கொண்டிருக்கும் போது பக்கத்தில வந்து தான் பத்துக்கு பத்து எடுத்ததையும் போடட்டாம் பாவம்னு போடலாந்தான் ஆனா படிக்கிற உங்களுக்கு பதிவு இறங்க நேரம் ஆகும்னு விட்டுட்டன்..

பாவம் இந்த ஆசிரியர் இதைப்போல எத்தனை வாலுகளோ வகுப்பில்  கோபம் வராமல் அமைதியாக படிப்பிக்க வேணும் ..

 

ஆங்கில ஆசிரியர் தேவை..?

 

10032008056

நான் இந்த மொக்கையை எழுத காரணம் ஒரு ஆங்கில ஆசிரியர் அவசரமாக தேவை. நிறைய விஜய் படம் பார்ப்பவராக இருந்தால் நல்லது அப்போதான் வாண்டுவின் வதைகளை நன்றாக தாங்குவார். ரொம்பவும் பொறுமைசாலியாகவும் மன தைரியம் உடையவராகவும் இருந்தால் நல்லது. நல்ல ஊதியம் வழங்கப்படும்

வாண்டை நாலு ஆங்கில சொல் பிழை விடாமல் எழுத வைத்தால்  சன்மானமும் கிடைக்கும்.

விரும்பியவர்கள் எனது மெயில் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும் எத்தனை விஜய் படம் பார்த்தீரகள் என்ன என்ன படம் பார்த்தீர்கள் எனபதையும் தவறாமல் குறிப்பிடவும்.

இதில் வாண்டு பிழை விட்ட சொற்களை சரியாக கண்டு பிடித்து சொல்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

 பள்ளியால் வந்தவுடன் எல்லோரும் கேட்கும் கேள்வி

“சொல்வதெழுதுதலுக்கு எத்தனை..?”

“இண்டைக்கு வைக்கேல்ல..!”

“அப்ப ஆங்கிலத்தில வைச்சிருப்பினம் எத்தனை..?”

“ம்….”

“சொல்லு எத்தனை..?”

“டீச்சர் ஒன்பதை வெட்டிப்போட்டா ஒண்டைத்தான் சரிபோட்டவ..?’

பத்துக்கு ஒன்று எண்டு சொல்ல பயந்து சுத்தி மாத்தி  சொல்லியது வாண்டு எல்லாருக்கும் வந்த சிரிப்பில் வாங்க இருந்த நாலு அடியிலிருந்து நல்ல வேளையாக தப்பித்து விட்டது…!

இன்னா டவுட்டு..? மாட்டிகிச்சு..! படிப்பு இல்ல நடிப்பு..!

சரி..! எப்புடி நம்ம வாண்டுவின் வரலாறு..? சிரிச்சீங்களா..? அது போதும் நம்ம நண்பர்கள் எல்லாம் எப்பூடி இருக்கீங்க உங்க பதிவுகள் பல நாளா படிக்கல எல்லாம் சேர்த்து வைச்சுத்தான் ஒரு நாள் படிக்கணும் ம்..வேற என்ன வரட்டா ..

Saturday, February 27, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா…. உள்ளம் தாண்டி..!!

உணர்வுகளை உசுப்பி விடும் ஒரு சில படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது கௌதம் வாசு தேவ மேனனின் சொந்தக்கதை என்று கூறப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா . இன்னும் கொஞ்ச காலத்திற்கு  இளைய உள்ளங்களின் காதல் பாடப்புத்தகமாக கட்டாயம் இருக்கும். ஐ ஆம் கிரேசி எபௌட் யு … என்றவாறு பலர் படம் பாரத்து பகற் கனவு கண்டவாறு அடுத்த நாளே புறப்பட்டிருப்பாரகள்… அப்படி ஒரு பாதிப்பு .. யாராவது ஒரு பொண்ணின் பின்னால் லோ..லோ.. என்று சுற்றி நொந்து போனவர்கள் என்றால் ஐயோ.! போச்சு.!! நிச்சயமாக நீண்ட நாளைக்குப்பின் ஒரு நெஞ்சு நிறைந்த வலியை உணர்ந்திருப்பாரகள்.  இப்படி ஒரு அழகான முழுமையான அற்புதமான  படம் பாரத்து எத்தனை  நாள் ஆச்சு என்று கூறாதவர்கள்  ..இது வரை படம் பாரக்கவில்லை .. தயவு செய்து போய்ப்பாருங்கள்... குறை எதுவும் சொல்ல முடியாதபடி அப்படி ஏதும் இருந்தாலும் ஒரு அழகான பெண்ணின் முகத்தில் இருக்கும் மச்சத்தை மறுவைப்போல அவையும் அழகாகவே தெரிகிறது காரணம்…

 

 Vinnai-Thaandi Varuvaaya-pics-01 Vinnaithaandi-Varuvaayaa-Stills-024

 
கௌதம் மேனனின் திரைக்கதை + வசனம்.

 

எல்லோரும் எதிர்பாத்ததுதான் கௌதம் மேனனின் திரைக்கதை பற்றி சொல்லவா வேண்டும்..! அமைதியாக நகர்ந்து செல்லும் ஒரு அழகிய நதி போல உள்ளத்தை இழுத்து செல்லும் திரைக்கதையில் இடை வேளைக்கு முதல் சிரிப்பலைகளை சிறவிடுகிறது வசனங்கள்.. கார்த்திக் ஜெசி சந்திக்கும் அத்தனை காதல் காடசிகளிலும் ஆரம்பத்தில்  சிரிப்பு தெறிக்கும் … இடை இடையே நச் என்று மனதை தொட்டு செல்லும்..  அற்புதமான வசனங்கள்… காதலர்களுக்கு ஒரு அகராதியே எழுதி இருக்கிறார் கௌதம் மேனன். உணர்வு பூர்வமாக நகர்ந்து செல்லும் கதையின் இறுதியில் பலரை இருக்கையிலிருந்து எழும்ப வைத்து அடடா..! இன்னும் ஒரு பாட்டு இருக்கே என மீண்டும் அமரவைக்கும் அற்புதமான இறுதி முடிவு தமிழ் சினிமாவுக்கு புதிசு..! திகைக்க வைத்த அந்த திருப்பத்தில் அன்பில் அவன் பாடல் போகும் போது நான் சொன்னேன் .. இந்த காதல் கதைக்கு சினிமாவில் தான் இப்படி முடிவு வரும் வியாபாரத்திற்கு.. நிஜத்தில் நிச்சயமாக வேறுமாதிரித்தான் இருக்கும் என்று..!  கணக்கு தப்பவில்லை..! கௌதம் மேனன் கதை சினிமா அல்ல நிஜம் என்று கடைசியில் சொல்லி விடுவார்..! விஜய் டிவியின் அடுத்த காப்பி வித் அனு நிகழ்ச்சிக்கு அது யார் என்று கேட்க  அனு அக்கா கேள்விகள் தயாரா..??

நல்ல சில பொண்ணுகள் அழகாக இருக்காது பாவம்..!! அழகான சில பொண்ணுகள் நல்லதாக இருக்காது.. அசிங்கம்!! நல்ல பொண்ணு ஒண்ணு ரொம்பவும் அழகாக இருந்தால் எப்படி இருக்கும் ..?? அப்படி இந்த காதல் ஓவியத்திறக்கு தன் கமெராவினால் வண்ணந்தீட்டிய ..

 

மனோஜ் பரம்ம ஹம்சாவின் ஒளித்தொகுப்பு.

 

VTV-On-Location-009 Vinnaithaandi-Varuvaayaa-Stills-013

 

மணிரத்னம் ஷங்கர் மறைந்து போன ஜீவா கௌதம் மேனன் இவர்களின் படங்களில் பாரிய பங்கு ஒளிப்பதிவாளர்களின் கையில் இருக்கும் காட்சிகள் கண்ணை கொள்ளை கொண்டு போகும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் மனோஜ் தன் பங்கை கூடுதலாகவே செய்திருக்கிறார் எந்த காட்சி சிறந்தது என்று சொல்ல முடியாதபடி அத்தனை காட்சிகளும் அவ்வளவு அழகு வெளிச்சத்தை கையாண்ட விதம் அற்புதம் காட்சிகள் அத்தனையும் படந்தான் பார்க்கிறோமா என்ற உண்ர்வை ஏற்படுத்தும் அளவிற்கு இயற்கையாக இருக்கிறது. காட்சிகளில் கூடவே சேர்ந்து வரும் அந்தி வான சூரியனும் வண்ண நிலவும் கூடுதல் அழகு. குறிப்பாக மன்னிப்பாயா பாடல் காட்சி அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் மிக அற்புதமாக படம் ஆக்கப்பட்டிருக்கும் காட்சிகள் உண்மையிலேயே ஒரு முழு நிலா வெளிச்சத்தில் தான் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் ..? ஒருவர் தயார் ..! பாலு மகேந்திரா பி.சி.சிறீராம் கே.வி.ஆனந்த் ரவி.கே.சந்திரன் போன்ற தமிழ் சினிமா தந்த  சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியிலில் சேர்ந்து கொள்ள…  ஒரு கணம் கூட தவற விடாதபடி வாங்கிய பெப்சியை குடிக்காமல் நான் கண்களால் காட்சிகளை விழுங்கி கொண்டிருக்க பக்கத்திலிருந்த நண்பன் அதை விழுங்கியிருந்தான்.! இடைவேளையில் எனக்கு வெறும்போத்தல் தான்…:-( 

இத்தனை ஜாலங்களும் சேர்ந்தும் ஒருவரை ஒதுக்க முடியவில்லை !! முடியுமா..!! என்ன..??

 

 Vinnaithaandi-Varuvaayaa-Stills-020 Vinnaithaandi-Varuvaayaa-Stills-046

 
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலம்.

 

கௌதம் மேனனின் குட்டி குட்டி வார்த்தைகளில் வராத உண்ர்வுகளை இசையால் வடித்திருக்கிறார் ரஹ்மான் அடிக்கடி பின்னணியில வரும் ஆரோமலே மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் இடையிடையே மீண்டும் ஒலிக்காதா என எண்ண வைக்கும் சின்னஞ்சிறு மெட்டுக்கள் என மனதை கட்டிப்போடும் இசை. அந்த காரத்திக் ஜெசி இறுதி காதல் சந்திப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையே சொல்லும் சகுனம் சரியில்லை..! என்று. வழமை போலவே கௌதமின் கதையின் ஓட்டத்தினோடு பாடல்கள் திரைக்கதையில், படம் பார்ப்பவர்களின் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளின் ஒலியாக வருகிறது. ஏ.ஆர் தப்பாமல் மெட்டுப்போட்டிருக்கிறார்.. தாமரையும் கதைக்கு ஏற்றாற்போல் வரிகள் பின்னி இருக்கிறார்.. ஆனால்….

 
ஆன்டனி..

 

என்னமோ இந்த முறை கதையின் சீரான ஓட்டத்தில் ஓரங்கட்டப்படிருக்கிறார் அனேகமாக இவரது கைவண்ணம் படங்களில் பிறம்பாக தெரியும் இங்கு இவரது உழைப்பு வெளியில் தெரியாத அளவுக்கு அல்லது அப்படி தெரியாதது போல சீராக படம் தொகுக்கப்பட்டிருக்கிறது பாடல் காட்சிகள் இன்னும் ஒருமுறை பார்த்தால் தான் இவரது கலையை கண்டு பிடிக்கலாம்.

 

Vinnaithaandi-Varuvaayaa-Stills-016 vinnai-thaandi-varuvaaya-01

 

கௌதமின் சரளமான திரைக்கதை வசனங்கள்,மனோஜின் காட்சிப்படையல் எல்லாவற்றையும் மீறி காதுகளை தாலாட்டும் ரஹ்மானின் இசை எல்லாம் சேர்ந்த ஒரு பாரிய பந்தியில் தொட்டுக்கொள்ள சிம்புவும் த்ரிசாவும் குறை வைக்காமல நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக அந்த அமெரிக்காவில் இருவரும் சந்திக்கும் காடசி. இருவருடைய உடையலங்காரமும் இயல்பாக இருப்பதும் ஒரு அழகு. வழமை போல கௌதமின் படங்களில் கதாநாயகிகள் சேலையில் தான் உலாவருவார்கள் இங்கேயும்தான் த்ரிசா அழகாக தெரிகிறார். சிம்புவுக்கு நண்பராக வரும் அவர் கூட நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். என் நண்பன் ஒருவன் சொன்னான் உதவி இயக்குனராக வரும் அந்த பொண்ணு கூட அழகா இருக்குன்னு ..!! இன்னும் நான் குறிப்பிட மறந்து போன எத்தனை பேரோ எல்லோருமாக சேர்ந்து என் வாழ்நாளில் ஒரு சிறந்த படம் ஒன்றை பார்க்கவைத்திருக்கிறார்கள். நான் மட்டுமல்ல பார்த்த எல்லோரும் இதுதான் சொல்கிறார்கள். ஆனால் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அலைபாயுதே படத்தை அசைக்க முடியவில்லை . ஏனோ தெரியாது மணிரத்னம் என்னும் குருவை மிஞ்ச சீடனால் முடியவில்லை. அலைபாயுதே படம் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருக்கும். என்ன இருந்தாலும் இந்த காலத்து பசங்களுக்கு இதுதான் … 

 

இது வரையும் யாராவது காதலிக்காமல் இருந்தால் படத்தை பாருங்க..!

 

வேலை இல்லாம இருக்கீங்களா..??

 

அடுத்த நாளே யாரோ ஒரு பொண்ணு பின்னால கிளம்பிடுங்க…!

 

அந்த இனிமையான வலியை அனுபவிக்காத வாழ்க்கை குப்பையோ என்று தோன்றுகிறது ..?

 

பட்.. ஐ கான்ட்..…

 

 

 

.

Tuesday, February 9, 2010

குட்டிநாயும்..!! கொஞ்சம் உண்மைகளும்..!!

“குட்டிநாய்க்கும் குழந்தைப்பிளைக்கும் இடம் கொடுக்காதே” இதுதான் எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே ஒரு  பழமொழி. எங்கள் மூதாதையர்கள் ஏன் இப்படி எழுதி வைத்தார்கள் என்பதுதான் புரியவில்லை சரி அப்படி இடம் கொடுத்தால் என்ன தான் ஆகும் மடமா போய்விடும்.? இல்லையே.! கொஞ்சம் உங்கள் ஆடைகள் அலங்கோலப்படும், புள்ளை சீச்சா அடிச்சா குளிக்கவேண்டி வரும், ஏதாவது ஒண்ணு ரெண்டு சாமான் உருளும், உடையும்..!! இவற்றை எல்லாம் சரிபண்ணி விடலாம் ஆனால் இரண்டினாலும் கிடைக்கும் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் நீங்கள் என்ன விலை கொடுத்தும் வெளியில் பெறமுடியாது .

 

சின்னஞ்சிறு குழந்தைகளின் மழலைப்பேச்சு, பிராணிகளின் விளையாட்டு, குட்டிக்கோபம், செல்லக்கடி இவற்றில் மனம் இளகாதவர்கள் மனிதராக இருக்க முடியாது. போகும் இடத்தில் வாங்கும் கடுப்பை எல்லாம் வீட்டில் கொண்டுவந்து காட்டும் எங்கள் கனவான் கூட்டதிற்கு ஒரு செல்லப்பிராணி வீட்டில் இருந்தால் மனுசன் வாங்கின கடுப்பை வாசலிலேயே விட்டுட்டு வரும்.நாங்கள் போடுகின்ற மூன்று நேர சாப்பாட்டுக்கும் படுக்க ஒரு இடத்திறகும் அவை காட்டும் அன்பு வேறு எங்கும் கிடையாது. நாய்கள் ஒரு போதும் கடமைக்கு வாலாட்டுவதில்லை எங்களைப்போல..!!

 

நாய் பூனை ஆடு மாடு தொடங்கி அத்தனை பிராணிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்..!!விசேடமாக நான் பாரத்து ரசிக்கும் ஒருவர் எங்கள் வீட்டு வேப்பமர அணில் பிள்ளை.!! துள்ளித்திரியும் இந்த அணிலாரின் சுறுசுறுப்பு எனக்கு இருந்தால் எப்படி இருக்கும் என நான் எண்ணிப்பார்ப்பது உண்டு.அணில்பிள்ளை சாப்பிடும்போது கூட வாலை சும்மா வைத்திருக்காது அங்கே இங்கே ஆட்டிக்கொண்டே சாப்பிடும் அவதானித்து பாருங்களேன். நான் எங்கு சென்றாலும் எந்த அறிமுகமில்லாத பிராணியையும் தொட்டுத்தடவ தவறுவதில்லை.இதில் நாய்கள் பழக கொஞ்சம் காலம் எடுக்கும் என்றாலும் அனேகமாக எனது நணபர்களின் வீட்டு நாய்கள் எல்லாம் சிறிது காலத்தில் என் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.

 

boy-dog-prayingசெல்லப்பிராணிகள் விளையாட்டுக்கு மட்டும் அல்ல உடல் உள ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளன.வயோதிப காலத்தில் முதியவர்களை சோர்ந்து விடாமல் வைத்திருக்க  உதவும் இவை அவர்கள் தனிமையாக உணர்வதையும் தடுத்து அவர்களின் வாழ்க்கையில் இறுதிவரை ஒரு பிடிப்பை ஏறபடுத்துகின்றன. வெளிநாட்டில் இருக்கும் புள்ளைகளை விட ஆடுமாடுகள் இவர்களில் வைத்திருக்கும் அன்பு அதிகம் .

 

உடல் எடை குறைப்பதற்கு ஏன் ஜிம்முக்கு போகவேண்டும் மாலை ஒரு மணி நேரம் ஒதுக்கி நாயோடு ஒடி விளையாடியும் கொஞ்ச தூரம் நடந்தும் கூட ஐந்து சதம் செலவளிக்காமல் உடல் எடை குறைக்கலாம்.இதைவிட செல்லப்பிராணிகள் மன அழத்தத்தை குறைப்பதுடன் உயர் குருதி அழுத்த நோயாளிகளுக்கு குருதி அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது அன்பாக ஒரு பிராணியை வளர்ப்பது உயர் குரதி அமுகத்திறகு மாத்திரையை விட சிறந்த வைத்தியம் என்று கூறப்படுகிறது.இதன்மூலம் தன்னை வளர்பவரின் நீண்ட ஆயுளுக்கு இவை உறுதுணையாக இருப்பது ஆரய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது இருதய நோயால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 92பேரில் மேற்கொள்ளப்பட ஆய்வு ஒன்றில் செல்லப்பிராணிகள் எதுவும் வளர்த்திராத 29 பேர்ல் 11 பேர் ஒருவருடத்திலேயே இறந்து போக செல்லப்பிராணிகள் வளர்த்த 52 பேரில் மூன்று பேர்தான் இறந்திருந்தார்கள்.அத்துடன் ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது மார்படைப்பு வருவதற்கான ஆபத்தை இரண்டு சதவீதத்தால் குறைப்பதாக இன்னொரு ஆராய்ச்சியில் சொல்கிறார்கள்.

 

இப்படி எத்தனையோ அனுகூலங்கள் இருந்தாலும் வெறும் காவலுக்கு மட்டும் நாயும் எலிபுடிக்க மட்டும் பூனையும் வளர்க்கும் கூட்டமும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. மேலை நாடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கசெலாவாகும் தொகையில் ஒரு குடும்பம் நடத்தலாம் என்று கூறுவார்கள் அங்கு இவற்றுக்கு இருக்கும் மரியாதை அந்தளவு..!!! எங்களூரில்…????

 

cute-dog-yawning11233800905 இவற்றால் வரும் வில்லங்கங்கள் என்று பார்த்தால் ஒன்று,நாய் பூனை போன்றவற்றின் மயிர்களுக்கு சில பேருக்கு ஒவ்வாமை இருக்கும் இது ஆஸ்த்துமாவை கூட அவர்களுக்கு ஏற்படுத்தும். இதைவிட  ஒழுங்கற்ற கவனிப்பால்  இவற்றின் (rabiesvirus) வைரஸ் தொற்றுக்குள்ளான உமிழ் நீர் மூலம் பரவும் விசர்நாய்க்கடி என்று சொல்லப்படும் நீர் வெறுப்பு(rabies)நோய், மற்றும் இவற்றில் வளரும் உண்ணிகளின் மூலம் பரவும் தைபஸ் என்ற ஒரு வகை காய்ச்சல் எனபன ஏனைய முக்கியமான சுகாதார பிரச்சனைகள்.ஆனால் இவை இரண்டும் உங்கள் பிராணிகளை சுகாதாரமாக தடுப்பு மருந்து ஏற்றி வளர்த்தால் ஒரு பிரச்சனையே இல்லை.!!(இலங்கையில் தான் இது மிகவும் அதிகம் )உங்களை சந்தோசமாக மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமா வாழ வகை செய்யும் இந்த பிராணிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது உங்கள் கடமை இல்லையா.!! 

 

 

 

.

Monday, February 8, 2010

என் தேவை!!!

  self-esteem

கோடையில் எத்தனை தடவை,

கொல்லப்பட்டாலும்..

மாரியில் துளிர் விடும்..!

கோரைப்புற்கள்..!!

 

பிஞ்சு வயதில்..

கால் பிரண்டு விழுந்தாலும்..

அழாமல் எழ முயலும்..

பிள்ளை மனது..!!

 

முறித்து நீ.!

எங்கோ தூக்கி எறிந்தாலும்..

ஒட்டியிருக்கும் மண்ணில்..

உயிர் கொள்ளும் கதியால்..!!

 

ஒரு வினாடி ஓய்வின்றி.

கண்டம் விட்டு கண்டம்…

கடலும் கடந்து வரும்…

இரு சிறகு கொண்ட பறவை..!!

 

மார்கழி மழை மப்பு..

இடைவிடாமல் தூறும் மேகம் – விலக்கி

எட்டிப்பார்க்கும்…

சிறு வெயில் கீற்று..!!

 

இத்தனையும் ஒட்டுமொத்தமாய்..கொண்ட

ஒன்று  மட்டும்…தேவை..

உன் முயற்சி திரி கொளுத்தி….

வாழ்வில் ஒளியேற்றும்..

!!!நம்பிக்கை!!!

ஆழமறியா சமுத்திரத்தில்…

உன்னை அம்மணமாய் போட்டாலும்…

கை..கால் அடிக்காமல்…

கடலுக்குள் மூழ்காதே..

சிலவேளை கடலும் உறைந்துவிட…

நீ ஏறி நடந்து வரலாம்!!!

 

 

.

Thursday, February 4, 2010

நானும் சாமிதான்..!!!

அரசடி வீதியால் அவசர அவசரமாக எனது பைக்கில் வந்து கொண்டிருந்தேன்!! வழமைக்குமாறாக வண்டியின் வேகமுள்ளு 60km/h வேகத்தை தொட்டுக்கொண்டிருந்தது. எனது நண்பன் ஒருவன் வீட்டு வாசலில் வந்து நின்று அழைப்பை எடுத்திருந்தான் “மச்சான் எங்க நிற்கிறாய் வீட்ட வரச்சொல்லிப்போட்டு …….” இதுதான் காரணம், சின்ன அலுவலாக இவன் எங்க இப்ப வரப்போறான்!! என நினைத்துத்தான் வெளிக்கிட்டேன் ஆனால் வந்துட்டான்..!! வந்தே விட்டான்..!! வேகத்தை குறைத்தேன் சிறிய வளைவு ஒன்று கவனிக்காமல் விட்டால், எனக்கு ஆசுப்பத்திரியிலோ காவல் நிலையத்திலோ அனுமதிப்பத்திரம் நிரப்ப வைச்சிடுவாங்கள்…!! என்று எண்ணிய எண்ணம் மறைவதற்குள்.. ஒரு உருவம் வீதியின் அடுத்த முனையிலிருந்து நடுவீதியை நோக்கி வரமுறபட்டது .. சட்டென கிளச்சை பிடித்து மேலும் வேகத்தை குறைத்து அந்த உருவத்தை கவனித்தேன் அதன் செய்கைகள் எனக்கு மேலும் அதிரச்சியளித்தது.!!

 

அவர் ஒரு நடுத்தர வயது மனிதர் சீராக ஆடை அணிந்திருந்தார்.. முழுக்கை சட்டை, நீள்காற்சட்டை, நான்றாக வாரப்பட்ட தலைமுடி, பாரக்க நல்ல தோற்றம்!! வீதிக்கு குறுக்கே வந்து என்னை மறிப்பதற்காக கையை காட்டிய அந்த மனிதர், பின்னர் ஒரு கும்பிடு போட்டார்!! எனக்கு அதிரச்சியும்!! குழப்பமும்!! என்ன செய்வதென்று புரியும் முனபாக, மீண்டும் அதே கும்பிடு!! வண்டியை நிறுத்தி கவனித்தேன். இந்த முறை எனக்கு குழப்பம் கலைந்தது. அவர் ஒரு பேச்சுப்புலன் செவிப்புலன் அற்றவர் நல்லூர் இருக்கும் திசையை காட்டி, தன்னை ஏற்றி சென்று விடும்படி கேட்கிறார்.. போல.. எல்லாம் புரிவதற்குள் மனிதர் இன்னும் பல கும்பிடுகள் போட்டிருந்தார். கோவில் என்பதைத்தான் அவர் கும்பிட்டு காட்டி இருக்க வேண்டும்.

 

ஆனால் நானோ அந்த வழியால் செல்ல வேண்டி இருக்கவில்லை. அவருக்கு விளங்கப்படுத்த எனக்கு சைகை மொழியுந்தெரியாது, வீட்டு வாசலில் நிறகும் நண்பனின் புண்ணியத்தில் என் தொலைபேசி வேறு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. ஆனாலும் இறுதியில் எனக்கு அவரின் வேண்டுகோளை புறக்கணிக்க மனம் வரவில்லை ஏற்றிச்சென்று நல்லூர் கோவில் முன்பாக இறக்கி விட்டேன். அப்படியே கோபுரத்தை பார்த்து முருகனுக்கும் ஒரு விண்ணப்பம் போட்டேன் “நல்லூர்க்கந்தா நான்தான் உன் வாசல் பக்கமே தலை வச்சு படுக்கிறதில்ல ஆனா உன் பக்தன் ஒருவனை உன் பாதார விந்தங்களில் கொண்டு வந்து விடுகிறேன் அவனுக்கு அளிக்கும் அருளில் மிச்சம் மீதி இருந்தால் எனக்கும் அனுப்பி வைப்பா கனக்க தூரமில்ல பக்கத்தில் தான் இருக்கிறன்” விண்ணப்பத்தை அனுப்பி வைத்துவிட்டு பின்னாலிருந்து இறங்கியவரை திரும்பிப்பாரத்தால், இறங்கிய மனிதர் தலையை ஆட்டி இன்னும் ஒரு கும்பிடு போட்டார் பாருங்கள். இது நடந்து ஒரு வாரமாகிறது இன்னும் மனிதர் என கண்ணுக்குள் தெரிகிறார்.

 

பல சமயங்களில் பிச்சைக்காரர்கள் காசு போடும்போது கும்பிடுவார்கள் அந்த சமயங்களில் இப்படி மனதுக்கு ஒரு விதமாக உணர்ந்ததில்லை ஆனால் இப்போது இப்படி பாரக்க நன்றாக இருந்த ஒருவர், அதுவும் பேசும் புலன் அற்றவர் ,என்னைப்பார்த்து கும்பிட்டது மனதுக்குள் ஏதோ செய்தது.

 

இப்ப சொல்லுங்க நீங்க எத்தனை தடவை அப்பு சாமி ஆண்டவா பிள்ளையாரப்பா அம்மாளாச்சி தாயே என்று விழுந்து விழுந்து கும்பிட்டிருப்பீரகள்!! எத்தனை தடவை நீங்கள் வேண்டியதை அண்டவன் அளித்திருக்கிறார்.??? ஆனால் நான் ஒரு சில கும்பிடுகள் ஒருவர் போட்டதற்கே அருள் பாலித்து இருக்கிறேன் இல்லையா..!!! இனி நீங்களும் ஏதும் பிக்கல் புடுங்கல் என்றால் என் பிளாக்கு பக்கம் வந்து ஐஞ்சாறு கும்பிடு போடுங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு அருள் புரிவான் இந்த பாலவாசகன்!!!

பிறகுறிப்பு- நல்லூர் கந்தனுக்கு நான் போட்ட விண்ணப்பத்திறகு இன்னும் பதில வரவில்லை!! பாருங்கள்!!

Friday, January 29, 2010

கடமை தவறும் யாழ் ஊடகங்கள்….

ஒரு சமூகத்தை சரியான வழியில் செலுத்துவதற்கு அல்லது ஒரு முக்கியமான காலகட்டத்தில் முடிவுகளை எடுப்பதற்கு மக்களை வழிநடத்துவதில் ஊடகங்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது.

 uthayan

யாழ்ப்பாண ஊடகங்கள் அந்த வேலையை இன்றுவரை கண்ணும் கருத்துமாக செய்துவருகின்றன என்றுதான் சொல்லவேண்டும்.  அதறகு ஒன்று அல்ல எத்தனை  “சபாஷ்” வேண்டுமென்றாலும் போடலாம். எத்தனையோ ஆபத்துக்கள் மத்தியிலும், மருந்துக்கு கூட பத்திரிகை அச்சிட பேப்பர் கிடைக்காத காலத்திலும், பல உயிர்களை கொடுத்தும் கூட விலை போகாமல் சொல்ல வேண்டியதை சொல்ல தவறாத இந்த  ஊடகங்கள் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை. அவற்றை விமர்சனம் செய்வது எனபது எனது நோக்கமல்ல என்றாலும், அரசியல் என்ற வட்டதிற்கு அப்பால் பல விடயங்களில் சமூகவிழிப்புணர்வை ஏற்படுத்தவும், வளர்ந்து வரும் நவீன உலகத்தின் போக்குகளை, படைப்புகளை,  உலகத்திலிருந்து முற்றுமுழுதாக தனிமைப்படுத்தி இருந்த யாழ்மக்களிற்கு காட்டவும் இந்த ஊடகங்கள் என்ன செய்திருக்கின்றன என்பது ஒரு தவிர்க்கமுடியாத கேள்வி.

 

இதுதான் ஆரம்பத்தில் படித்தவன் தொடங்கி பாமரன் வரை படுக்கையிலிருந்து எழும்பியவுடன் பச்சைத்தண்ணீர் கூட குட்டிக்காம பேப்பர் வேண்டி பாத்துக்கொண்டே தேத்தண்ணி குடித்த நிலை மாறி,இப்பொழுது வெறுமனே இந்த அழுக்கு அரசியலுக்கும் ஆங்காங்கே நடக்கும் விழாக்கள்,  வில்லங்கங்கள் செயதிகளுக்கும், அதிகமாக மரண அறிவித்தல் நினைவஞ்சலிகளுக்குந்தான் பேப்பர் … என்று கடமைக்கு பேப்பர் வேண்டும் நிலை  ஏற்பட்டிருக்கிறது.ஒரு பத்திரிகையை செத்தவீட்டுபேப்பர் என்று மக்கள் அழைக்கும் அளவுக்கு…... இருக்கிறது இன்றைய யாழ் ஊடகங்களின் நிலைமை..!!!

 

யுத்தம் நடந்த காலத்தை விட இப்போதுதான் யாழ்ப்பாண ஊடகங்களுக்கு பொறுப்புக்ககள் அதிகம்… காரணம் திறந்துவிடப்பட்டிருகும் பாதை.வெறும் நிலத்தில் போட்டு விறபனை செய்யப்படும் சோளன் தொடங்கி.. தெற்கிலே ஒடுக்கப்பட்டிருக்கும் போதைமருந்து,  விபச்சாரம், (இப்போதே சமுத்திரத்தில் தெரியும் பனிக்கட்டியாக ஒரு சில கதைகள்  வெளியில் வந்திருக்கிறது) இன்னும் எத்தனையோ சமூகப்பிரச்சனைகள்  அத்தனைக்கும் புதிய சந்தையாக யாழ்ப்பாணம், (வாகன நெரிசல் அதிகரித்து வரும் வீதிவிபத்துக்கள்… ) யாரும் ஆரம்பத்திலே கண்டு கொளவதில்லை எல்லாம் முற்றி முறிக்கமுடியாத அளவுக்கு பெருத்த பிறகுதான் குய்யோ முறையோ என்று கூக்குரலிடுவார்கள். இதை எல்லாம கண்டு கொள்ளாத அரசாங்க அதிகாரிகளின் முதுகில் தட்டி.. முகத்தில் அறைந்து… சொல்லவேண்டிய ஊடகங்கள் அமைதியாக இருப்பதுதான் பெரும் ஆச்சரியம்.

 

சரி..!!!அதுதான் போகட்டும்.!!! மரணஅறிவித்தல்.. விளம்பரங்கள்.. என்று உழைக்கிற பணத்தில் இன்னும் இரண்டு அதிகமாக பக்கங்களை போட்டு கொஞ்சம் உலக நடப்புகள் ஏதாவது நல்ல ஆய்வுக்கட்டுரைகள் (அரசியல் அல்ல) புத்தம புதிய கண்டுபிடிப்புகள்(உதாரணமாக அண்மையில் பிரபலமான sixth sense இதை நான் பிளாக்குகளில் பாரத்து எனது நண்பர்களுக்கு சொல்லித்தான் அவர்களுக்கே தெரியும்) எத்தனை விடயங்கள் புதிதாக இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது.அதை கொஞ்சமாவது பொறுக்கி போட்டால் இணையத்துடன் தொடர்பில்லாதவர்களுக்கு,(யாழ்ப்பணத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கணினி என்றால் ஒவ்வாமை)   பள்ளி செல்லும் பிஞ்சுகள் பலருக்கு  பயனுள்ளதாக இருக்காதா..??

 

யாழ்ப்பாண பத்திரிகைகளே…!! ஏன்..?..ஏன்..? ஏன் முடியவில்லை..?? உங்களால்..!!!

 

‘எப்படியோ விக்கிற பேப்பர் தானே ஏன் இந்த எடுபுடி வேலை எல்லாம்’ என்று நினைக்கிறார்களா..? இல்லை யுத்தம் என்ற குளிருக்குள் போர்த்தி படுத்திருந்தவர்கள் இன்னும் போர்வை விலக்கி வெளியில் வரவில்லையா..? முதல் சொன்னது தான் சரி போல தெரிகிறது எதுவும் வியாபாரந்தானே.!!! எதை எழுதினாலும் இத்தனை பேப்பர்தான் விற்பனை என்றால் ஏன் புதிதாக எழுதப்போகிறார்கள்.!!!

 

ஒரு உண்மையான ஊடகம் எது…..?? என்றால்

நான் சொல்வதைத்தான் மக்கள் படிக்கவேண்டும் என்றல்லாமல் மக்களுக்கு எது தேவையோ அதை சொல்லவேண்டும்..!!!

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...