Tuesday, June 14, 2011

தேடி வந்த நிம்மதி.

காலை 7 மணி தனது கடமையில் கண்ணும் கருத்துமாக நான்காவது தடவையாக அடித்த அலாரத்தை நிறுத்திவைத்து விட்டு அருகில் காதில்லாத பிறவி போல இன்னும் இழுத்து போர்த்தி கொண்டு உறங்கி கொண்டிருந்த நிர்மலாவின் கண்களை உற்றுபார்த்து கொண்டிருந்தான் விமலன். மெல்ல மெல்ல அந்த கரிய இமைகள் பிரிந்து அவள் பார்வை அவன் மேல் படர்ந்தது.

கொஞ்ச நேரம் அவனை புரியாமல் விழித்தவள், மறுகணமே சோம்பல் முறித்தவாறு அவளது இயற்கையான குறும்புத்தனம்   முகத்தில் படர.  

விமல் பேசாமப்படும் இன்னும் கொஞ்ச நேரம் !! ப்ளீஸ்..  அவள் கண்களில்  எஞ்சியிருந்த தூக்கம் கெஞ்சியது அவன் பார்வையை தவிர்க்க மறுபடியும் மறுபக்கம் புரண்டு படுத்தாள்.

விமலனும் அதை புரிந்து கொண்டவனாக எழுந்து சென்று அந்த அறையின் ஜன்னல்களை திறந்தான் அவர்களை பார்க்கவென்றே காத்திருந்தது போல நுவரெலியாவின் மலைமுகடுகளுகிடையே இருந்து மேகங்களை விலக்கியவாறு வந்து விழுந்தன  சில சூரிய கீற்றுகள்.

விமல் ஜன்னலை சாத்தும்..!

திரும்பிபாரத்தான் விமலன் ஒளிக்கீற்றுகள் நிர்மலாவின் முகத்தில் சின்ன சின்ன

பொட்டுக்கள் போட்டிருந்தன..

விமல் !

என்ன..!

இப்ப ஜன்னலை சாத்த போறீரா இல்லையா !

‘………………………..’

விமலன் ஜன்னலினூடாக பார்த்தான் அந்த காலைப்பொழுதில் நுவரெலியாவின் மலைக்குன்றுகள் மேககூட்டங்களை அணிந்து ரம்மியமாக காட்சிஅளித்தன. அவன் முகத்திலும் வெயில் விழுந்தது காலை வெயில் தான் ஆனாலும் யாழ்ப்பாணத்து வெயிலின் சூடு இல்லை.

நிர்மலா இந்த வெயில் சுடவே இல்லை !

சொல்லியவாறே அவளை சீண்டுவதற்காக கொஞ்சமே விலக்கி இருந்த ஜன்னலின் திரைச்சீலையை அகலத்திறந்தான்  இப்போது காலைவெயில் அந்த அறையை ஆக்கிரமித்திருந்தது.. கூடவே நிர்மலாவின் முகத்தில் கோபம் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருந்தது. வெயில் சுட்டதோ இல்லையோ விமலனின் இந்த செயல் அவளை ரொம்பவும் சுட்டிருக்கவேண்டும்.

இதுதான் கடைசி..!உம்மோட இனி கதை இல்லை..!

சொல்லியவாறே விடுக்கென்று கோபத்துடன் படுக்கையை விட்டு எழுந்து வெளியேறினாள் நிர்மலா.

விமலன் எதுவும் பேசவில்லை அவனது  முகபாவம் இந்த வார்த்தையை கேட்பது இது ஒன்றும் முதல் தரம் இல்லை என்பது போல இருந்தது.

ஒரு மணி நேரம் மிக அமைதியாக கழிந்திருந்தது இருவரும் அவர்களது விடுதி இருந்த அந்த மலைச்சரிவிலிருந்து இறங்கியவண்ணம் இருந்தார்கள்.

விமலன் அவளை சமாதானப்படுத்த கையாண்ட வழமையான உத்திகள் அனைத்தும் தோற்று போயிருந்தன இனி அவன் புதிதாகதான் ஒன்றை கண்டு பிடிக்கவேண்டும்.

அவர்கள் நுவரெலிய நகரை அண்மித்து இருந்தார்கள்,   அவர்கள் நடந்து கொண்டிருந்த நடைபாதையின்  ஓரமாக அழகிய புற்கள் வைப்பதற்காக ஒரு சில்ர் அதற்கு மண் போட்டு செப்பனிட்டு கொண்டிருந்தார்கள்.  எங்கு பார்த்தாலும் இரண்டே நிறம் ஒன்று பச்சை அடுத்தது வெள்ளை வெள்ளையாய் சுற்றுலாப்பிரயாணிகள் நகரமே காசை உடுத்திருந்தது. அதற்குள் உலாவி திரிந்தவர்களில் தோட்ட தொழிலாளிகளளை தெளிவாக வேறுபடுத்தி காட்டியது அவர்கள் உடுத்திருந்த வறுமை!   

சிந்தித்தவாறே மெதுவாக நடந்து கொண்டிருந்தான் விமலன்.

விமல் இங்கே பாருமன் !

அதிசயமாக கலைந்த அந்த அமைதியில் விளைந்த ஆச்சரியத்தை முகத்தில் காட்டாத விமலன் என்ன நிம்மி..! என்று கொஞ்சம் குழைந்தான் ! அது அந்த நேரத்தில் தேவையாகவும் இருந்தது.

அவள் காட்டிய திசையில் ஒரு பெரிய பலகையில் நுவரெலிய நகரை அழகுபடுத்தும் திட்டம் என ஏதோ ஏதோ எழுதி பலரது பெயர்கள் போடப்பட்டிருந்தன. அதைத்தான் சுட்டி காட்டியிருந்தாள் நிர்மலா.

யாழ்ப்பாணத்திலயும் இப்பிடி ஒரு திட்டம் கொண்டுவரலாம் தானே ..! 

இது ஒரு சுற்றுலா நகரம் நிர்மலா..! அழகா இருந்ததாதான் அதிகம் பேர் வருவார்கள் அப்பதான் பெரிய பெரிய புள்ளிகளின் சுற்றுலா விடுதிகளில் எல்லாம் காசு புரளும் உன்ர ஊரை அழகு படுத்தி அவங்களுக்கு ஒண்டும் கிடைக்காது நிர்மலா ! கீழ பாத்தனி தானை தோட்ட தோழிலாளிகளின் லயங்களின் கேவலத்தை அதை சீர்படுத்த இவ்வளவு நாளும் ஒரு திட்டமும் இல்ல..!

விமலனிடம் இருந்து ஒரு நெடியபெருமூச்சு வந்தது..நுவரெலியா அருகில் அழகிய மனைவி அந்த சந்தர்பத்தில் உண்மையில் தேவையில்லாத ஒன்று.

உங்களுக்கு எங்க போனாலும் அரசியல் தான் .. ! விமல் இங்க பாரும் இங்க இருக்குது அம்பாள் சைவ உணவகம் என்ரபிரண்டு கூட நல்ல சாப்பாடு நல்ல உபசரிப்பு எண்டு சொன்னவள் ! இங்க போவம் என்ன சொல்லுறீர்...?

நிம்மி என்ன இருந்தாலும் உன்ர சமையல் போல வருமோ !

திரும்பி பார்த்து முறைத்தாள் நிர்மலா !

உண்மையா தான்டி .. வழமை போல இன்னுமொரு பொய் சொன்னான் விமலன்!சும்மா நடிக்காதீங்க விமல்!

izs013101

இருவரும் உள்ளே சென்று இரு காலியான இருக்கைகளின் கால்களுக்கு வேலைவைத்தார்கள். இன்னும் ஒரு மோதலுக்கு பிள்ளையார் சுழி போட்ட   விமலனுக்கு கொடுத்து வைக்கவில்லை போலும் அவளை மேலும் சீண்டி விட  ஒரு குறும்பு கோபத்துடன் நிமிர்ந்த விமலனை அதிர்ச்சியுடன் வரவேற்றது அவளது முகம்.

அவளது கண்கள் அவனுக்கு பின்னால் நிலைத்திருந்தது அந்த திசையில் அவர்களுக்கு தண்ணீர் எடுத்து கொண்டு வந்திருந்த வெயிட்டர் நின்றிருந்தான் அவன் கையிலிருந்த  தட்டில்  அசாதாரண நடுக்கம் தெரிந்தது விரைவில் இரண்டு கோப்பி டம்ளர்ளும் சரிந்து ஒரு குட்டி சுனாமியை தட்டில் கொண்டுவர துடித்துகொண்டிருந்தன.

 

நிர்மலாவோ வியர்க்க ஆரம்பித்திருந்தாள் அவள் கையிலிருந்த கைக்குட்டை வியர்வையில் விரல்களிடையே சலவை செய்யபட்டு கொண்டிருந்தது. விமலனுக்கு ஒன்றும் புரியவில்லை நிம்மி நிம்மி என்னாச்சு அருகில் சென்றவனின் கைகளில் அவள் தலை துவண்டு விழுந்தது.  ஒன்றுமே புரியவில்லை நிம்மி நிம்மி என்று அவளை உலுப்பியவாறே அந்த வெயிட்டரை பார்த்தான் அவர்களுக்கு கொண்டு வந்திருந்த தட்டை முன் மேசையில் வைத்துவிட்டு  வழியில் கடைக்கு வந்த ஒருவரை கவனிக்காமல் இடித்தபடி வீதியின் போக்குவரத்தை ஒரு நிமிடம் குழப்பிவிட்டு வேகமாக வெளியேறி கொண்டிருந்தான்.

அவன் கண்களிலிருந்து சிந்திக்கொண்டிருந்த கண்ணீர் விமலனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

ஒரு அரைமணி நேரத்தில் மீண்டும் இருவரும்  அந்த அறையிலிருந்தார்கள்.

விமலன் அவனுக்கு மிகவும்பிடித்த அந்த ஜன்னலினூடு வெளியை பார்த்தபடி இருந்தான் ! அவனுக்கு எப்படி ஆரம்பிப்பது என்ற தெரியவில்லை..

நிர்மலா இந்த சிணுங்கலை முதல் நிறுத்து ! காதல் கதை ஏதுமெண்டா அத முதல் சொல்லு  ஒரு குறும் படம் எடுக்க கதை தேடிக்கோண்டு இருக்கிறன் !

சிணுங்கல் களுக்கிடையில் சீறியது நிரமலாவின் குரல்

பகிடி விடாதீங்க விமல்..!

சரி சீரியசா கேட்கிறன் சொல்லு யார் அந்த தேவதாஸ்..! குரல்லில் கொஞ்சம் கடுப்பு இருந்ததோ தெரியவில்லை !

விமல் உண்மை என்னண்டு தெரிஞ்சா இப்பிடியெல்லாம் கதைக்கமாட்டீர்..!

அதுதான் தெரியாதே..!

உங்களுக்கு தெரியாம இருக்கிறதுதான் நல்லது விமல் !

சரி அப்ப நீ வடிவா ரெஸ்ட எடு நான் வெளியில ஒருக்கா போய்ற்று வாறன் !

எங்க..எங்க.. போறீங்க விமல்..

இல்லை அந்த கடையில போய் நான் உண்மைய அறியலாமா எண்டு பாத்திட்டு வாறன்…

விமல்.. சிணுங்கல்களுக்கிடையில் உடைந்தது அவள் குரல்…

அவன் என்ர  தம்பி விமல் !

என்னடி உளறுறாய் !!

பாலாஜி சகதிவேல் கதை ஒன்று எதிர் பார்த்த விமலனுக்கு அவள் கூறிய பாசமலர் கதை பெரும் அதிர்ச்சியை அளித்தது.

நிர்மலாவின் தம்பி ரமேஸ் சிறுவயதில் இருந்தே மனநிலை பாதிக்கப்பட்டவன் இருந்தாலும் அவளுக்கு தம்பி என்றால் கொள்ளை பிரியம்.குணமாக்குவதற்கு அவளது தந்தை எடுத்த முயற்சிகள் அத்தனையும் அவனது ஒத்துழைப்பினமை காரணமாக விழலுக்கு இறைத்த நீராக போயிற்று.

நிர்மலா வுக்கு வேறு வரன்கள் பார்க்க வேண்டும் பைத்திய குடும்பம் என்று தன் மகளுக்கு கல்யாணமே ஆகாதோ என்ற பயந்து ஆரம்பத்திலேயே ரமேஸை ஒரு மன நோய் வைத்திய சாலையில் சேர்த்தவர் அவள் கல்யாணம் முடியும் மட்டும் அவனை மீண்டும் திருப்பி அழைக்கவேயில்லை தந்தையின் இந்த செய்கையில் ஆத்திரமடைந்த ரமேஸ் ஒரு வழியாக நோய் குணமான பின்னும் வீடு திரும்பவில்லை. தன் வாழ்க்கைக்காக தம்பியை தொலைத்து விட்டேன் என இந்த சம்பவம் நிர்மலாவின் நெஞ்சுக்குள் ஒரு நெருஞ்சி முள்ளாக இருந்து வந்தது.பல வருடங்களாக அவர்கள் கைவிட்டிருந்தவனை அப்போதுதான் முதன் முதலில் சந்தித்திருக்கிறாள்.

இது தான் அவள் அழுது அழுது அரைமணி நேரமாக சொன்ன கதையின் சாராம்சம்.

அவளின் கதையிலிருந்த நியாய அநியாயங்களை அசைபோடபடி விமலன் அந்த மலைச்சரிவில் இருந்த  வீதியில் நடந்து கொண்டிருந்தான் தூரத்தில் தெரிந்த மலைக்குன்றுகள் எல்லாம் அவன் மனதில் இருப்பது போல ஒரு இறுக்கம் மனதை அக்கிரமித்திருந்தது. ஒரு அரைமமணி நடையில் திரும்பியவனின் முகத்தில் ஒரு தீர்வு தெரிந்தது.

நிர்மலா கெதியா வெளிக்கிடு ..

இந்த முறை நிர்மலா எங்க விமல்..? என்று கேட்கவில்லை !

அவர்களது அந்த முதலாவது பயணமே தன் வாழ்க்கையில் ஒரு நிம்மதியை சேர்த்து விடுமென நிர்மலா சிறிதும் எதிர்பார்கவில்லை புற்றுநோய் போல அவள் நெஞ்சை அரித்து கொண்டிருந்த அந்த வேதனைக்கு தன் கணவன் மூலம் தீர்வு கிடைத்து அவளுக்கு பெரும் ஆறுதலளித்தது நேற்று வீடு திரும்பிய பயண களைப்பிலும் அவளுக்கு தூக்கமே வரவில்லை மீண்டும் அந்த காட்சிகள் மனதில் திரையிடப்பட்டு கொண்டிருந்தன ரமேஸை தேடிப்பிடித்தது முதல் அவனை சமாதானபடுத்தியது மட்டுமல்லாமல் இனிமேல் தங்களோடு இருக்கும் படி கூட்டி வேறு வந்து விட்டான் வரும் வழியில் அவனுக்கு நல்ல ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறிக்கொண்டிருந்தான்.

இந்த முறை விமலனின் செல்லிடப்பேசி அலாரத்திறகு முதலே நிர்மலா விழித்திருந்தாள் கழைப்பில் அசந்து தூங்கிகொண்டிருந்த விமலனின் முகத்தை உற்று பார்த்து கொண்டிருந்தாள் முகத்தில் கவவையான உணர்ச்சிகள் எது தூக்கலாக இருந்தது என்று தெரியவில்லை ஆனால் ஒரு நிறைவு இருந்தது.

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...