Saturday, February 27, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா…. உள்ளம் தாண்டி..!!

உணர்வுகளை உசுப்பி விடும் ஒரு சில படங்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறது கௌதம் வாசு தேவ மேனனின் சொந்தக்கதை என்று கூறப்படும் விண்ணைத்தாண்டி வருவாயா . இன்னும் கொஞ்ச காலத்திற்கு  இளைய உள்ளங்களின் காதல் பாடப்புத்தகமாக கட்டாயம் இருக்கும். ஐ ஆம் கிரேசி எபௌட் யு … என்றவாறு பலர் படம் பாரத்து பகற் கனவு கண்டவாறு அடுத்த நாளே புறப்பட்டிருப்பாரகள்… அப்படி ஒரு பாதிப்பு .. யாராவது ஒரு பொண்ணின் பின்னால் லோ..லோ.. என்று சுற்றி நொந்து போனவர்கள் என்றால் ஐயோ.! போச்சு.!! நிச்சயமாக நீண்ட நாளைக்குப்பின் ஒரு நெஞ்சு நிறைந்த வலியை உணர்ந்திருப்பாரகள்.  இப்படி ஒரு அழகான முழுமையான அற்புதமான  படம் பாரத்து எத்தனை  நாள் ஆச்சு என்று கூறாதவர்கள்  ..இது வரை படம் பாரக்கவில்லை .. தயவு செய்து போய்ப்பாருங்கள்... குறை எதுவும் சொல்ல முடியாதபடி அப்படி ஏதும் இருந்தாலும் ஒரு அழகான பெண்ணின் முகத்தில் இருக்கும் மச்சத்தை மறுவைப்போல அவையும் அழகாகவே தெரிகிறது காரணம்…

 

 Vinnai-Thaandi Varuvaaya-pics-01 Vinnaithaandi-Varuvaayaa-Stills-024

 
கௌதம் மேனனின் திரைக்கதை + வசனம்.

 

எல்லோரும் எதிர்பாத்ததுதான் கௌதம் மேனனின் திரைக்கதை பற்றி சொல்லவா வேண்டும்..! அமைதியாக நகர்ந்து செல்லும் ஒரு அழகிய நதி போல உள்ளத்தை இழுத்து செல்லும் திரைக்கதையில் இடை வேளைக்கு முதல் சிரிப்பலைகளை சிறவிடுகிறது வசனங்கள்.. கார்த்திக் ஜெசி சந்திக்கும் அத்தனை காதல் காடசிகளிலும் ஆரம்பத்தில்  சிரிப்பு தெறிக்கும் … இடை இடையே நச் என்று மனதை தொட்டு செல்லும்..  அற்புதமான வசனங்கள்… காதலர்களுக்கு ஒரு அகராதியே எழுதி இருக்கிறார் கௌதம் மேனன். உணர்வு பூர்வமாக நகர்ந்து செல்லும் கதையின் இறுதியில் பலரை இருக்கையிலிருந்து எழும்ப வைத்து அடடா..! இன்னும் ஒரு பாட்டு இருக்கே என மீண்டும் அமரவைக்கும் அற்புதமான இறுதி முடிவு தமிழ் சினிமாவுக்கு புதிசு..! திகைக்க வைத்த அந்த திருப்பத்தில் அன்பில் அவன் பாடல் போகும் போது நான் சொன்னேன் .. இந்த காதல் கதைக்கு சினிமாவில் தான் இப்படி முடிவு வரும் வியாபாரத்திற்கு.. நிஜத்தில் நிச்சயமாக வேறுமாதிரித்தான் இருக்கும் என்று..!  கணக்கு தப்பவில்லை..! கௌதம் மேனன் கதை சினிமா அல்ல நிஜம் என்று கடைசியில் சொல்லி விடுவார்..! விஜய் டிவியின் அடுத்த காப்பி வித் அனு நிகழ்ச்சிக்கு அது யார் என்று கேட்க  அனு அக்கா கேள்விகள் தயாரா..??

நல்ல சில பொண்ணுகள் அழகாக இருக்காது பாவம்..!! அழகான சில பொண்ணுகள் நல்லதாக இருக்காது.. அசிங்கம்!! நல்ல பொண்ணு ஒண்ணு ரொம்பவும் அழகாக இருந்தால் எப்படி இருக்கும் ..?? அப்படி இந்த காதல் ஓவியத்திறக்கு தன் கமெராவினால் வண்ணந்தீட்டிய ..

 

மனோஜ் பரம்ம ஹம்சாவின் ஒளித்தொகுப்பு.

 

VTV-On-Location-009 Vinnaithaandi-Varuvaayaa-Stills-013

 

மணிரத்னம் ஷங்கர் மறைந்து போன ஜீவா கௌதம் மேனன் இவர்களின் படங்களில் பாரிய பங்கு ஒளிப்பதிவாளர்களின் கையில் இருக்கும் காட்சிகள் கண்ணை கொள்ளை கொண்டு போகும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தோன்றும் மனோஜ் தன் பங்கை கூடுதலாகவே செய்திருக்கிறார் எந்த காட்சி சிறந்தது என்று சொல்ல முடியாதபடி அத்தனை காட்சிகளும் அவ்வளவு அழகு வெளிச்சத்தை கையாண்ட விதம் அற்புதம் காட்சிகள் அத்தனையும் படந்தான் பார்க்கிறோமா என்ற உண்ர்வை ஏற்படுத்தும் அளவிற்கு இயற்கையாக இருக்கிறது. காட்சிகளில் கூடவே சேர்ந்து வரும் அந்தி வான சூரியனும் வண்ண நிலவும் கூடுதல் அழகு. குறிப்பாக மன்னிப்பாயா பாடல் காட்சி அந்த பௌர்ணமி வெளிச்சத்தில் மிக அற்புதமாக படம் ஆக்கப்பட்டிருக்கும் காட்சிகள் உண்மையிலேயே ஒரு முழு நிலா வெளிச்சத்தில் தான் எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் ..? ஒருவர் தயார் ..! பாலு மகேந்திரா பி.சி.சிறீராம் கே.வி.ஆனந்த் ரவி.கே.சந்திரன் போன்ற தமிழ் சினிமா தந்த  சிறந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியிலில் சேர்ந்து கொள்ள…  ஒரு கணம் கூட தவற விடாதபடி வாங்கிய பெப்சியை குடிக்காமல் நான் கண்களால் காட்சிகளை விழுங்கி கொண்டிருக்க பக்கத்திலிருந்த நண்பன் அதை விழுங்கியிருந்தான்.! இடைவேளையில் எனக்கு வெறும்போத்தல் தான்…:-( 

இத்தனை ஜாலங்களும் சேர்ந்தும் ஒருவரை ஒதுக்க முடியவில்லை !! முடியுமா..!! என்ன..??

 

 Vinnaithaandi-Varuvaayaa-Stills-020 Vinnaithaandi-Varuvaayaa-Stills-046

 
ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கோலம்.

 

கௌதம் மேனனின் குட்டி குட்டி வார்த்தைகளில் வராத உண்ர்வுகளை இசையால் வடித்திருக்கிறார் ரஹ்மான் அடிக்கடி பின்னணியில வரும் ஆரோமலே மற்றும் விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் இடையிடையே மீண்டும் ஒலிக்காதா என எண்ண வைக்கும் சின்னஞ்சிறு மெட்டுக்கள் என மனதை கட்டிப்போடும் இசை. அந்த காரத்திக் ஜெசி இறுதி காதல் சந்திப்பில் ஏ.ஆர் ரஹ்மானின் இசையே சொல்லும் சகுனம் சரியில்லை..! என்று. வழமை போலவே கௌதமின் கதையின் ஓட்டத்தினோடு பாடல்கள் திரைக்கதையில், படம் பார்ப்பவர்களின் உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளின் ஒலியாக வருகிறது. ஏ.ஆர் தப்பாமல் மெட்டுப்போட்டிருக்கிறார்.. தாமரையும் கதைக்கு ஏற்றாற்போல் வரிகள் பின்னி இருக்கிறார்.. ஆனால்….

 
ஆன்டனி..

 

என்னமோ இந்த முறை கதையின் சீரான ஓட்டத்தில் ஓரங்கட்டப்படிருக்கிறார் அனேகமாக இவரது கைவண்ணம் படங்களில் பிறம்பாக தெரியும் இங்கு இவரது உழைப்பு வெளியில் தெரியாத அளவுக்கு அல்லது அப்படி தெரியாதது போல சீராக படம் தொகுக்கப்பட்டிருக்கிறது பாடல் காட்சிகள் இன்னும் ஒருமுறை பார்த்தால் தான் இவரது கலையை கண்டு பிடிக்கலாம்.

 

Vinnaithaandi-Varuvaayaa-Stills-016 vinnai-thaandi-varuvaaya-01

 

கௌதமின் சரளமான திரைக்கதை வசனங்கள்,மனோஜின் காட்சிப்படையல் எல்லாவற்றையும் மீறி காதுகளை தாலாட்டும் ரஹ்மானின் இசை எல்லாம் சேர்ந்த ஒரு பாரிய பந்தியில் தொட்டுக்கொள்ள சிம்புவும் த்ரிசாவும் குறை வைக்காமல நடித்திருக்கிறார்கள்.குறிப்பாக அந்த அமெரிக்காவில் இருவரும் சந்திக்கும் காடசி. இருவருடைய உடையலங்காரமும் இயல்பாக இருப்பதும் ஒரு அழகு. வழமை போல கௌதமின் படங்களில் கதாநாயகிகள் சேலையில் தான் உலாவருவார்கள் இங்கேயும்தான் த்ரிசா அழகாக தெரிகிறார். சிம்புவுக்கு நண்பராக வரும் அவர் கூட நகைச்சுவையில் கலக்கி இருக்கிறார். என் நண்பன் ஒருவன் சொன்னான் உதவி இயக்குனராக வரும் அந்த பொண்ணு கூட அழகா இருக்குன்னு ..!! இன்னும் நான் குறிப்பிட மறந்து போன எத்தனை பேரோ எல்லோருமாக சேர்ந்து என் வாழ்நாளில் ஒரு சிறந்த படம் ஒன்றை பார்க்கவைத்திருக்கிறார்கள். நான் மட்டுமல்ல பார்த்த எல்லோரும் இதுதான் சொல்கிறார்கள். ஆனால் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அலைபாயுதே படத்தை அசைக்க முடியவில்லை . ஏனோ தெரியாது மணிரத்னம் என்னும் குருவை மிஞ்ச சீடனால் முடியவில்லை. அலைபாயுதே படம் இன்னும் கொஞ்சம் உணர்வுபூர்வமாக இருக்கும். என்ன இருந்தாலும் இந்த காலத்து பசங்களுக்கு இதுதான் … 

 

இது வரையும் யாராவது காதலிக்காமல் இருந்தால் படத்தை பாருங்க..!

 

வேலை இல்லாம இருக்கீங்களா..??

 

அடுத்த நாளே யாரோ ஒரு பொண்ணு பின்னால கிளம்பிடுங்க…!

 

அந்த இனிமையான வலியை அனுபவிக்காத வாழ்க்கை குப்பையோ என்று தோன்றுகிறது ..?

 

பட்.. ஐ கான்ட்..…

 

 

 

.

Tuesday, February 9, 2010

குட்டிநாயும்..!! கொஞ்சம் உண்மைகளும்..!!

“குட்டிநாய்க்கும் குழந்தைப்பிளைக்கும் இடம் கொடுக்காதே” இதுதான் எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே ஒரு  பழமொழி. எங்கள் மூதாதையர்கள் ஏன் இப்படி எழுதி வைத்தார்கள் என்பதுதான் புரியவில்லை சரி அப்படி இடம் கொடுத்தால் என்ன தான் ஆகும் மடமா போய்விடும்.? இல்லையே.! கொஞ்சம் உங்கள் ஆடைகள் அலங்கோலப்படும், புள்ளை சீச்சா அடிச்சா குளிக்கவேண்டி வரும், ஏதாவது ஒண்ணு ரெண்டு சாமான் உருளும், உடையும்..!! இவற்றை எல்லாம் சரிபண்ணி விடலாம் ஆனால் இரண்டினாலும் கிடைக்கும் நிம்மதி சந்தோசம் எல்லாவற்றையும் நீங்கள் என்ன விலை கொடுத்தும் வெளியில் பெறமுடியாது .

 

சின்னஞ்சிறு குழந்தைகளின் மழலைப்பேச்சு, பிராணிகளின் விளையாட்டு, குட்டிக்கோபம், செல்லக்கடி இவற்றில் மனம் இளகாதவர்கள் மனிதராக இருக்க முடியாது. போகும் இடத்தில் வாங்கும் கடுப்பை எல்லாம் வீட்டில் கொண்டுவந்து காட்டும் எங்கள் கனவான் கூட்டதிற்கு ஒரு செல்லப்பிராணி வீட்டில் இருந்தால் மனுசன் வாங்கின கடுப்பை வாசலிலேயே விட்டுட்டு வரும்.நாங்கள் போடுகின்ற மூன்று நேர சாப்பாட்டுக்கும் படுக்க ஒரு இடத்திறகும் அவை காட்டும் அன்பு வேறு எங்கும் கிடையாது. நாய்கள் ஒரு போதும் கடமைக்கு வாலாட்டுவதில்லை எங்களைப்போல..!!

 

நாய் பூனை ஆடு மாடு தொடங்கி அத்தனை பிராணிகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்..!!விசேடமாக நான் பாரத்து ரசிக்கும் ஒருவர் எங்கள் வீட்டு வேப்பமர அணில் பிள்ளை.!! துள்ளித்திரியும் இந்த அணிலாரின் சுறுசுறுப்பு எனக்கு இருந்தால் எப்படி இருக்கும் என நான் எண்ணிப்பார்ப்பது உண்டு.அணில்பிள்ளை சாப்பிடும்போது கூட வாலை சும்மா வைத்திருக்காது அங்கே இங்கே ஆட்டிக்கொண்டே சாப்பிடும் அவதானித்து பாருங்களேன். நான் எங்கு சென்றாலும் எந்த அறிமுகமில்லாத பிராணியையும் தொட்டுத்தடவ தவறுவதில்லை.இதில் நாய்கள் பழக கொஞ்சம் காலம் எடுக்கும் என்றாலும் அனேகமாக எனது நணபர்களின் வீட்டு நாய்கள் எல்லாம் சிறிது காலத்தில் என் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிடுவார்கள்.

 

boy-dog-prayingசெல்லப்பிராணிகள் விளையாட்டுக்கு மட்டும் அல்ல உடல் உள ஆரோக்கியத்திற்கும் மிகவும் உறுதுணையாக உள்ளன.வயோதிப காலத்தில் முதியவர்களை சோர்ந்து விடாமல் வைத்திருக்க  உதவும் இவை அவர்கள் தனிமையாக உணர்வதையும் தடுத்து அவர்களின் வாழ்க்கையில் இறுதிவரை ஒரு பிடிப்பை ஏறபடுத்துகின்றன. வெளிநாட்டில் இருக்கும் புள்ளைகளை விட ஆடுமாடுகள் இவர்களில் வைத்திருக்கும் அன்பு அதிகம் .

 

உடல் எடை குறைப்பதற்கு ஏன் ஜிம்முக்கு போகவேண்டும் மாலை ஒரு மணி நேரம் ஒதுக்கி நாயோடு ஒடி விளையாடியும் கொஞ்ச தூரம் நடந்தும் கூட ஐந்து சதம் செலவளிக்காமல் உடல் எடை குறைக்கலாம்.இதைவிட செல்லப்பிராணிகள் மன அழத்தத்தை குறைப்பதுடன் உயர் குருதி அழுத்த நோயாளிகளுக்கு குருதி அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவுகிறது அன்பாக ஒரு பிராணியை வளர்ப்பது உயர் குரதி அமுகத்திறகு மாத்திரையை விட சிறந்த வைத்தியம் என்று கூறப்படுகிறது.இதன்மூலம் தன்னை வளர்பவரின் நீண்ட ஆயுளுக்கு இவை உறுதுணையாக இருப்பது ஆரய்ச்சிகள் மூலம் நிருபணமாகியுள்ளது இருதய நோயால் பாதிக்கப்பட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட 92பேரில் மேற்கொள்ளப்பட ஆய்வு ஒன்றில் செல்லப்பிராணிகள் எதுவும் வளர்த்திராத 29 பேர்ல் 11 பேர் ஒருவருடத்திலேயே இறந்து போக செல்லப்பிராணிகள் வளர்த்த 52 பேரில் மூன்று பேர்தான் இறந்திருந்தார்கள்.அத்துடன் ஒரு செல்லப்பிராணியை வளர்ப்பது மார்படைப்பு வருவதற்கான ஆபத்தை இரண்டு சதவீதத்தால் குறைப்பதாக இன்னொரு ஆராய்ச்சியில் சொல்கிறார்கள்.

 

இப்படி எத்தனையோ அனுகூலங்கள் இருந்தாலும் வெறும் காவலுக்கு மட்டும் நாயும் எலிபுடிக்க மட்டும் பூனையும் வளர்க்கும் கூட்டமும் நாட்டில் இருக்கத்தான் செய்கிறது. மேலை நாடுகளில் செல்லப்பிராணிகள் வளர்க்கசெலாவாகும் தொகையில் ஒரு குடும்பம் நடத்தலாம் என்று கூறுவார்கள் அங்கு இவற்றுக்கு இருக்கும் மரியாதை அந்தளவு..!!! எங்களூரில்…????

 

cute-dog-yawning11233800905 இவற்றால் வரும் வில்லங்கங்கள் என்று பார்த்தால் ஒன்று,நாய் பூனை போன்றவற்றின் மயிர்களுக்கு சில பேருக்கு ஒவ்வாமை இருக்கும் இது ஆஸ்த்துமாவை கூட அவர்களுக்கு ஏற்படுத்தும். இதைவிட  ஒழுங்கற்ற கவனிப்பால்  இவற்றின் (rabiesvirus) வைரஸ் தொற்றுக்குள்ளான உமிழ் நீர் மூலம் பரவும் விசர்நாய்க்கடி என்று சொல்லப்படும் நீர் வெறுப்பு(rabies)நோய், மற்றும் இவற்றில் வளரும் உண்ணிகளின் மூலம் பரவும் தைபஸ் என்ற ஒரு வகை காய்ச்சல் எனபன ஏனைய முக்கியமான சுகாதார பிரச்சனைகள்.ஆனால் இவை இரண்டும் உங்கள் பிராணிகளை சுகாதாரமாக தடுப்பு மருந்து ஏற்றி வளர்த்தால் ஒரு பிரச்சனையே இல்லை.!!(இலங்கையில் தான் இது மிகவும் அதிகம் )உங்களை சந்தோசமாக மன அழுத்தத்தை குறைத்து ஆரோக்கியமா வாழ வகை செய்யும் இந்த பிராணிகளை ஆரோக்கியமாக வளர்ப்பது உங்கள் கடமை இல்லையா.!! 

 

 

 

.

Monday, February 8, 2010

என் தேவை!!!

  self-esteem

கோடையில் எத்தனை தடவை,

கொல்லப்பட்டாலும்..

மாரியில் துளிர் விடும்..!

கோரைப்புற்கள்..!!

 

பிஞ்சு வயதில்..

கால் பிரண்டு விழுந்தாலும்..

அழாமல் எழ முயலும்..

பிள்ளை மனது..!!

 

முறித்து நீ.!

எங்கோ தூக்கி எறிந்தாலும்..

ஒட்டியிருக்கும் மண்ணில்..

உயிர் கொள்ளும் கதியால்..!!

 

ஒரு வினாடி ஓய்வின்றி.

கண்டம் விட்டு கண்டம்…

கடலும் கடந்து வரும்…

இரு சிறகு கொண்ட பறவை..!!

 

மார்கழி மழை மப்பு..

இடைவிடாமல் தூறும் மேகம் – விலக்கி

எட்டிப்பார்க்கும்…

சிறு வெயில் கீற்று..!!

 

இத்தனையும் ஒட்டுமொத்தமாய்..கொண்ட

ஒன்று  மட்டும்…தேவை..

உன் முயற்சி திரி கொளுத்தி….

வாழ்வில் ஒளியேற்றும்..

!!!நம்பிக்கை!!!

ஆழமறியா சமுத்திரத்தில்…

உன்னை அம்மணமாய் போட்டாலும்…

கை..கால் அடிக்காமல்…

கடலுக்குள் மூழ்காதே..

சிலவேளை கடலும் உறைந்துவிட…

நீ ஏறி நடந்து வரலாம்!!!

 

 

.

Thursday, February 4, 2010

நானும் சாமிதான்..!!!

அரசடி வீதியால் அவசர அவசரமாக எனது பைக்கில் வந்து கொண்டிருந்தேன்!! வழமைக்குமாறாக வண்டியின் வேகமுள்ளு 60km/h வேகத்தை தொட்டுக்கொண்டிருந்தது. எனது நண்பன் ஒருவன் வீட்டு வாசலில் வந்து நின்று அழைப்பை எடுத்திருந்தான் “மச்சான் எங்க நிற்கிறாய் வீட்ட வரச்சொல்லிப்போட்டு …….” இதுதான் காரணம், சின்ன அலுவலாக இவன் எங்க இப்ப வரப்போறான்!! என நினைத்துத்தான் வெளிக்கிட்டேன் ஆனால் வந்துட்டான்..!! வந்தே விட்டான்..!! வேகத்தை குறைத்தேன் சிறிய வளைவு ஒன்று கவனிக்காமல் விட்டால், எனக்கு ஆசுப்பத்திரியிலோ காவல் நிலையத்திலோ அனுமதிப்பத்திரம் நிரப்ப வைச்சிடுவாங்கள்…!! என்று எண்ணிய எண்ணம் மறைவதற்குள்.. ஒரு உருவம் வீதியின் அடுத்த முனையிலிருந்து நடுவீதியை நோக்கி வரமுறபட்டது .. சட்டென கிளச்சை பிடித்து மேலும் வேகத்தை குறைத்து அந்த உருவத்தை கவனித்தேன் அதன் செய்கைகள் எனக்கு மேலும் அதிரச்சியளித்தது.!!

 

அவர் ஒரு நடுத்தர வயது மனிதர் சீராக ஆடை அணிந்திருந்தார்.. முழுக்கை சட்டை, நீள்காற்சட்டை, நான்றாக வாரப்பட்ட தலைமுடி, பாரக்க நல்ல தோற்றம்!! வீதிக்கு குறுக்கே வந்து என்னை மறிப்பதற்காக கையை காட்டிய அந்த மனிதர், பின்னர் ஒரு கும்பிடு போட்டார்!! எனக்கு அதிரச்சியும்!! குழப்பமும்!! என்ன செய்வதென்று புரியும் முனபாக, மீண்டும் அதே கும்பிடு!! வண்டியை நிறுத்தி கவனித்தேன். இந்த முறை எனக்கு குழப்பம் கலைந்தது. அவர் ஒரு பேச்சுப்புலன் செவிப்புலன் அற்றவர் நல்லூர் இருக்கும் திசையை காட்டி, தன்னை ஏற்றி சென்று விடும்படி கேட்கிறார்.. போல.. எல்லாம் புரிவதற்குள் மனிதர் இன்னும் பல கும்பிடுகள் போட்டிருந்தார். கோவில் என்பதைத்தான் அவர் கும்பிட்டு காட்டி இருக்க வேண்டும்.

 

ஆனால் நானோ அந்த வழியால் செல்ல வேண்டி இருக்கவில்லை. அவருக்கு விளங்கப்படுத்த எனக்கு சைகை மொழியுந்தெரியாது, வீட்டு வாசலில் நிறகும் நண்பனின் புண்ணியத்தில் என் தொலைபேசி வேறு தொடர்ந்து அடித்துக்கொண்டே இருந்தது. ஆனாலும் இறுதியில் எனக்கு அவரின் வேண்டுகோளை புறக்கணிக்க மனம் வரவில்லை ஏற்றிச்சென்று நல்லூர் கோவில் முன்பாக இறக்கி விட்டேன். அப்படியே கோபுரத்தை பார்த்து முருகனுக்கும் ஒரு விண்ணப்பம் போட்டேன் “நல்லூர்க்கந்தா நான்தான் உன் வாசல் பக்கமே தலை வச்சு படுக்கிறதில்ல ஆனா உன் பக்தன் ஒருவனை உன் பாதார விந்தங்களில் கொண்டு வந்து விடுகிறேன் அவனுக்கு அளிக்கும் அருளில் மிச்சம் மீதி இருந்தால் எனக்கும் அனுப்பி வைப்பா கனக்க தூரமில்ல பக்கத்தில் தான் இருக்கிறன்” விண்ணப்பத்தை அனுப்பி வைத்துவிட்டு பின்னாலிருந்து இறங்கியவரை திரும்பிப்பாரத்தால், இறங்கிய மனிதர் தலையை ஆட்டி இன்னும் ஒரு கும்பிடு போட்டார் பாருங்கள். இது நடந்து ஒரு வாரமாகிறது இன்னும் மனிதர் என கண்ணுக்குள் தெரிகிறார்.

 

பல சமயங்களில் பிச்சைக்காரர்கள் காசு போடும்போது கும்பிடுவார்கள் அந்த சமயங்களில் இப்படி மனதுக்கு ஒரு விதமாக உணர்ந்ததில்லை ஆனால் இப்போது இப்படி பாரக்க நன்றாக இருந்த ஒருவர், அதுவும் பேசும் புலன் அற்றவர் ,என்னைப்பார்த்து கும்பிட்டது மனதுக்குள் ஏதோ செய்தது.

 

இப்ப சொல்லுங்க நீங்க எத்தனை தடவை அப்பு சாமி ஆண்டவா பிள்ளையாரப்பா அம்மாளாச்சி தாயே என்று விழுந்து விழுந்து கும்பிட்டிருப்பீரகள்!! எத்தனை தடவை நீங்கள் வேண்டியதை அண்டவன் அளித்திருக்கிறார்.??? ஆனால் நான் ஒரு சில கும்பிடுகள் ஒருவர் போட்டதற்கே அருள் பாலித்து இருக்கிறேன் இல்லையா..!!! இனி நீங்களும் ஏதும் பிக்கல் புடுங்கல் என்றால் என் பிளாக்கு பக்கம் வந்து ஐஞ்சாறு கும்பிடு போடுங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு அருள் புரிவான் இந்த பாலவாசகன்!!!

பிறகுறிப்பு- நல்லூர் கந்தனுக்கு நான் போட்ட விண்ணப்பத்திறகு இன்னும் பதில வரவில்லை!! பாருங்கள்!!

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...