நல்ல பாடல்களை கேட்கும்போது எனக்கு எப்போதும் ஒரு கிறுக்கத்தனமான சந்தேகம் வரும் அது பாட்டா..? மெட்டா…? சிறந்தது.. என்பதுதான் பல சமயங்களில் எத்தனை தடவை திரும்ப திரும்ப யோசித்தாலும் ம்ஹூம்…விடையே கிடைக்காது. இந்த கேள்வி எனக்கு மட்டுமல்ல வைரமுத்துவுக்கும் இளையராஜாவுக்கும் வந்து தொலைந்ததுதான் அவர்கள் இருவரும் நிரந்தரமாக பிரிய காரணமானது. அப்படி ஒரு வில்லங்கமான வினா இது. அண்மையில் ராவணன் பாடல்கள் வெளியான போது ‘உசிரே போகுதே’ பாடலை கேட்கும் போது மீண்டும் இந்த கேள்வி மூக்கை நுளைத்தது என் மண்டைக்குள் நடந்த சண்டையில் பாடல் பாடமாகிப்போனதுடன் ஒரு நல்ல பதிலும் கிடைத்தது.
ஒரு நல்ல பாடல் ஒரு நல்ல குடும்பம் போல தனியே பிரித்து பார்க்க முடியாது பிரிந்து போனால் சேர்ந்து இருக்கும் போது இருந்த சிறப்பு இல்லாமல் போய்விடும் மெட்டும் பாட்டும் அற்புதமாக பொருந்தி மெட்டு பாட்டை அழகுபடுத்த.. மெட்டுக்கு பாட்டு அர்த்தத்தை கொடுக்க.. மொத்தத்தில் பாடல் முழுமையடைகிறது.
இதுதான் அந்த பதில் !!
இந்த பதில் கூட நீண்ட காலம் நிலைக்க முடியவில்லை மீண்டும் குழப்பம் !!அண்மையில் கலைஞ்ஞர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய ராவணன் முதல் பார்வை நிகழ்ச்சியில் மெட்டும் பாட்டும் மேடை ஏறி இருந்தன ஒலித்தட்டில் இடம்பெறாத பாடல் ஒன்று முதலில் வைரமுத்து கவிதை வாசிக்கிறார்….
நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேடகையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..
அர்த்தமுள்ள அழகிய வரிகள் வைரமுத்துவின் குரலில் கணீரென்று காதுகளில் ஒலித்து இனம்புரியாத ஒரு கிளர்ச்சி மனதில். வைரமுத்து எப்பொழுதும் மணிரத்தினத்திற்கு கொஞ்சமும் குறையாத முத்துக்களைதான் கொடுத்து வருகிறார்..
ரஹ்மான் ஒலிவாங்கியை கையில் எடுக்கிறார் நான்கு வரிதான் பாடுகிறார் அவரின் குரலில் வரிகளுக்குள் மெட்டு கலந்து பாடல் உயிர் பெறுகிறது. கவிதைக்குள் அடைபட்டு கிடந்த உணர்வுகள் மனதை ஆக்கிரமிக்கின்றன. மீண்டும் குழப்பம் இந்த முறை பதில் இப்படி வருகிறது !
கவிதை என்பது ஒரு அழகிய சிலை போல அதன் உணர்வுகளை வெளிக்கொணரும் உன்னதமான ஜீவன்தான் மெட்டு.
இசைக்கே பெருமை சேர்க்கிறார் ரஹ்மான் !!
-----------------------------------------------------------------------------------------------------------------------ராவணன் படத்தில் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் பிடித்த பாடல் உசிரே போகுதே. இப்பொழுது இந்த புதிய பாடல் எனக்கு மிக மிக பிடித்த பாடலாக மாறி விட்டது.முதலில் ஹிந்தியில் இந்த பாடலை கேட்கும் போதே அடிமையாகி விட்டிருந்தேன் இப்போது தமிழ் வரிகளுடன் பாடல் மனதை பிழிந்தெடுக்கிறது. என் தனிமையின் வெற்றிடத்தை இந்த பாடல் தான் இனி நிரப்பியபடி இருக்கும்.
ஆனால் ஒரு கவலை குல்சாரின் ஹிந்தி வரிகள் இசையுடன் பொருந்துவதை போல வைரமுத்துவின் தமிழ் வரிகள் ரஹ்மானின் இசையுடன் நெருக்கமாக பொருந்த வில்லை எட்டியே நிற்கின்றன இந்த பாடல் மட்டுமல்ல பல உதாரணங்கள் இருக்கின்றன. என்ன கோபம் எங்கள் தமிழன்னைக்கு..?
நாளுக்கு நாள் ராவணன் படத்திற்கான எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டிருக்கின்றது சந்தோன் சிவனின் கைவண்ணத்தில் இதுவரை தொலைக்காட்சியில் நான் பார்த்த அத்தனை காட்சிகளும் பயங்கரமாக இருக்கின்றன . இப்போது கூடுதலாக இந்த பாடல் அதுவும் படத்தின் முக்கியமான தருணத்தில் “படத்தின் உச்ச கட்ட பாட்டு இது.. இந்த மண்ணிடம் இருந்தும் ஒரு பெண்ணிடம் இருந்தும் ஒரு வீரன் விடைபெறும் போது வரும் பாடல்” என வைரமுத்து குறிப்பிடுகிறார் திரையில் தான்பார்க்க முடியும். காத்திருப்போம் வரட்டும் ஜீன் 18 .