Thursday, August 25, 2011

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந்ததிகளை சென்று சேர்கின்ற கொடுமை காலம் காலமாக நிகழ்ந்த வண்ணமேயே இருக்கிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட,  தன் தாய் தேசத்திற்காக  உயிர் நீத்த பல வீர மறவர்களின் கதைகள் மறைக்கப்பட்டு கொடிய  ஆக்கிரமிப்பாளர்களே கதாநாயகர்களாக கதைகள் பின்னப்படுகின்றன. சில வேளைகளில் அந்த தியாகிகள்  துரோகிகளாக சித்தரிக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.
இப்படியான தோற்று போன ஒரு தேசத்தின் உண்மையான சரித்திரத்தை கதைகள் காவியங்கள் வாயிலாக எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய  அந்த தார்மீக கடமையை  உறுமி என்ற திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறார் சந்தோஷ்சிவன்.
முதன் முதலாக பாரத தேசத்தை  கடல் மார்க்கமாக வந்தடைந்து மேலைத்தேய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவராக புகழப்படுவர் போர்த்துக்கேய வர்த்தக கடலோடி வாஸ்கொடகாமா. ஆனால் வாஸ்கொடகாமா புகழப்படும் அளவுக்கு, போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்கு எதிராக முதன் முதலில் கிளர்ந்தெழுந்து வாஸ்கொடகாமாவை கொன்று பழிதீர்க்க போரிட்ட கேலுநாயக்கர் வைவாலி என்கிற இரு இளைஞர்களின் கதை வரலாறுகளில் இல்லை.
இந்த கதைதான், சந்தோஸ்சிவனின் உறுமி-பதினாறாம் நூற்றாண்டு போர்வாள்.
உறுமி-சுருளிவாள் [உறுமி என்பது தமிழில் சுருளிவாள் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் பிரபலமாக விளங்கிய ஒரு போராயுதம். இந்த ஆயுதம் ஒரு வீரனுக்கு இறுதி கலையாகவே பயிற்றுவிக்கபட்டதாக சொல்லப்படுகிறது. சாம்ராட் அசோகா படத்தில் சக்கரவர்த்தி அசோகனை  மாபெரும் வீரனாக சித்தரிப்பதற்காக சந்தோஷ்சிவன் இந்த உறுமியை பயன் படுத்தி இருந்தார்.]
 
போர்த்துக்கல்லில் இருந்து ஆபிரிக்கா வழியாக கேரளாவின் கலிக்கட்டை அடையும் வாஸ்கொடகமாவின் முதலாவது இந்தியபயணத்தின் விவரணையுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். பெண்களுக்கு பதில் கேரள மிளகிடம் மனதை பறி கொடுத்த காமா அதற்கு மூன்று மடங்கு விலை கொடுக்க முன் வந்த போதும் மன்னர் சாமுத்ரி வியாபாரத்தில் எந்த வித ஈடுபாடும் காட்டவில்லை.வெறும் கையுடன் போர்த்துக்கல் காமாவை மிளகு ஆசை விடவில்லை.
மீண்டும் 15 ம் நூற்றாண்டுகளில் காமா வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இந்திய பயணங்களுக்கு இடையில் விரிகிறது கதை. கி.பி 1502, இந்த முறை காமா வெறுமனே மிளகு வாங்க வரவில்லை. 15 பெரிய போர்கப்பல்களுடன் இந்தியாவில் ஒரு வணிக மையத்தை உருவாக்கும் திட்டத்துடனேயே வந்திருந்தான். துரதிஸ்ட வசமாக காமாவின் வழியில் மெக்காவுக்கு சென்று விட்டு வந்திருந்த முஸ்லிம் யாத்திரிகர்களின் கப்பல் ஒன்று அகப்பட அதை சிறைப்படிக்கிறான் காமா. கப்பல் பயணிகள் மற்றும் கப்பல் உரிமையாளர் எவரினது பேரத்திற்கும் காமா இணங்கவில்லை. கப்பல் பயணிகளை மீடக கேரளாவில் இருந்து  பேச்சுவார்தைக்கு ஒரு முதிய பிராமணனும் 8 வயதே நிரம்பிய சிரக்கல் கொத்துவாள் மகன் கேலு நாயக்கரும் காமாவின் கப்பலுக்கு அனுப்பபடுகின்றனர்.[நிராயுதபாணியாக குழந்தையுடன் செல்லும் பிராமணரை போர்த்துக்கேயர் எதுவும் செய்யமாட்டார்கள் என்பது நம்பிக்கை.]
எந்த விதமான சுமுக பேச்சுவார்த்தைக்கும் உடன்படாத காமா, அவனது சொல்வழி கேக்காத நாயின் காதை அறுத்து பிராமணனின் முகத்தில் வீசுவதுடன் பிராமணன் காதையும் அறுத்து துன்புறுத்தி, கேரளா மீது பீரங்கி தாக்குதல் நடத்த உத்தரவிடுகிறான்!! முஸ்லிம் யாத்திரிகர்கள் கப்பலுடன் உயிருடன் கொளுத்தப்படுகிறார்கள் . ஆத்திரமடைந்த சிரக்கல் கொத்துவால் தன்னந்தனியாக காமாவின் கப்பலுக்கு சென்று சண்டையிட்டு உயிரை விட இடையில் அதிஸ்டவசமாக கடலில் குதித்து உயிர் தப்புகிறான் சிறுவன் கேலு. கரையெங்கும் கப்பலுடன் எரியுண்டு இறந்து போன பயணிகளின் பிணங்களிலிருந்த நகைகளை பொறுக்குயபடி தனியே திரும்பும் கேலுவுக்கு அடைக்கலம் கொடுத்து தன்னோடு கூடவே வைத்திருக்கிறான் வைவாலி. இருவரும் சேர்ந்தே வளர்கின்றனர். சிறுவன் கேலு தான் பிணங்களிலிருந்து  பொறுக்கிய அந்த நகைகளை கொண்டே  உறுமி வாள் செய்கிறான் அவனுடைய நோக்கம் ஒன்றேதான்!!! வாஸுகொட காமாவை கொல்ல வேண்டும்.  பலவிதமான போர்க்கலைகளும் பயின்று சொந்த ஊரான சிரக்கல் திரும்பும் கேலுவின் பழிவாங்கும் பயணத்தில் முஸ்லிம் வீராங்கனை அரக்கல் ஆயிஷாவும் சேர்ந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் வாஷ்கொடகாமா வின் மகன் இஸ்ராடியோ காமாவை சிறைப்பிடித்து சிரக்கல் கொண்டுவரும் வீரதீரம் மிக்க  கேலுவின் பழிவாங்கும் பயணம் என்ன ஆனது…? எனபதுதான் உறுமி.
உண்மையான வராலாற்று சம்பவங்களை மையப்படுத்தி இரண்டு காலகட்டங்களில்  நகரும் திரைக்கதையை அருமையாக இணைத்திருக்கிறார் சந்தோஷ்சிவன். இன்றைய காலத்து இளைஞர்கள் கிருஷணதாஸ்(பிருத்விராஜ்) தார்சன்(பிரபுதேவா) கிருஸ்ணதாஸ் அவனுக்கு சொந்தமான பாரம்பரிய நிலம் ஒன்றை வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்க முயலும் போது அங்கு வசிக்கும் மக்கள் கூட்ட தலைவன் கிருஸ்ணதாசிற்கு அவனது  பூர்வீகமான கேலுநாயக்கரின் கதையை சொல்வதாக படம் செல்கிறது.
கேலுவாக பிருத்விராஜ் வைவாலியாக பிரபுதேவா அரக்கல் ஆயிசாவாக ஜெனிலியா சிரக்கல் கொத்துவாலாக ஆர்யா என பல தெரிந்த முகங்கள் என்பதால் படத்தில் ஒரு அன்னிய தன்மை இல்லை.
அரக்கல் ஆயிஷா1 அரக்கல் ஆயிஷா2
படத்தில் அரக்கல் ஆயிஷா வாக வரும் ஜெனிலியா வின் அறிமுகக்காட்சியே அதிர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும் இவ்வளவு காலமும் வெகுளித்தனமான பாத்திரங்களில் எப்போதும் சிரித்தபடி  பார்த்த ஒரு பெண்ணை கம்பீரமாக அரேபிய குதிரைமேல் குதிரைவீரர்கள் சூழ எதிர்பார்க்கவில்லை. அநாயசமாக வாளை சுழற்றுவதும் கழுத்தை அறுப்பதும் என அதகளம் பண்ணி இருக்கிறார். அவர் தோன்றும் முதலாவது சண்டை காட்சியில் அதிசயிக்க வைக்கிறார் மொத்தத்தில் யாரும் கனவுகண்டிராத ஜெனிலியா!! இந்த படம் பார்ப்பவர்களுக்கு இனி நிச்சயமாக கனவில் வரமாட்டார்.
அரக்கல் ஆயிஷா3 அரக்கல் ஆயிஷா4
கேலுவுக்கும் ஆயிஷாவுக்கும் இடையேயான மெல்லிய காதலை மிகவும் சாமர்த்தியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சந்தோஷ்சிவன் கேலுவின் பார்வையில் மட்டும் இருக்கும் அந்த மெல்லிய காதல் அவனது பழிவாங்கும் வெறியை மிஞ்சி விடவில்லை.  ஆனால் வைவாலியின் காதல் மனதுடனும் படத்துடனும் ஒட்டவில்லை படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீண்டு போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
பிருத்விராஜும் பிரபு தேவாவும் ஏனையவர்களும் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள் குறிப்பாக சண்டைகாட்சிகளில் மிரட்டுகிறார்கள். இசையமைப்பாளர் தீபக் தேவ் பின்னண இசையிலும் இரண்டு பாடல்களிலும் ரசிக்கவைத்திருக்கிறார். குறிப்பாக நீ ஆரோ.. பாடல் ஜேசுதாசின் குரலில் மனதை வருடும் ரகம்.
ஆனாலும் படம் முழுக்க ஒரே ஒருவர்தான் தெரிகிறார் சந்தோஷ்சிவன்.
சந்தோஷ்சிவனுக்கு பிடித்த நீர்குமிழி
வழமையாகவே அவர்படங்களில் ஈரம் செறிந்த பச்சை வண்ணம் இருக்கும் தண்ணீரை மிக அழகாக காட்டி இருப்பார் ஒவ்வொரு படத்திலும் குளோசப்பில் ஒரு நீர்க்குமிழி இருக்கும். படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் கதிரையுடன் கட்டி போடும் ரகம். குறிப்பாக அருவி ஒன்றின் ஒருபக்கம் கேலு மறுபக்கம் ஆயிஷா இடையில் தண்ணீர் வார்த்தைகள் இல்லை உணர்வுகளால் வடிக்கபட்டிருக்கும் அந்த காட்சி மிக அருமை. ஆனால் பாடல் காட்சிகளுக்கு அவசியமில்லாத படத்தில் 5 பாடல்கள் இடைச்செருகல்களாக வைத்திருப்பதும் படம் நீண்டு போனதற்கு இன்னுமொரு காரணம். இருந்தும் சலனம் சலனம் மற்றும் நீ ஆரோ இரண்டு பாடல்களும் அற்புதமாக வித்தியாசமான நடன அமைப்போடு காடசிபடுத்தப்பட்டிருக்கின்றன.
u1 u2
சண்டை காட்சிகள் அவற்றுக்கே உரிய பாணியில் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார் கேலுவின் பழிவாங்கும் வெறி படம் முழுவதும் இடைவெளியில்லாமல் வந்திருக்கிறது. மொத்தத்தில் சந்தோஷ்சிவன் படம் ஒன்று பார்த்த திருப்தி சாம்ராட் அசோகா விற்கு பிறகு கிடைத்திருக்கிறது இடையில் வந்த படங்கள் பார்க்க கிடைக்கவில்லை.

ஒரு வரியில் சொல்லப்போனால்
மண்ணா..? பணமா..? என்கிற மனித மனப்போராட்டத்திற்கு   விடையாக ஒரு படம் - உறுமி
இறுதியாக எனக்கு படத்திலிருந்து மிகவும் பிடித்த காட்சி…
u9

Thursday, August 18, 2011

வன்னேரி - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒரு உதாரண கிராமம்!!!

கடந்து போன கால் வாசி வாழ்க்கையில் இரண்டு தடவைகள் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறேன். கிராமம் என்றவுடன் இள நீல நிற வானத்தின் பின்னணியில் மென்பச்சை நிற வயல்களையும் இடையிடையே வளைந்து ஓடும் வாய்க்கால்களையும் நீங்கள் கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல, அந்தளவுக்கு நீர் வளம் இங்கு இல்லை. இலங்கையின் அதிகபட்ச வெப்பநிலை    நிலவும்  உலர்  வலய  காடுகளின்  இடையில்,   கிளிநொச்சியிலிருந்து 19கி.மீ  தூரதிலிருக்கும் அம்பலப்பெருமாள் சந்தியிருந்து, ஜெயபுரம் செல்லும் வீதியில் ஏறத்தாள 10கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய பண்டைய கிராமம் தான் வன்னேரி.
போகும் வழி நீண்டு செல்லும் நல்ல அகலமான கிரவல் தெரு இடையிடையே தெரியும் சல்லிகற்கள் முன்னொருகாலத்தில்அது தார் வீதி என்பதை சொல்லுகின்றன. அந்த வீதியால் ஒருமுறை சென்று வருபவர்களுக்கு உடம்பில் ஏதோ ஒரு பாகத்திலாவது வலி எடுக்காவிடில் அவர்களை வெறும் சடம் என்றுதான் சொல்ல வேண்டும்.“உலகத்தில் சில இடங்களில் அத்தியாவசியமானது..” என விளம்பரப்படுத்த படுகின்ற Toyato, Land cruiser ஓடுவதற்கே பொருத்தமான வீதி என்று சொல்லலாம்.  அந்த வெள்ளை நிற prado கள் கடந்து போன தேர்தலின் போது ஓடி திரிந்ததில் வீதி மேலும் பழுதானதுதான் மிச்சம்!!!
கிரவல் தெரு, புழதி படிந்த கோரைப்புற்தரை, இருள் பச்சை நிற மரங்கள், பனேயோலை வேலிகள்,  பெரும்பான்மையாக குடிசை வீடுகள், இடையிடையே அகொன்றும் உங்கொன்றுமாக இப்போதுதான் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கல் வீடுகள், பெயருக்கு ஒரு பள்ளிகூடம், ஊருக்கு ஒரே ஒரு கந்தன் கோவில், சற்றே தள்ளி ஒரு தேவாலயம், சந்தியில் ஒரு சென்ரிபொயின்ற்… ……
அத்தனை சடப்பொருட்களையும்  ஆட்கொண்டிருக்கும் புழுதி அனைத்தும்  ஒரே நிறம் மண்ணிறம்!!!!!! இந்த வண்ணம் எங்கள் மனங்களில் பெரிதாக படிவதாக இல்லை!!!
தொலை பேசி அலை வரிசைகள் கூட தொட்டுவிட்ட ஊரில்  செல்லிடப்பேசிகள் பாவிக்க அடிப்படை வசதி மினசாரம் இல்லை.. பெப்சி கோலா கூட கிடைக்கும்,ஆனால்  கொதிக்கும்!!! தேனீர் பாரவாயில்லை…. இருக்கவே இருக்கிறது  ஒரு குட்டி பெட்டி கடை கொஞ்சம் வடை வாய்ப்பனுடன்…!
இருந்தும் இந்த ஊரில், குழந்தைகள் அழும்போது மட்டும்தான்  குலைகிற அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கிறது.இசைக்கு இங்கு தேவை இல்லைஇரைச்சல்கள் குறைவு அத்தனையும் இயற்கையின் ஒலிகள். மக்கள் மனங்களில் இல்லாத அமைதி ஊரில் இருக்கிறது.
இத்தனைக்கும், வீதியின் இருமருங்கிலும் காடுகளில் பெரும்பான்மையாக நிமிர்ந்து நிற்கும் பாலை மரங்களே அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் மனஉறுதிக்கு அடையாளம். இந்த மண்ணோடு ஒன்றிப்போன  மனங்களின்  உறுதியில்தான்  அவர்களின்   வாழ்க்கை   நடக்கிறது. கவனிப்பாரற்ற இவர்களை கடந்து எல்லாமே போகும் தேர்தல் ஒன்றை தவிர, இந்த பிய்ந்து போன வேலிகளும் அப்போதுதான் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேடப்படும். அந்த வெள்ளை பிராடோகளில் வருபவர்களுக்கும் நாரி நோகும் என்று அப்போது இந்த கிரவல் தெருவுக்கும் ஒரு பட்டை தார் ஊற்றப்படும்.  தெருக்களில் எல்லாம் வசந்தங்கள் பல வீசும்…அறிவித்தல் பலகைகளில் மட்டும்!!! இப்படியே எல்லாமே கடந்து போகும் ஆட்சிகள் மாறும் ஆனால் அரசியல் மாறாது.
வன்னேரி  – இலங்கை ஜனநாயக சோசலிச  குடியரசின் ஒரு உதாரண கிராமம்!!! இப்படி எங்கள் நாட்டில் எத்தனை கிராமங்களோ?

Monday, August 15, 2011

Smoking-இலக்கு வைக்கப்படும் பெண்கள்

Girl-smoking
உலக வரை படத்தில் அமெரிக்காவுக்கு அடியில் இருக்கின்ற தீவுக்கூட்டங்களில் புரட்சியின் அடையாளமாக கொண்டாடப்படுகின்ற நாடு கியூபா. அமெரிக்காவை கண்டுபிடித்த கொலம்பஸ் தன்னுடைய குழுவினரை 15ஆம் நூற்றாண்டுகளின் ஆரம்பத்தில் இன்று கியூபா என்று அழைக்கப்படுகின்ற தீவுக்கு அனுப்பினார்.
இந்தப் பயணம் கியூபா என்கிற நாட்டை கண்டுபிடிப்பதுடன் நின்றுவிடவில்லை. உலகில் வருடாந்தம் 60 இலட்சம் பேரை பலிவாங்கும் புகைத்தல் என்கிற தீய பழக்கத்தையும் அறிமுகப்படுத்தி வைத்தது. அந்த பயணம் அவர்களுக்கு மிகவும் உல்லாசமாக இருந்திருக்க வேண்டும்.
அவர்கள் ஓரு காய்ந்த இலையினுள் சில மூலிகைகளை போட்டு சுற்றி அதன் ஒரு முனையில் நெருப்பு பற்றவைத்து மறுமுனையினூடு அந்த புகையை ஆழமாக தமது சுவாசத்தினூடு உறிஞ்சினார்கள். ..
அவர்களுக்கு அது போதையை அளித்தது..
அவ்வாறு செய்யும்போது அவர்கள் களைப்பை உணரவில்லை…
அவர்கள் அதை தொடர்ந்து பழக்கபடுத்திகொண்டார்கள் அவர்களால் அந்த பழக்கத்தை நிறுத்தவும் முடியவில்லை…
அதற்கு அவர்கள் அடிமையாகியிருந்தார்கள்…. அந்த மூலிகையை tabacos என்று அழைத்தார்கள்.
பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான அந்த மூலிகை அங்கிருந்து வணிக மார்க்கங்களினூடு ஏனைய நாடுகளுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டது. புகையிலை என்று நாம் அழைக்கின்ற அந்த மூலிகை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் யாழ்ப்பாணத்தில் குறிப்பாக தீவுப்பகுதியில் பிரதான பணப்பயிராக பயிர் செய்கை செய்யப்பட்டு வருகிறது.
[ஒருகாலத்தில் புகையிலை என்றால் யாழ்ப்பாணம் என்ற ஒரு நிலை இருந்தது இன்று கூட தீவுப்பகுதி புகையிலைக்கு ஒரு மவுசு இருக்கிறது.]
அன்று ஆரம்பித்த இந்த பழக்கம் இன்று பலவேறு மாற்றங்களுக்குடபட்டு உலகம் முழுவதும் 200மில்லியன் பேரை ஆட்கொண்டிருக்கிறது இதில் 1பில்லியன் பெணகளும் அடக்கம்.
உலகம் முழுவதும் பரவலாக பலராலும்  புகைப்புடிக்கப்பட்டு வந்த இந்த புகையிலைக்கும் நுரையீரல் புற்றுநோய்க்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக 1920 ஆம் ஆண்டளவில் ஜேர்மனிய விஞ்ஞானிகளால் கூறப்படும் வரைக்கும் எந்த வித பிரச்சனையும் வரவில்லை. அன்று  ஆரம்பித்த புகையிலைக்கும் மனிதனுக்குமான பிரச்சனை. இன்று, நுரையீரல் புற்றுநோய் சுவாசநோய்கள் மாரடைப்பு இருதயநோய்கள் உயர்குருதி அமுக்கம் பாரிசவாதம் போன்ற வியாதிகள் காரணமாக    மனிதனால் தவிர்க்க கூடிய  வீணான பெருமளவான இறப்புகளுக்கு ஒரேயொரு  பிரதான காரணி  புகைப்பிடித்தல் என   உலக சுகாதார நிறுவனம் அலறிக்கொண்டிருக்கிறது.
காரணம் புகையிலை புகைப்பிடித்தல் காரணமாக உலகம் முழுவதும் ஒரு வருடத்திற்கு 60லட்சம் பேர் இறந்து போகிறார்கள்.
இதில் 15லட்சம் பேர் பெண்கள்.
இந்த எண்ணிக்கையில் பொது இடங்களில் மற்றவர்கள் ஊதித்தள்ளுவதை சுவாசிப்பதன் காரணமாக இறந்து போகும்  6லட்சம் அப்பாவிகளும் அடக்கம்.
இந்த பழக்கத்திற்கு அடிமையானவர்களில் அரைவாசிப்பேருக்கு மேல் அதன் காரணமாகவே உயிரை விடுகிறார்கள்.
Poor lungs
ஆனால் புகையிலை நிறுவனங்களின் கவலை வேறு விதமாக இருக்கிறது இவ்வாறு இறந்து போயும் பல்வேறு நோய்கள் காரணமாகவும் தங்கள் சந்தையை விட்டு விலகும் வாடிக்கையாளர்களை மீள் நிரப்பி தங்கள் அடிமைளை அதிகரிப்பதற்காக புகையிலை கம்பனிகள்  பெண்களை குறிவைத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. 

எமது நாட்டு பெண்களிடம் ஒப்பீட்டளவில் புகைப்பிடிக்கும் பழக்கம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது அதற்கு சொல்லப்படுகின்ற காரணம் பெண்களுக்கான உரிமைகள்  அதிகமாக இருக்கும் நாடுகளில்தான் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது அதிகமான பெண்கள்  புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். இதனை உலக சுகாதார மையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மேலும் உறுதிபடுத்தி இருக்கின்றன. புரட்சி கவிஞன் பாரதி கனவுகண்ட பெண்ணுரிமை என்பது வெறும் ஆண்களை போல உடைகள் அணிவதும் புகைப்பிடிப்பதும் மதுவருந்துவதும் தான் என இக்கால  பெண்கள் சிலரால் தவறான வடிவம் கொடுக்கப்படுவதுதான் வேதனையான விடயம்.

இது தவிர பெண்களிடம் பொதுவாக காணப்படும் தன்னம்பிக்கை குறைபாடு மற்றும்  புகைப்பிடித்தல் உடல் நிறையை குறைத்து கவர்ச்சியான தோற்றத்தை வழங்குகிறது என்ற தவறான நம்பிக்கை போன்றனவும் பெண்கள் புகைப்பிடித்தலை நாடுவதற்கான காரணங்கள் என சொல்லப்படுகிறது.
image
இந்த மென்மையான உளவியலை மோப்பம் பிடித்துகொண்ட புகையிலை நிறுவனங்கள் பெண்களை குறிவைத்து பெருமெடுப்பில் விளம்பர வலைகளை வீசிவருகின்றன. அழகு கௌரவம் தனித்துவம் போன்ற கருத்துகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் ஏற்கனவே குறிப்பிட்டளவான வாடிக்கையாளர்களை பெற்று கொடுத்துள்ள நிலையில், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் அதிகாரங்கள் என்ற விடயத்தில்  இரண்டும் கெட்டான் நிலையிலிருக்கும்  இலங்கை இந்தியா போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாட்டு பெண்கள் எதிர்காலத்தில் இந்த மாயவலைக்குள் சிக்குவதற்கான ஆபத்தான நிலையிருக்கிறார்கள், ஏனெனில் இவர்கள்தான் இலக்குவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
புகையிலை நிறுவன்ங்கள் பெண்களை ஈர்ப்பதற்காக கையாண்டு வரும் இன்னுமொரு சந்தைபடுத்தல் யுக்திதான் அவர்கள் சந்தைப்படுத்தியிருக்கும் வீரியம் குறைந்தசிகரெட் [light cigerette] அல்லது குறைவான *தார் [low tar] கொண்டுள்ள சிகரெட். இது சாதாரண சிகரெட்டை விட பாதுகாப்பனதென்ற தவறான நம்பிக்கையில் பல பெண்கள் ஆண்களை விட அதிகமாக இந்த light cigerette களை புகைப்பிடிக்கிறார்கள். உண்மையில் இந்த வகை light cigerette களை புகைப்பிடிக்கும்போது தேவையான அளவு நிக்கொட்டினை உள்ளெடுப்பதற்காக அதிக ஆளமாகவும் அதிக தடவையும் புகைப்பிடிக்க விளைவதன்  காரணமாக உடலில் உள்ளெடுக்கப்படும் புகையில் எந்த வித வேறுபாடும் இருப்பதில்லை.
உலக உகாதார நிறுவனத்துடன் இணைந்து புகையிலை கம்பனிகளை கட்டுபடுத்துவதற்கான சட்டதிட்டங்களை வகுப்பதன் மூலமும் மக்கள் மத்தியில்  புகைத்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும் மக்கள் இந்த தீய பழக்கத்தை அண்டாது  பாதுகாக்கும் பாரிய பொறுப்பு ஆட்சியாளர்களின் கையிலேயே உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் செய்ற்திட்டத்திற்கு அமைவாக  உலகம் முழுவதும் இதுவரை 3.8பில்லியன் மக்கள்  புகையிலைக்கெதிரான முழுமையான கொள்கைகள் மூலம் பாதுகாக்க பட்டிருக்கிறார்கள். இதுவரை உலகின் 19 நாடுகளில் மட்டுமே சிகரெட் பெட்டிகள் WHO விதிகளுக்கமைவான படங்களுடன் கூடிய சுகாதார எச்சரிக்கைகளுடன் மக்களை சென்றடைகின்றன. இந்த வரிசையில் எங்கள் நாடு நிச்சயமாக கடைசியில்தான் இணையும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

தார்[tar] - புகையிலையை பகுதியாக எரிக்கும்போது உருவாகும் விளைபொருளே தார் tar என அழைக்கப்படுகிறது. இதுதான்  புகையிலை புகை கொண்டிருக்கும்  நுரையீரலை பழுதடைய செய்கின்ற நுரையீரல் புற்று நோயை ஏற்படுத்துகின்ற பிரதான காரணி. இதில் 19 வகையான புற்றுநோய் காரணிகள் (carcinogens) இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
[தெருவுக்கு போடுவதும் இவ்வாறுதான் அழைக்கபடுகிறது ஆனால் இரண்டும் ஒன்றல்ல]
நிக்கொட்டின் [Nicotin] - புகையிலையில் காணப்படும், மீண்டும் மீண்டும் புகைப்பிடிக்க தூண்டும் ஒருபதார்த்தம் (psychological dependence).
தொகுப்பு :-
wikipedia - History_of_smoking
WHO Health topics - Tobacco

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...