Thursday, August 18, 2011

வன்னேரி - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒரு உதாரண கிராமம்!!!

கடந்து போன கால் வாசி வாழ்க்கையில் இரண்டு தடவைகள் அந்த கிராமத்துக்கு சென்றிருக்கிறேன். கிராமம் என்றவுடன் இள நீல நிற வானத்தின் பின்னணியில் மென்பச்சை நிற வயல்களையும் இடையிடையே வளைந்து ஓடும் வாய்க்கால்களையும் நீங்கள் கனவு கண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல, அந்தளவுக்கு நீர் வளம் இங்கு இல்லை. இலங்கையின் அதிகபட்ச வெப்பநிலை    நிலவும்  உலர்  வலய  காடுகளின்  இடையில்,   கிளிநொச்சியிலிருந்து 19கி.மீ  தூரதிலிருக்கும் அம்பலப்பெருமாள் சந்தியிருந்து, ஜெயபுரம் செல்லும் வீதியில் ஏறத்தாள 10கி.மீ தொலைவில் உள்ள ஒரு சிறிய பண்டைய கிராமம் தான் வன்னேரி.
போகும் வழி நீண்டு செல்லும் நல்ல அகலமான கிரவல் தெரு இடையிடையே தெரியும் சல்லிகற்கள் முன்னொருகாலத்தில்அது தார் வீதி என்பதை சொல்லுகின்றன. அந்த வீதியால் ஒருமுறை சென்று வருபவர்களுக்கு உடம்பில் ஏதோ ஒரு பாகத்திலாவது வலி எடுக்காவிடில் அவர்களை வெறும் சடம் என்றுதான் சொல்ல வேண்டும்.“உலகத்தில் சில இடங்களில் அத்தியாவசியமானது..” என விளம்பரப்படுத்த படுகின்ற Toyato, Land cruiser ஓடுவதற்கே பொருத்தமான வீதி என்று சொல்லலாம்.  அந்த வெள்ளை நிற prado கள் கடந்து போன தேர்தலின் போது ஓடி திரிந்ததில் வீதி மேலும் பழுதானதுதான் மிச்சம்!!!
கிரவல் தெரு, புழதி படிந்த கோரைப்புற்தரை, இருள் பச்சை நிற மரங்கள், பனேயோலை வேலிகள்,  பெரும்பான்மையாக குடிசை வீடுகள், இடையிடையே அகொன்றும் உங்கொன்றுமாக இப்போதுதான் கட்டப்பட்டு கொண்டிருக்கும் கல் வீடுகள், பெயருக்கு ஒரு பள்ளிகூடம், ஊருக்கு ஒரே ஒரு கந்தன் கோவில், சற்றே தள்ளி ஒரு தேவாலயம், சந்தியில் ஒரு சென்ரிபொயின்ற்… ……
அத்தனை சடப்பொருட்களையும்  ஆட்கொண்டிருக்கும் புழுதி அனைத்தும்  ஒரே நிறம் மண்ணிறம்!!!!!! இந்த வண்ணம் எங்கள் மனங்களில் பெரிதாக படிவதாக இல்லை!!!
தொலை பேசி அலை வரிசைகள் கூட தொட்டுவிட்ட ஊரில்  செல்லிடப்பேசிகள் பாவிக்க அடிப்படை வசதி மினசாரம் இல்லை.. பெப்சி கோலா கூட கிடைக்கும்,ஆனால்  கொதிக்கும்!!! தேனீர் பாரவாயில்லை…. இருக்கவே இருக்கிறது  ஒரு குட்டி பெட்டி கடை கொஞ்சம் வடை வாய்ப்பனுடன்…!
இருந்தும் இந்த ஊரில், குழந்தைகள் அழும்போது மட்டும்தான்  குலைகிற அந்த அமைதி எனக்கு மிகவும் பிடிக்கிறது.இசைக்கு இங்கு தேவை இல்லைஇரைச்சல்கள் குறைவு அத்தனையும் இயற்கையின் ஒலிகள். மக்கள் மனங்களில் இல்லாத அமைதி ஊரில் இருக்கிறது.
இத்தனைக்கும், வீதியின் இருமருங்கிலும் காடுகளில் பெரும்பான்மையாக நிமிர்ந்து நிற்கும் பாலை மரங்களே அந்த கிராமத்தில் வசிக்கும் மக்களின் மனஉறுதிக்கு அடையாளம். இந்த மண்ணோடு ஒன்றிப்போன  மனங்களின்  உறுதியில்தான்  அவர்களின்   வாழ்க்கை   நடக்கிறது. கவனிப்பாரற்ற இவர்களை கடந்து எல்லாமே போகும் தேர்தல் ஒன்றை தவிர, இந்த பிய்ந்து போன வேலிகளும் அப்போதுதான் சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு தேடப்படும். அந்த வெள்ளை பிராடோகளில் வருபவர்களுக்கும் நாரி நோகும் என்று அப்போது இந்த கிரவல் தெருவுக்கும் ஒரு பட்டை தார் ஊற்றப்படும்.  தெருக்களில் எல்லாம் வசந்தங்கள் பல வீசும்…அறிவித்தல் பலகைகளில் மட்டும்!!! இப்படியே எல்லாமே கடந்து போகும் ஆட்சிகள் மாறும் ஆனால் அரசியல் மாறாது.
வன்னேரி  – இலங்கை ஜனநாயக சோசலிச  குடியரசின் ஒரு உதாரண கிராமம்!!! இப்படி எங்கள் நாட்டில் எத்தனை கிராமங்களோ?

3 comments:

அகல்விளக்கு said...

:-(

வடலியூரான் said...

//அந்த வெள்ளை பிராடோகளில் வருபவர்களுக்கும் நாரி நோகும் என்று அப்போது இந்த கிரவல் தெருவுக்கும் ஒரு பட்டை தார் ஊற்றப்படும். தெருக்களில் எல்லாம் வசந்தங்கள் பல வீசும்…அறிவித்தல் பலகைகளில் மட்டும்!!! இப்படியே எல்லாமே கடந்து போகும் ஆட்சிகள் மாறும் ஆனால் அரசியல் மாறாது.

குதூகலக்குருவி said...

இந்த ஊரிலும் சில "பாதுகாப்பு படை" அரண்களுக்கு அருகாமையில் Speed Breakers போட்டு இருக்கிறார்கள்.. பாதை முழுதும் குன்றும் குழியும்.. அதில் மணிக்கு இருபது கிலோமீட்டர் வேகத்தில் போனாலே அது அதிசயம். எதற்கு வேகத்தடை? பாதுகாப்பு படை அரணின் அடையாளமோ?

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...