Thursday, August 25, 2011

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந்ததிகளை சென்று சேர்கின்ற கொடுமை காலம் காலமாக நிகழ்ந்த வண்ணமேயே இருக்கிறது. இது தவிர்க்க முடியாத ஒன்றும் கூட,  தன் தாய் தேசத்திற்காக  உயிர் நீத்த பல வீர மறவர்களின் கதைகள் மறைக்கப்பட்டு கொடிய  ஆக்கிரமிப்பாளர்களே கதாநாயகர்களாக கதைகள் பின்னப்படுகின்றன. சில வேளைகளில் அந்த தியாகிகள்  துரோகிகளாக சித்தரிக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு.
இப்படியான தோற்று போன ஒரு தேசத்தின் உண்மையான சரித்திரத்தை கதைகள் காவியங்கள் வாயிலாக எதிர்கால சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய  அந்த தார்மீக கடமையை  உறுமி என்ற திரைப்படத்தின் மூலம் நிறைவேற்றி இருக்கிறார் சந்தோஷ்சிவன்.
முதன் முதலாக பாரத தேசத்தை  கடல் மார்க்கமாக வந்தடைந்து மேலைத்தேய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தியவராக புகழப்படுவர் போர்த்துக்கேய வர்த்தக கடலோடி வாஸ்கொடகாமா. ஆனால் வாஸ்கொடகாமா புகழப்படும் அளவுக்கு, போர்த்துக்கேய ஆக்கிரமிப்புக்கு எதிராக முதன் முதலில் கிளர்ந்தெழுந்து வாஸ்கொடகாமாவை கொன்று பழிதீர்க்க போரிட்ட கேலுநாயக்கர் வைவாலி என்கிற இரு இளைஞர்களின் கதை வரலாறுகளில் இல்லை.
இந்த கதைதான், சந்தோஸ்சிவனின் உறுமி-பதினாறாம் நூற்றாண்டு போர்வாள்.
உறுமி-சுருளிவாள் [உறுமி என்பது தமிழில் சுருளிவாள் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் பிரபலமாக விளங்கிய ஒரு போராயுதம். இந்த ஆயுதம் ஒரு வீரனுக்கு இறுதி கலையாகவே பயிற்றுவிக்கபட்டதாக சொல்லப்படுகிறது. சாம்ராட் அசோகா படத்தில் சக்கரவர்த்தி அசோகனை  மாபெரும் வீரனாக சித்தரிப்பதற்காக சந்தோஷ்சிவன் இந்த உறுமியை பயன் படுத்தி இருந்தார்.]
 
போர்த்துக்கல்லில் இருந்து ஆபிரிக்கா வழியாக கேரளாவின் கலிக்கட்டை அடையும் வாஸ்கொடகமாவின் முதலாவது இந்தியபயணத்தின் விவரணையுடன் ஆரம்பிக்கிறது திரைப்படம். பெண்களுக்கு பதில் கேரள மிளகிடம் மனதை பறி கொடுத்த காமா அதற்கு மூன்று மடங்கு விலை கொடுக்க முன் வந்த போதும் மன்னர் சாமுத்ரி வியாபாரத்தில் எந்த வித ஈடுபாடும் காட்டவில்லை.வெறும் கையுடன் போர்த்துக்கல் காமாவை மிளகு ஆசை விடவில்லை.
மீண்டும் 15 ம் நூற்றாண்டுகளில் காமா வின் இரண்டாவது மற்றும் மூன்றாவது இந்திய பயணங்களுக்கு இடையில் விரிகிறது கதை. கி.பி 1502, இந்த முறை காமா வெறுமனே மிளகு வாங்க வரவில்லை. 15 பெரிய போர்கப்பல்களுடன் இந்தியாவில் ஒரு வணிக மையத்தை உருவாக்கும் திட்டத்துடனேயே வந்திருந்தான். துரதிஸ்ட வசமாக காமாவின் வழியில் மெக்காவுக்கு சென்று விட்டு வந்திருந்த முஸ்லிம் யாத்திரிகர்களின் கப்பல் ஒன்று அகப்பட அதை சிறைப்படிக்கிறான் காமா. கப்பல் பயணிகள் மற்றும் கப்பல் உரிமையாளர் எவரினது பேரத்திற்கும் காமா இணங்கவில்லை. கப்பல் பயணிகளை மீடக கேரளாவில் இருந்து  பேச்சுவார்தைக்கு ஒரு முதிய பிராமணனும் 8 வயதே நிரம்பிய சிரக்கல் கொத்துவாள் மகன் கேலு நாயக்கரும் காமாவின் கப்பலுக்கு அனுப்பபடுகின்றனர்.[நிராயுதபாணியாக குழந்தையுடன் செல்லும் பிராமணரை போர்த்துக்கேயர் எதுவும் செய்யமாட்டார்கள் என்பது நம்பிக்கை.]
எந்த விதமான சுமுக பேச்சுவார்த்தைக்கும் உடன்படாத காமா, அவனது சொல்வழி கேக்காத நாயின் காதை அறுத்து பிராமணனின் முகத்தில் வீசுவதுடன் பிராமணன் காதையும் அறுத்து துன்புறுத்தி, கேரளா மீது பீரங்கி தாக்குதல் நடத்த உத்தரவிடுகிறான்!! முஸ்லிம் யாத்திரிகர்கள் கப்பலுடன் உயிருடன் கொளுத்தப்படுகிறார்கள் . ஆத்திரமடைந்த சிரக்கல் கொத்துவால் தன்னந்தனியாக காமாவின் கப்பலுக்கு சென்று சண்டையிட்டு உயிரை விட இடையில் அதிஸ்டவசமாக கடலில் குதித்து உயிர் தப்புகிறான் சிறுவன் கேலு. கரையெங்கும் கப்பலுடன் எரியுண்டு இறந்து போன பயணிகளின் பிணங்களிலிருந்த நகைகளை பொறுக்குயபடி தனியே திரும்பும் கேலுவுக்கு அடைக்கலம் கொடுத்து தன்னோடு கூடவே வைத்திருக்கிறான் வைவாலி. இருவரும் சேர்ந்தே வளர்கின்றனர். சிறுவன் கேலு தான் பிணங்களிலிருந்து  பொறுக்கிய அந்த நகைகளை கொண்டே  உறுமி வாள் செய்கிறான் அவனுடைய நோக்கம் ஒன்றேதான்!!! வாஸுகொட காமாவை கொல்ல வேண்டும்.  பலவிதமான போர்க்கலைகளும் பயின்று சொந்த ஊரான சிரக்கல் திரும்பும் கேலுவின் பழிவாங்கும் பயணத்தில் முஸ்லிம் வீராங்கனை அரக்கல் ஆயிஷாவும் சேர்ந்து கொள்கிறாள். ஒரு கட்டத்தில் வாஷ்கொடகாமா வின் மகன் இஸ்ராடியோ காமாவை சிறைப்பிடித்து சிரக்கல் கொண்டுவரும் வீரதீரம் மிக்க  கேலுவின் பழிவாங்கும் பயணம் என்ன ஆனது…? எனபதுதான் உறுமி.
உண்மையான வராலாற்று சம்பவங்களை மையப்படுத்தி இரண்டு காலகட்டங்களில்  நகரும் திரைக்கதையை அருமையாக இணைத்திருக்கிறார் சந்தோஷ்சிவன். இன்றைய காலத்து இளைஞர்கள் கிருஷணதாஸ்(பிருத்விராஜ்) தார்சன்(பிரபுதேவா) கிருஸ்ணதாஸ் அவனுக்கு சொந்தமான பாரம்பரிய நிலம் ஒன்றை வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்க முயலும் போது அங்கு வசிக்கும் மக்கள் கூட்ட தலைவன் கிருஸ்ணதாசிற்கு அவனது  பூர்வீகமான கேலுநாயக்கரின் கதையை சொல்வதாக படம் செல்கிறது.
கேலுவாக பிருத்விராஜ் வைவாலியாக பிரபுதேவா அரக்கல் ஆயிசாவாக ஜெனிலியா சிரக்கல் கொத்துவாலாக ஆர்யா என பல தெரிந்த முகங்கள் என்பதால் படத்தில் ஒரு அன்னிய தன்மை இல்லை.
அரக்கல் ஆயிஷா1 அரக்கல் ஆயிஷா2
படத்தில் அரக்கல் ஆயிஷா வாக வரும் ஜெனிலியா வின் அறிமுகக்காட்சியே அதிர்ச்சி என்றுதான் சொல்லவேண்டும் இவ்வளவு காலமும் வெகுளித்தனமான பாத்திரங்களில் எப்போதும் சிரித்தபடி  பார்த்த ஒரு பெண்ணை கம்பீரமாக அரேபிய குதிரைமேல் குதிரைவீரர்கள் சூழ எதிர்பார்க்கவில்லை. அநாயசமாக வாளை சுழற்றுவதும் கழுத்தை அறுப்பதும் என அதகளம் பண்ணி இருக்கிறார். அவர் தோன்றும் முதலாவது சண்டை காட்சியில் அதிசயிக்க வைக்கிறார் மொத்தத்தில் யாரும் கனவுகண்டிராத ஜெனிலியா!! இந்த படம் பார்ப்பவர்களுக்கு இனி நிச்சயமாக கனவில் வரமாட்டார்.
அரக்கல் ஆயிஷா3 அரக்கல் ஆயிஷா4
கேலுவுக்கும் ஆயிஷாவுக்கும் இடையேயான மெல்லிய காதலை மிகவும் சாமர்த்தியமாக படத்தில் கொண்டு வந்திருக்கிறார் சந்தோஷ்சிவன் கேலுவின் பார்வையில் மட்டும் இருக்கும் அந்த மெல்லிய காதல் அவனது பழிவாங்கும் வெறியை மிஞ்சி விடவில்லை.  ஆனால் வைவாலியின் காதல் மனதுடனும் படத்துடனும் ஒட்டவில்லை படம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நீண்டு போனதற்கு இதுவும் ஒரு காரணம்.
பிருத்விராஜும் பிரபு தேவாவும் ஏனையவர்களும் கொடுத்த வேலையை ஒழுங்காக செய்திருக்கிறார்கள் குறிப்பாக சண்டைகாட்சிகளில் மிரட்டுகிறார்கள். இசையமைப்பாளர் தீபக் தேவ் பின்னண இசையிலும் இரண்டு பாடல்களிலும் ரசிக்கவைத்திருக்கிறார். குறிப்பாக நீ ஆரோ.. பாடல் ஜேசுதாசின் குரலில் மனதை வருடும் ரகம்.
ஆனாலும் படம் முழுக்க ஒரே ஒருவர்தான் தெரிகிறார் சந்தோஷ்சிவன்.
சந்தோஷ்சிவனுக்கு பிடித்த நீர்குமிழி
வழமையாகவே அவர்படங்களில் ஈரம் செறிந்த பச்சை வண்ணம் இருக்கும் தண்ணீரை மிக அழகாக காட்டி இருப்பார் ஒவ்வொரு படத்திலும் குளோசப்பில் ஒரு நீர்க்குமிழி இருக்கும். படம் முழுவதும் ஒவ்வொரு காட்சியும் கதிரையுடன் கட்டி போடும் ரகம். குறிப்பாக அருவி ஒன்றின் ஒருபக்கம் கேலு மறுபக்கம் ஆயிஷா இடையில் தண்ணீர் வார்த்தைகள் இல்லை உணர்வுகளால் வடிக்கபட்டிருக்கும் அந்த காட்சி மிக அருமை. ஆனால் பாடல் காட்சிகளுக்கு அவசியமில்லாத படத்தில் 5 பாடல்கள் இடைச்செருகல்களாக வைத்திருப்பதும் படம் நீண்டு போனதற்கு இன்னுமொரு காரணம். இருந்தும் சலனம் சலனம் மற்றும் நீ ஆரோ இரண்டு பாடல்களும் அற்புதமாக வித்தியாசமான நடன அமைப்போடு காடசிபடுத்தப்பட்டிருக்கின்றன.
u1 u2
சண்டை காட்சிகள் அவற்றுக்கே உரிய பாணியில் தத்ரூபமாக படம் பிடித்திருக்கிறார் கேலுவின் பழிவாங்கும் வெறி படம் முழுவதும் இடைவெளியில்லாமல் வந்திருக்கிறது. மொத்தத்தில் சந்தோஷ்சிவன் படம் ஒன்று பார்த்த திருப்தி சாம்ராட் அசோகா விற்கு பிறகு கிடைத்திருக்கிறது இடையில் வந்த படங்கள் பார்க்க கிடைக்கவில்லை.

ஒரு வரியில் சொல்லப்போனால்
மண்ணா..? பணமா..? என்கிற மனித மனப்போராட்டத்திற்கு   விடையாக ஒரு படம் - உறுமி
இறுதியாக எனக்கு படத்திலிருந்து மிகவும் பிடித்த காட்சி…
u9

3 comments:

Unknown said...

NICE REVIEW BOSS!

நிகழ்வுகள் said...

உங்கள் விபரிப்புக்களை பார்த்தபின் படம் பார்க்க வேணும் என்ற ஆசை தொற்றிக்கொள்கிறது... .

வடலியூரான் said...

நல்லாயிருக்கின்றது வர்ணனை

உறுமி-ஒரு சந்தோஷ் சிவன் திரைப்படம்

ஒரு தேசம் அன்னிய ஆக்கிரமிப்புக்குட்படும் போது அதன் உண்மையான சரித்திரம் ஆக்கிரமிப்பாளர்களல் திரிவுபடுத்தப்பட்டே வரலாறு என்ற பெயரில் அதன் சந...