நான் கவிதை நூல்கள் படித்து பலநாட்கள்..! வலைப்பூக்களில் வாசிப்பது தவிர வேறு எதையும் படித்தது இல்லை. வைரமுத்துவுடன் கட்டுண்டு கிடந்த ஒருகாலத்தில் அவரது கவிதைப்புத்தகங்களை தேடி தேடி படித்தேன் அதோடு சரி.. அதற்கு பிறகு கவிதை நூல்கள் கிடைக்கவும் இல்லை படிக்க நேரமும் கிடைக்கவில்லை.
காதலை பாடுதல்
மண் பட்ட பாட்டை;
மக்கள் உறும் துயரத்தை;
புண் பட்டு போகும் எம்
பூவின் மென் இதயத்தை;
கண் கண்ட காடை காட்டேரி
கடைக்குணத்தை
காகிதத்தில் ஏற்றாத கவிப்பாவி ஆவேனோ..?
மண் பட்ட பெரும்பாடு
மா கொடிது; அதனிடையே
கண் பட்டு நான் பட்ட
கதை பெரிது – காற்று வழி
மென் பட்டு இதழில்
மிதந்து வரும் புன்னகையில்
மின் சொட்டு பாய்ந்த
உயிர்க்காதலை பாடுவேன் பின்
நீண்ட நாட்களுக்கு பிறகு என் கையில் ஒரு கவிதை நூல் கிடத்த சிறு இடை வெளியில் படித்து பார்த்தேன். இது கவிதை நூல் மட்டுமல்ல எங்கள் கதைகள் பலவற்றை சொல்லும் ஒரு காலத்தின் பதிவு.ஈழத்து சராசரி குடிமகன் ஒவ்வொருவரும் உணர்ந்த கணப்பொழுதுகள் தான் வேல் சாரங்கனின் “மொழி பெயர்க்கப்பட்ட மௌனங்கள்”. அழகாகவே மொழி பெயர்த்திருக்கிறார். காலத்திற்கு மிகவும் அவசியமானதும் கூட நாங்கள் எப்படி எல்லாம் வாழ்ந்தோம் எதை எல்லாம் இழந்தோம் ..?எங்கள் கதை என்ன..?என்பதை எதிர் கால சந்ததிக்குஎடுத்து சொல்ல ஒரு நல்ல ஊடகம்.பெரும்பலான கவிதைகளில் இப்படி ஈழமக்களின் வாழ்வியலே வடிக்கப்பட்டிருந்தாலும் சமூகம் சார்ந்த இயற்கை சார்ந்த பொதுவான கவிதைகளும் புத்தகத்தை அலங்கரிக்கின்றன.
வேல் சாரங்கன் யாழ் மருத்துவ பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவன் அவர் கவிதை புனையும் புலமையை எங்கள் கல்லூரியே அறியும். அவர் கல்லூரி நிகழ்வுகளில் வழங்கிய கவிதைகள் அவரை எங்கள் கல்லூரி கவிஞ்ஞனாக இனம் காட்டி இருந்தது.இதனால் சாரங்கன் கவிதைநூல் ஒன்று வெளியீடு செய்யப்போகிறாராம் என்ற போது எனக்கு எந்தவித ஆச்சரியமும் ஏற்படவில்லை ஆனால் நிகழ்வுக்கு போகவும் நூலை படிக்கவும் பல வேலைகள் தடங்கலாக இருந்தது.
இறுதியாக இப்போதுதான் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. கவிதை நூலில் உள்ள அத்தனை கவிதைகளும் படிக்கும் போது மனதை மிகவும் பாதிக்கிறது திரும்பவும் ஒருமுறை படித்து இந்த சுகத்தை மீண்டும் மீண்டும் அனுபவிக்க தூண்டுகிறது.
நூலில் எனக்கு மிக மிக பிடித்துப்போன ஒரு கவிதை.. இந்த வரிகளை படித்து பாருங்கள் இந்த நான்கு வரிகளில் அந்த நாட்களின் எத்தனை வலிகள் சிதறியிருக்கிறது.
எது வரை இது நீளும்
மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை..?
கவிஞ்ஞர்களே ..!
கடதாசிகளை கொடுங்கள்
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்
இல்லயேல்
கண்ணீரையாவது துடைக்கட்டும்..!
“ஒவ்வொரு தாய்க்கும் பாதுகாப்பான பிரசவம்” இதுதான் மருத்துவ உலகின் மந்திரம் ஆனால் எங்கள் குழந்தைகள் எங்கு பிறந்தன..?தமிழ் மக்களின் முற்றுமுழுதான வேதனையின் விம்பமான இன்னொரு கவிதையில் தமிழ் குழந்தைகளின் பிறந்த கதை சொல்லப்படுகிறது
நதி மூலம்
“போரும் கருக்கொண்டு,
தேசம் நெருப்பண்டு
குருதி கலந்த அருவிகளும்
கரும் சாம்பல் சிதறிய தெருக்களும்
உருக்கொண்ட பொழுதுகளில்…
பச்சை தண்ணீருக்காய்
பகல் முழுதும் வரிசை செய்து
பொழுது முடியும் வேளை
தாகமடக்கிய பொழுதுகளில்…
என்று தமிழ் குழந்தைகளின் பிறந்த கதையை விபரிக்கும் சாரங்கன் இறுதியில் கேடகிறார்…… கேள்வி ஆழமாய் இதயத்தில் இறங்குகிறது…..
எப்படி சொல்வது இத்தனை நீளமாய் ..?
தலைநகரில்,
அடையாள அட்டையை புரட்டியபடி
ஒற்றை வார்த்தையில் கேட்கிறாய் சோதரா…
பிறந்த இடம்…?
மரங்கள் தான் இயறகையின் ஆதாரம்..! மண்ணின் உண்மையான குழந்தைகள். தன் வீட்டு வளவின் ஓரத்தில் அத்தனை காலமும் தன்னோடு கூடவே சேர்ந்து வளர்ந்த, நெஞ்சை நிமிர்த்தி நின்ற மரம் ஒன்று பாதுகாப்பு.. மின்சாரம்.. என்று வெட்டி வீழ்த்தியதை பார்த்து வெடித்திருக்கிறார் சாரங்கன்..
பேசப்படாத படுகொலை
எங்கே உளது
மர உரிமை ஆணைக்குழு…?
மரம் மிகப்பெரியது;
மனிதனை விடவும்.!
இதை விட
நண்பா நானும் நீயும்
இறந்தே இருக்கலாம்
ஒரு கணப்பொழுதில்.!
நம் போல் மனிதர்
பிறப்பது சுலபம்…!
சாரங்கனின் அத்தனை கவிதைகளும் '”பாட்டினை போல் ஆச்சரியம் பார் முழுதும் இல்லையடா” என்று பாரதி சொன்னது போல் வாசகரகளின் மனதில் ஒரு வியப்பையும் சிலிர்ப்பையும் ஏற்படுத்துகிறது. அதை நீங்களும் உணர்ந்து கொள்ள புத்தகத்தை வாங்கி படியங்கள்.. வாழ்க்கைச்சுமை கல்விச்சுமை என்பவற்றை எல்லாம் மீறி நிமிர்ந்து எழுந்துள்ள இந்த ஈழத்து இளம் கலைஞ்ஞனை உங்கள் கருத்துக்களால் உரமாக்குங்கள்.
இளம் கவிஞ்ஞனிடம் வாசகனுக்கு சொல்ல செய்தி உண்டு.சொல்ல வருவதை குறிப்பாக சொல்லும் நுட்பம் தெரிகிறது. சொற்பஞ்சம் இல்லை. தமிழ் கவிதைக்குரிய ஓசை பற்றிய பிரக்ஞை உண்டு.
- கவிஞ்ஞர் சோ. பத்மநாதன்
வேல் சாரங்கனின் மொழி பெயர்க்கப்பட்ட மௌனம் கவிதை நூலை பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கங்கள்.
கொழும்பு- 0777537930.
யாழ்ப்பாணம் - 0779779769
கண்டி - 0779697270.
புத்தகம் கிடைக்கும் இடங்கள்
கொழும்பு -
1.Poobalasingam bk depot, 309A 2/3 Gale rd,welawta.
2. Kokilam bk shp, 4c-5 fussels lane,welawata.
3. Cordova bk shp. 226, gale rd.welawta.
யாழ்ப்பாணம்-
1.poobalasingam.
2.book lab(ramanathan rd)